விமர்சனம்: ஆடு ஜீவிதம் - ஆடு மேய்ப்பவனின் அவதிகளை பிரதிபலிக்கும் ஆழ்ந்த அனுபவம்!
ரேட்டிங்(3.5 / 5)
ஆடு, ஒட்டகங்கள் இவைகளுடன் சேர்ந்து பாலைவனத்தில் உள்ள ஒரு தொட்டியில் ப்ரித்வி ராஜ் தண்ணீர் குடிக்கும் முதல் காட்சியிலேயே நாம் பார்த்துகொண்டிருக்கும் ‘ஆடு ஜீவிதம் - தி கோட் லைப்’ திரைப்படம் ஒரு சராசரி படம் அல்ல என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. பிரிதிவிராஜ் நடிப்பில் ப்ளெஸ்ஸி இயக்கத்தில் வந்துள்ள இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மானும், ரசூல் பூக்குட்டியும் இணைந்து ஓர் அற்புத வடிவம் தந்துள்ளார்கள் .
வளைகுடா நாட்டில் ஓர் இந்தியர் சந்தித்த விஷயங்களை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட நாவலை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கி உள்ளார் ப்ளெஸ்ஸி.
கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் நஜீப் வளைகுடா நாடு ஒன்றிற்குச் சென்று கை நிறைய சம்பாதிக்க ஆசைப்படுகிறான். ஏஜென்ட் ஒருவரை அணுகி பணம் தந்து விசா பெற்று வளைகுடா நாட்டிற்குச் செல்கிறான். அங்கே ஒரு ஷேக் இவனையும், இவன் நண்பனையும் விசாவை பறித்துக்கொண்டு பல மைல் தள்ளியுள்ள ஒரு பாலைவனத்தில் ஆடு ஒட்டகங்கள் மேய்க்க விடுகிறார். நண்பனை வேறொரு இடத்திற்கு மாற்றிவிடுகிறார். பாலைவனத்தின் வெப்பத்திலும், பசியாலும் துடிக்கிறார் நஜீப். எதிர்த்து கேள்வி கேட்கும் நஜீப்பை அடித்து சித்ரவதை செய்கிறார் ஷேக். தப்பிக்க முயற்சி செய்யும்போது காலை ஒடித்துவிடுகிறார். ஒருவழியாக தன் நண்பனைச் சந்தித்து, ஒரு ஆப்பிரிக்கனுடன் சேர்ந்து பாலைவனம் கடந்து தார் சாலையை அடைந்து தப்பிக்க முயற்சி செய்கிறான் நஜீப். தாகமும் கடுமையான வெப்பமும் இவர்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறது. நண்பன் வழியில் இறந்து போகிறான். மற்ற இருவரும் தார் சாலையை அடைந்து தப்பித்தார்களா என்பதே மீதிகதை.
ஒரு நாவலைப் படமாக்கும்போது சினிமாவிற்கான சில அடிப்படை மாற்றங்களை செய்ய வேண்டும். இதை இயக்குநர் சரியாக கவனிக்கவில்லை என்றே சொல்லவேண்டும். 170 நிமிடத்திற்கு மேல் செல்லும் இந்த படத்தில் பல்வேறு காட்சிகள் பாலைவனமாக நிறைந்திருப்பது சற்று அயர்ச்சியை தருகிறது. சிறிது நேரத்தை குறைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. இருந்தாலும் படம் நமக்கு வலியை மனதில் ஏற்படுத்தி விடுகிறது.
உழைப்பு, கடுமையான உழைப்பு என்பதை தனது நடிப்பின் ஒவ்வொரு அசைவிலும் காட்டிவிடுகிறார் பிருதிவிராஜ் .பாலைவனத்தில் உடல் கறுத்து, நடக்க முடியாமல் நடக்கும் போதும், தப்பிக்கும்போது காட்டும் முனைப்பும் பிரிதிவிராஜின் நடிப்பு பிரமாதம்! இந்த ஆண்டு இவருக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது .ஜிம்மி ஜீஸ் லூயிஸ் என்ற ஹாலிவுட் நடிகர் ஒரு அற்புதமான தேர்வு . அமலா பால் சில காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கிறார் .
"பெரியோனே, ரஹ்மானே" என்ற ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் அமைந்த பாடல் மனதை வருடி செல்கிறது .ஒரு பக்கம் வளைகுடாவின் பாலைவன வெப்பம் ,மறுபுறம் கேரளாவின் குளிர்ச்சி இரண்டையும் ஒளிப்பதிவில் சரியாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சுனில். பாலைவனப் புயலை கண் முன் உணர செய்ததில் ரசல் பூக்குட்டியின் ஒலி அமைப்புக்கு பெரும் பங்கு உண்டு.
ஒரு காட்சியில் பாலைவனத்தில் பறவைகள் கூட்டமாக பறக்கின்றன. நஜீப் இதை வியப்பாக பார்க்கிறான். நாடு, விசா, எல்லைகள் எல்லாம் மனிதர்களுக்குத்தான். பறவைகளுக்கு இல்லை. இதுபோன்ற பறவையாக நான் இருந்திருக்க கூடாதா என்று நஜீப் உணர்வது போல இக்காட்சி இருக்கும். இப்படி பல சுவாரஸ்ய காட்சிகள் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் மிக அழகாக உருவகப்பட்டுள்ளன.
"அவனுக்கு என்னப்பா வெளிநாட்டில் வேலை கை நிறைய சம்பளம்" என்று நம்மில் பலர் சொல்வதை பார்க்கலாம். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் உழைப்போடு சேர்த்து உயிரையும் சில இடங்களில் பணயம் வைக்கிறார்கள் என்பதை இப்படம் சொல்கிறது. வளைகுடா நாடுகளில் வேலை செய்பவர்கள் நம் உறவினர்களாகவோ, நண்பர்களாவோ இருந்தால், நம் ஊருக்கு வரும்போது கம்ப்யூட்டர், டிவி இன்னும் பல பொருட்கள் வாங்கி வர வேண்டும் என எதிர்பார்ப்பதுண்டு. இப்படம் பார்த்தால் வளைகுடாவில் வேலை செய்பவர்கள் பத்திரமாக ஊர் வந்து சேர்ந்தால்போதும் என பிரார்த்தனை செய்யத்தான் தோன்றுகிறது.
குடும்ப வறுமையைப் போக்க வளைகுடா நாடுகளில் வெப்பத்திலும் குளிரிலும் உழைக்கும் பல இந்தியர்களுக்கு ‘ஆடு ஜீவிதம்’ சமர்ப்பணம்.