
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா ஏப்ரல் 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 12ஆம் தேதி வரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். விழா தொடங்குவதற்கு முதல் நாள் கிராம தேவதையான ஸ்ரீ கோலவிழி அம்மனுக்கு சிறப்பு வழிபாடும், பால்குடம் எடுப்பதும் நடைபெற்றது.
காலை, மாலை என இரண்டு வேளையும் ஈசன், அம்பாள், சிங்காரவேலர் விதவிதமான வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது. இதில் குறிப்பாக 'அதிகார நந்தி' வாகனத்தில் ஈசன் வீதி உலா வருவதை காண கண் கோடி வேண்டும். பிரம்மாண்டமான அதிகார நந்தியின் மீது அமர்ந்து காட்சி தரும் கபாலீஸ்வரரை காண ஏகப்பட்ட கூட்டம் தெருவெங்கும் அடைத்து நின்றது. இரவு 8 மணி வாக்கில் அலங்காரங்களுடன் வாகனங்களில் அமர்ந்து வீதி உலா புறப்பட்டு, நான்கு மாட வீதிகளையும் சுற்றி வந்து கோவிலுக்கு வர நெடுநேரம் பிடித்தது.
அதிகார நந்தி:
பங்குனிப் பெருவிழாவில் 3ஆம் நாள் காலை நடைபெறும் அதிகார நந்தி காட்சி வரலாற்று சிறப்புமிக்கது. ரிஷபத்தின் (காளை) முகமும், சிவனின் உருவமும் கொண்ட அதிகார நந்தி ஞானத்தின் தலைவனாக கருதப்படுகிறார்.108 ஆண்டுகளான வெள்ளியாலான அதிகார நந்தியில் ஈசன் வீதி உலா வருவதைக் காண கண் கோடி வேண்டும் என்று 'பாபநாசம் சிவன்' அவர்கள் அப்போதே பாடிவிட்டார். அகிலத்தையே காக்கும் ஈசனை சுமக்கும் அதிகாரம் பெற்றதால் இவர் 'அதிகார நந்தி' என அழைக்கப்படுகிறார்.
இந்த வாகனத்தை வழங்கியவர் த.செ. குமாரசாமி என்பவர். வந்தவாசி அருகே உள்ள தண்டரை கிராமத்தை சேர்ந்த பாரம்பரிய மருத்துவத்திலும், சித்த ஆயுர்வேத மருத்துவத்திலும் பதிவு பெற்ற 7வது தலைமுறை வைத்தியராக திகழ்ந்தவர். கிடைத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கை ஆலய திருப்பணிக்காக வழங்கியவர். மர வாகனமாக இருந்த நந்தியை கலை அழகுடன் வெள்ளியில் வடிவமைத்து வழங்கினார்.
வாகனங்கள்:
விநாயகருக்கு வெள்ளி மூஷிக வாகனமும், அம்மனுக்கு புன்னைமர வாகனம், கற்பக மர, வேங்கை மர வாகனமும், கிளி, காமதேனு, கந்தருவி, பூதகி, சிங்க வாகனம் என தினம் ஒரு வாகனத்தில் வீதி உலா நடைபெறும். ஈசனுக்கோ வெள்ளி பவளக்கால் விமானம், அதிகார நந்தி, வெள்ளி சூரிய பிரபை, சந்திர பிரபை, சவுடல் விமானம், புருஷா மிருக வாகனம், பூதம், நாகம், வெள்ளி ரிஷப வாகனம் என தினம் ஒரு வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது. சிங்காரவேலருக்கும் ஆட்டுக்கிடா, அன்னம், தாரகாசுர வாகனம், யானை வாகனம் என கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.
புதன்கிழமை ஏப்ரல் 9ஆம் தேதி காலை ஏழே கால் மணிக்கு தேரோட்டம் தொடங்கும். தேர் அசைந்து ஆடி வருவதைக் காண தெருவெங்கும் கூட்டம் கூடும்.
ஏப்ரல் 10ஆம் தேதி வியாழக்கிழமை அன்று 63வர் திருவிழா மிகவும் பிரபலமான ஒன்று இரவு நடைபெறும்.
இந்த 63 திருவிழாவை அடுத்து வெள்ளிக்கிழமை 11ஆம் தேதி பஞ்ச மூர்த்திகளும் உலா வருதலும் இரவில் விசாடனார் வீதி புறப்பாடும் நடைபெறும்.
12 ஆம் தேதி சனிக்கிழமை அன்று இரவு திருக்கல்யாணம். அதற்கு முன்பு புன்னை மரத்தடியில் மயில் உருவில் சிவ பூஜை நடைபெறும்.
ஏப்ரல் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உமா மகேஸ்வரர் தரிசனமும் நடைபெறும்.
பிறகு 14ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 10 நாட்கள் விடையாற்றி விழாவும் நடைபெறும்.
தேரோட்டம்:
புதன்கிழமை 9ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். காலை 6 மணிக்கு எல்லாம் இறைவன் தேருக்கு எழுந்தருளி விடுவார். 7.45 மணிக்கு தேரோட்டத்திற்கான தேர் வடம் பிடிக்கப்படும்.
அறுபத்து மூவர் வீதி உலா:
10ஆம் தேதி வியாழக்கிழமை காலை 8 மணி வாக்கில் திருஞானசம்பந்தர் எழுந்தருளி என்பை பூம்பாவையாக்கி அருளும் நிகழ்ச்சி நடைபெறும். மதியம் 3.30 மணி அளவில் வெள்ளி விமானத்தில் ஈசன் 63 நாயன்மார்களோடு திருக்காட்சி நடைபெறும். நான்கு மாட வீதிகளையும் சுற்றி கோவிலுக்கு வந்து சேர நடு இரவு ஆகிவிடும்.