எம்.ஜி.ஆர்.தேர்தல் சமயங்களில் பிரசாரம் நிச்சயம் இருக்கும். அவருக்கு கார் டிரைவர்கள் சிலர் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் ஹரிபாபு. இவர் உழைப்பின் மேன்மையைப் புரிந்து கொண்டு தேர்தல் சமயங்களில் விடிய விடிய எம். ஜி. ஆருடன் செல்வார். அதிகாலை ஐந்தரை மணி வரை கூட அவரது பிரசாரம் தொடரும். அவரது பிரசாரத்துக்கு ஈடு கொடுத்து உழைக்க வேண்டும். ஹரி பாபுவும் திறமையாக பணி செய்தார்.
அவரை அன்புடன் ஹரி என்று அழைப்பார். ஹரிக்கு திருமணம் நடந்தது மகிழ்ச்சியுடன் சென்ற ஹரியின் வாழ்க்கையில் வேதனைக் காற்று வீசியது. ஹரிக்கு அடிக்கடி வயிற்று வலி வந்தது பிறகு வயிற்றில் அறுவை சிகிச்சை நடந்தது. இனிமேல் டிரைவராக பணி புரிந்தால் உடலுக்குத் கேடு என்று மருத்துவர்கள் கூறினார்கள்.
எம். ஜி. ஆரின் அபிமானத்துக்குரியவர் என்று இருந்தவருக்கு டாக்டர் விதித்த நிபந்தனை கலங்கச் செய்தது. எம். ஜி. ஆருக்கு இந்த விஷயம் தெரிந்தது. ஹரிக்கான ஆபரேஷன் செலவை செய்யவே செய்தார். ஹரியும் குணமாகி டாக்டரின் நிபந்தனையை மீறி ராமாவரம் தோட்டத்திற்கு கார் ஓட்டச் சென்றார். டாக்டர் சொன்னதை நினைவு வைத்த எம்.ஜி. ஆர். 'திரும்பவும் கார் ஓட்டுகிறேன்' என்று சொன்ன ஹரியிடம் "உனக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படாதா? உனக்கு மனைவி குழந்தைகள் இருக்கிறார்கள்.
என்மீது இருக்கும் அன்பினால் வந்திருக்கிறாய். நீ டிரைவராக வேலை செய்ய வேண்டாம். இதுவரை சிறப்பாகச் செய்ததற்கு நன்றி. உனக்கு நான் மூன்று ஆட்டோ ரிக்ஷாக்கள் வாங்கிக் கொடுக்கிறேன். அவற்றை வாடகைக்கு விட்டு வருமானம் பார்க்கலாம். நீ எப்போது வேண்டுமானாலும் ராமாவரம் தோட்டத்துக்கு வரலாம்." என்றார். ஹரியும் மகிழ்ச்சியாக சென்றார். தன்னிடம் வேலை பார்த்தவருக்கு கஷ்டம் வந்த போது அவருடைய வசதியான வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்த அரிய வள்ளல் குணம் படைத்தவர் எம். ஜி. ஆர்.