
நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்தவர்கள் ஏராளம். இதில் பலரும் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். இதனைத் தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து போதும் தற்கொலைகளின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவிற்கு நேற்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி பலவழிகளில் நன்மைகளைத் தருகிறது. இதனைத் தவறான பாதையில் பயன்படுத்தினால் விளைவுகளும் மோசமாகவே உள்ளன. தொடக்கத்தில் பொழுதுபோக்கிற்காக விளையாடத் தொடங்கி, பிறகு பணம் கட்டி விளையாட ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களைத் தூண்டுகின்றன. ஒருசிலர் கடன் வாங்கியும் ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடுகின்றனர். இதனால் நாட்டில் எண்ணற்ற குடும்பங்கள் கடன் தொல்லைக்கு ஆளாகின்றன. கடன் தொல்லையை சமாளிக்க முடியாமல் பலரும் தற்கொலை முடிவை எடுக்கின்றனர்.
ஆன்லைன் சூதாட்டத்தில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் மற்றும் நிதி முறைகேடுகள் நடப்பதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுமதி பெறாத 1500-க்கும் மேற்பட்ட ஆன்லைன் விளையாட்டுச் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இருப்பினும் கூட ஆன்லைன் சூதாட்ட மோகம் இளைஞர்களிடம் அதிகளவில் காணப்பட்டது. இதனைத் தடுக்கவும், பொதுமக்களின் நலன் காக்கவும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் வகையில் ‘ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்துதல்’ மசோதாவைக் கொண்டு வர அரசு சார்பில் திட்டமிடப்பட்டது. இதற்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஆன்லைன் சூதாட்டச் செயலிகளுக்கு பணப்பரிமாற்றம் செய்வதை முற்றிலுமாக நிறுத்த இந்த மசோதா வழிவகை செய்யும். இதன்படி இனி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வழியாக ஆன்லைன் சூதாட்டச் செயலிகளுக்கு பணத்தை அனுப்ப முடியாது. ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் சூதாட்ட விளையாட்டுகளை விளம்பரப்படுத்தவும் தடை செய்யப்படும். மீறினால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.
ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்துதல் மசோதாவை மீறி, யாரேனும் சூதாட்டச் செயலி சேவையை வழங்கினாலோ அல்லது சூதாட்டத்தில் ஈடுபட்டாலோ அல்லது பணப்பரிமாற்றத்திற்கு நிதியை அங்கீகரித்தாலோ 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.1 கோடி வரையிலான அபராதமும் விதிக்கப்படும். சில சமயங்களில் இந்த இரண்டு தண்டனைகளும் வழங்கப்பட வாய்ப்புள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை ஒழித்துக் கட்டும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.