
“அறிவாலும், ஆற்றலாலும் ஆகாத காரியம் ஒன்றுமில்லை. அறிவும், ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியிருக்கிறார்.
அறிவு என்றால் என்ன??
அறிவு என்பது ஒருவர் தான் கற்ற கல்வியையும் மற்றும் புரிந்து கொள்ளும் திறமையையும் குறிக்கிறது. அறிவு என்பது வெறும் புத்தகங்கள் படிப்பதன் மூலமாக வருவது அல்ல. அனுபவங்கள் மூலம் கற்றுக்கொள்வது, அல்லது ஒரு விஷயத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்துக் கொள்வதாகும். அனுபவத்தின் வயது ஏறும் போது அறிவும் அதிகமாக வளரும்.
ஆற்றல் என்றால் என்ன??
ஆற்றல் என்பது ஒருவர் செய்யும் செயல்களின் திறனைக் குறிக்கிறது. ஒருவருக்கு அறிவு இருந்தாலும், அதைச் செயல்படுத்தும் ஆற்றல் இல்லையென்றால், அதனால் எந்தப் பயனும் இல்லை. நம்மிடமிருக்கும் அறிவை நாம் திறந்தால் தான் இந்த ஆற்றலானது உண்டாகும். படித்து விட்டு அறிவை வளர்த்து கொண்டு பூட்டி வைத்தால் ஆற்றல் வராது.
அறிவும் ஆற்றலும் ஏன் ஒன்று சேர வேண்டும்?
இந்த அறிவும் ஆற்றலும் நமக்கு இரண்டு கண்களைப் போன்றது. வெறும் அறிவை மட்டும் வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய இயலாது. நம் அறிவை நாம் விரிவுபடுத்திக் கொண்டே இருக்கலாம். ஆனால் அதை திறம்பட செயல்படுத்த முடியவில்லை என்றால், அது ஆற்றலாக மாறாது.
ஒருவருக்கு மனதில் பல புதிய புதிய எண்ணங்கள் உண்டாகலாம். அதை வெளிபடுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருத்தல் மிக மிக அவசியம். நாம் நினைத்ததை வெளிபடுத்த நமக்கு உள்ள அறிவை வைத்து கொண்டு களத்தில் இறங்கினால் தான் முடியும். எனக்கு எல்லாம் தெரியும் என்று வாய்ப் பேச்சளவோடு நிறுத்தி கொள்ளக் கூடாது. சில பேர் இப்படித் தான் இருக்கிறார்கள். 'எனக்கு எல்லாம் தெரியும்' என்று சொல்லி கொண்டு திரிந்து கொண்டிருப்பார்கள்.
உதாரணத்திற்கு ஒரு விளக்கத்தை கூறுகிறேன்.
நம் வீட்டிலே ஒரு மின்சார விசிறியையோ அல்லது குளிர் சாதன பெட்டியையோ அல்லது எதாவது ஒரு பொருளை நாம் உபயோகப் படுத்தினால் தானே அதன் ஆற்றல் வெளிபடும். வேகமாக சுற்றுகிறதா மெதுவாக சுற்றுகிறதா? என்று தெரியும்.
பொருளை வாங்கி உபயோகபடுத்தாமல் வைத்திருந்தால் என்ன ஆகும்? நாளடைவில் மக்கி போய் ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் ஆகி விடும். அதைப் போலத் தான் நம்முடைய அறிவும் வீணாகி விடும். நாமும் எதற்கும் உபயோகமில்லாமல் வாழ்க்கையை கழிக்க வேண்டியதாக இருக்கும். நாம் பெற்ற அறிவை ஏதாவது ஒரு விதத்தில் செயல்படுத்தினால் தான் அறிவும் ஆற்றலும் இணைந்து நம்மை வாழ்வின் முன்னேற்றத்திற்கு எடுத்து செல்லும்.