ஜவான் படத்திற்கு பிறகு அட்லி இயக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதும் உறுதியாகிவிட்டது.
இயக்குநர் அட்லீ சங்கரின் துணை இயக்குநராகப் பணியாற்றி ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பெரிய பெரிய நடிகை நடிகர்களை வைத்து எடுத்தார். இரண்டாவது படமே விஜய் வைத்து தெறி படம் இயக்கினார். இதுவும் பெரிய ஹிட் கொடுத்தது.
தொடர்ந்து விஜய் வைத்து மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கினார். இவரின் தெறி படம் தற்போது பேபி ஜான் என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதனை அட்லீதான் தயாரித்திருக்கிறார். இதற்கு முன்னர் இரண்டு தமிழ் படங்களை தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை அட்லி இயக்கப்போவதாக செய்திகள் வந்தன.
இப்படியான நிலையில், இன்று ஒரு அப்டேட் கசிந்துள்ளது. ஏற்கனவே அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளார் என்ற செய்திகள் கசிந்தன. அந்தப் படத்தின் முதற்கட்ட பணிகளும் ஆரம்பமானதாக சொல்லப்பட்டது. ஆனால், இதுவரை அதுகுறித்தான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இயக்குனர் அட்லி எக்ஸ் தள பக்கத்தில், அல்லி அர்ஜுனின் 22 படத்தையும், அட்லியின் 6-வது படத்தையும் குறிக்கும் வகையில் #AA22xA6 என்ற ஹஸ்டேக்குடன் ஒரு வீடியோ வெளியிட்டார்.
ஒரு பீரியடிக் கதையாக உருவாகவிருக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். இன்னும் சில நாட்களில் இதில் நடிக்கும் மற்ற நடிகை நடிகர்கள் குறித்தான அறிவிப்புகள் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
புஷ்பா 2 படத்திற்கு பிறகு உலகளவில் பிரபலமான அல்லு அர்ஜுன், அடுத்து அட்லியுடன் கைக்கோர்ப்பது இந்திய அளவில் ரசிர்களிடையே பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.