அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்கள் சாய்பல்லவிக்கு வாழ்த்து தெரிவிக்க வேறு ஒரு நபருக்கு கால் செய்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதாக அந்த நபர் தெரிவித்திருக்கிறார்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான படம்தான் அமரன். சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி ஆகியோர் நடிப்பில் கடந்த 31ம் தேதி வெளியான இப்படத்தை கமல் தயாரித்திருக்கிறார். இந்தப் படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த ஒவ்வொருவருமே அழுகாமல் வெளியே வருவதில்லை. அந்தளவிற்கு உணர்வுப்பூர்வமான ஒரு படம் அமரன்.
ஆனால், இப்படத்திற்கும் ஒரு பிரச்னை வந்திருக்கிறது. அதாவது முகுந்தின் ஜாதி பெயரை குறிப்பிடாதது குறித்தும் முஸ்லிம்கள் குறித்து காட்டியதும் பிரிவினைவாதத்தைத் தூண்டுவதாக எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஆனால், தமிழக மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மைக் கதையில் எப்படி மாற்றுவது, நடந்ததைதானே காண்பிக்க முடியும் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இப்படியான சூழலில் சாய் பல்லவி என நினைத்து வேறு ஒரு நபருக்கு தொடர்ந்து ரசிகர்கள் கால் செய்து தொந்தரவு செய்து வருகின்றனர். முன்பெல்லாம் சிறுவயதில் படத்தில் ஒரு போன் நம்பர் இருந்தால், அதற்கு போன் செய்து யார் எடுக்கிறார்கள் என்று சோதித்து பார்ப்போம். ஆனால், அதெல்லாம் ரீச்சே ஆகாது. ஏனெனில் அவர்கள் தோன்றும் நம்பரை பயன்படுத்துவார்கள். இதனையடுத்து இப்போதெல்லாம் படங்களில் நான்கு நம்பர் மட்டும் சொல்லிவிட்டு, மற்றதை சொல்லும்போது வாய் அசைவதை மட்டும் காண்பித்து சமாளிக்கிறார்கள். ஆனால், அமரன் படத்தில் முழுவதுமாக 10 நம்பரையும் காண்பித்திருப்பார்கள்.
ரசிகர்கள் அது சாய்பல்லவி என்று அந்த நம்பருக்கு கால் செய்து படத்தில் சிறப்பாக நடித்தது குறித்து வாழ்த்து தெரிவிக்கிறார்கள். ஆனால், எதிர்தரப்பில் இருப்பது சாய் பல்லவியும் அல்ல, அமரன் படத்தில் வரும் இந்துவும் அல்ல. ஒரு மாணவன்.
தனக்கு இதுபோல தொடர்ந்து கால் செய்து வாழ்த்து தெரிவிக்கிறார்கள். அது மிகவும் தொல்லையாக இருக்கிறது என்று அந்த மாணவன் தெரிவித்திருக்கிறார்.