விமர்சனம்: ‘தி கோட்’ - விஜய்யின் மாஸ் வில்லத்தனம்!

The Greatest Of All Time Movie Review
The Greatest Of All Time Movie Review
Published on
ரேட்டிங்(3 / 5)

திரடி - செண்டிமெண்ட் - சஸ்பென்ஸ் - மாஸ் விஜய். தல அஜீத்துக்கு மங்காத்தா தந்த வெங்கட் பிரபு, தளபதி விஜய்க்கு தந்திருக்கும் ‘தி கோட்’ எப்படி இருக்கிறது என்பதைக் காண ரசிகர்களின் விசில் சத்தம், கை தட்டலுடன் தியேட்டருக்கு சென்றால், படம் நம்மை ஏமாற்றவில்லை என்றே சொல்லலாம். யுவன் சங்கர் ராஜா இசையில், கல்பாத்தி அகோரம் தயாரிப்பில், விஜய் நடித்துள்ள இந்த மாஸ் மசாலாவின் சுவை எப்படி? வாங்க பார்க்கலாம்.

காந்தியும் (விஜய்) அவரது நண்பர்களும் (பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல்) தீவிரவாத தடுப்பு அதிகாரிகளாகப் பணியாற்றுகிறார்கள். கென்யா நாட்டில் தீவிரவாதிகளிடமிருந்து யுரேனியத்தை கைப்பற்றும் முயற்சியில் மேனன் (மோகன்) என்பவர் கொல்லப்படுகிறார்.

தாய்லாந்திற்கு சுற்றுலா செல்லும் காந்தியின் குடும்பத்தை ஒரு கும்பல் தாக்குகிறது. இந்தத் தாக்குதலின் தொடர்ச்சியாக காந்தியின் ஐந்து வயது மகன் ஜீவன் கடத்தி கொல்லப்படுகிறான். பல வருடங்களுக்குப் பிறகு மாஸ்கோவில் தனது மகனை கண்டறிந்து சென்னைக்கு அழைத்து வருகிறார் காந்தி. ஜீவன் சென்னைக்கு வந்த பின்பு சில கொலைகள் நடக்கின்றன. இதன் பின்னணியில் இருக்கும் கருப்பு ஆடு யார் என்பதுதான் படத்தின் கதை.

சூப்பர், மாஸ், அட்டகாசம் என விஜய்யின் நடிப்பைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. இன்று இருக்கும் பல ஹீரோக்கள் வில்லனாக நடித்திருக்கிறார்கள். ஆனால் விஜய் வில்லனாக நடித்ததில்லை. இந்த ‘கோட்’ படத்தில் மாஸ் வில்லனாக நடித்து தனது ஆசையை தீர்த்து கொண்டு விட்டார் விஜய் என்றுதான் சொல்ல வேண்டும்.

அப்பா - மகன் என்று இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் விஜய்யில் வில்லனாக நடிக்கும் மகன் விஜய்தான் செம தூள். இருந்தாலும் AI தொழில் நுட்பத்தில் இளம் விஜய்யை பார்க்கும்போது சில குறைகள் தெரிகின்றன. தனது மகன் இறந்த பின்பு அழும் அப்பா விஜய்யை பார்க்கும் ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வருவதை பார்க்க முடிந்தது. அப்பாவி போல முகத்தை வைத்து கொண்டு வில்லத்தனம் செய்யும் விஜய்யை பார்க்கும்போது, அரசியலுக்குப் போனாலும், ‘சமயம் கிடைக்கும்போது நடிக்க வாங்க பாஸ்’ என்று சொல்லத் தோன்றுகிறது.

அப்பாவுக்கு ஸ்நேகாவும் மகனுக்கு மீனாட்சி சௌத்திரியும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள் ஸ்நேகா மட்டும் கொஞ்சம் நடித்திருக்கிறார். நூறாவது நாள், உருவம் படத்திற்குப் பின்பு மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். நடிப்பு நன்றாக இருந்தாலும் குரல் ஒத்துழைக்கவில்லை. பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் என அனைவரையுமே பாரபட்சம் பார்க்காமல் வேலை வாங்கி இருக்கிறார் வெங்கட் பிரபு. கென்யாவின் பாலை வனத்தில் ஓடும் ரயிலில் தொடங்கும் சண்டை காட்சியில் தொடங்கும் படம் சிறிது கூட தொய்வில்லாமல் சண்டை காட்சி, செண்டிமெண்ட், சஸ்பென்ஸ், சிறு சிறு ட்விஸ்ட் என நகர்கிறது.

விஜய் ஹீரோவாக இருந்தாலும், வெங்கட் பிரபு தனது பாணியிலேயே இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் முதல் காட்சியில் AI தொழில் நுட்பம் மூலம் விஜய்காந்த் வரும் காட்சியை பார்க்கும்போது இதில் நடித்திருப்பது விஜய் என அப்பட்டமாகத் தெரிகிறது. ராஜீவனின் ஆர்ட் டைரக் ஷனில் உருவான காட்சிகளை சித்தார்த் நுனி சிறப்பாக படம் பிடித்துள்ளார். படத்தின் இன்னொரு ஹீரோ சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்புராயன் என்றே சொல்லலாம். கென்யாவிலும், தாய்லாந்திலும் நடக்கும் சண்டைக் காட்சிகளை உருவாக்கிய விதத்தில் திலிப் சுப்புராயன் சூப்பர் என்று சொல்ல வைக்கிறார்.

இதையும் படியுங்கள்:
முந்தைய OTT சாதனைகளை முறியடித்த அல்லு அர்ஜூனின் புஷ்பா 2: தி ரூல்!
The Greatest Of All Time Movie Review

யுவனின் இசையில், ‘விசில் போடு’ பாடல் மட்டுமே கேட்கும்படி உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் கிரிக்கெட் மேட்ச்சையும் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியையும் இணைத்து படமாக்கி இருப்பதில் வெங்கட் பிரபுவின் டச் தெரிகிறது. அஜீ த் பெயரும், அஜீத் படத்தின் பிஜிஎம்மும் இறுதிக் காட்சியில் வரும்போது ரசிகர்களின் கை தட்டல் அரங்கை அதிர வைக்கிறது. பிரேம்ஜி, யோகிபாபு என இரண்டு காமெடியன்கள் இருந்தும் விஜய் செய்யும் காமெடிக்கு மட்டும்தான் சிரிப்பு வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு மாறுபட்ட விஜய்யை பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த ‘கோட்’ செம ட்ரீட்டாக இருக்கும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com