

கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் தி ஒடிசி (The Odyssey) திரைப்படம் உலகம் முழுக்க பேசு பொருள் ஆகியுள்ளது. இதற்கு காரணம் ஓடிசி இதிகாசம் பல நூற்றாண்டுகளாக உலகம் முழுக்கப் புகழ் பெற்றது, இந்தியாவில் இராமாயணமும் மகாபாரதமும் எந்தளவிற்கு முக்கியத்துவம் பெற்றதோ, அதே அளவில் மேற்குலகில் ஒடிசி செல்வாக்கு பெற்றது.
புகழ் பெற்ற கிரேக்க இலக்கியவாதி ஹோமர் ஓடிசி நாவலை எழுதினார் , இவர் எழுதிய இலியட் நாவலும் மிகவும் புகழ்பெற்றது. இந்த இதிகாசங்கள் ஐரோப்பா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியில் கல்விக்கு அடித்தளமாக இருந்தன. வீரத்தையும், விடாமுயற்சியையும், குடும்பப் பற்றையும் வலியுறுத்தும் நோக்கில் இந்தக் காவியம் எழுதப்பட்டது . 'ஒடிசி' என்ற சொல்லே இன்று 'நெடிய பயணம்' என்ற அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
கிரேக்க மஹாக்கவி என்று போற்றப்படும் ஹோமர் கிமு 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் அறிஞர்கள் கூறுகின்றனர். பிறவியிலேயே பார்வைத் திறனற்ற ஹோமர், தங்கள் பகுதியில் வாய்வழி கதையாக புகழ் பெற்ற பல கதைகளை ஒருங்கிணைத்து காவியமாக எழுதியுள்ளார். பண்டைய கிரேக்கர்களின் பொற்காலமாக திகழ்ந்த கி.மு. 800 - 700 ஆண்டு காலத்தில் வரலாற்றுப் பின்னணியுடன் கற்பனை கலந்து இந்த நாவல் எழுதப்பட்டது.
இந்த கதை டிராய் நகரத்தின் மீது கிரேக்கர்கள் போர் தொடுத்த 'டிராஜான் போரை பின்னணியாகக் கொண்டது. கிரேக்க பாணர்கள் பலரும் கவிதைகளாகவும் கதைகளாகவும் சொல்லப்பட்டவை எல்லாம் சேகரித்து , அதை சரியான முறையில் ஒருங்கிணைத்து அழியாத காப்பியமாக மாற்றிய பெருமை ஹோமரை சாரும்.
கதைச் சுருக்கம்:
ஒடிஸியஸ் என்னும் கிரேக்க மாவீரன் தன் தாய் நாடான இத்தாக்காவிற்கு (Ithaca) திரும்ப மேற்கொள்ளும் 10 ஆண்டு காலப் போராட்டமிக்க பயணம் தான் இந்தக் காவியம். ஒடிஸியஸ் நாடு திரும்பும் வழியில் ஏராளமான தடைகளை எல்லாம் எதிர் கொள்கிறான். மிகவும் பயங்கரமானதும் சுவாரசியம் மிகுந்த பல நிகழ்ச்சிகளையும் கடந்து வருவது தான் இந்தக் கதை. மொத்தமாக ஒடிசி 24 பெரிய அத்தியாயங்களை கொண்டு 24 புத்தகமாக எழுதப்பட்டுள்ளது.
கதையின் தொடக்கம்:
ட்ராய் போர் முடிந்து அனைத்து கிரேக்க வீரர்களும் வீடு திரும்பிய போது இத்தாக்கா நாட்டு மன்னன் ஒடிசியஸ் மட்டும் நாடு திரும்ப வில்லை . அவன் போரில் இறந்து விட்டதாக கருதி மற்ற இளவரசர்கள் ஒடிசியின் மனைவி பெனிலோப் மற்றும் மகன் டெலிமாக்கஸ் ஆகியோரை இன்னலுக்கு ஆளாக்குகின்றனர்.
ஒற்றைக் கண் ராட்சசன்:
நாடு திரும்பும் வழியில் ஒடிசி, பாலிபெமஸ் என்ற ஒற்றைக் கண் ராட்சசனிடம் மாட்டிக்கொண்டு தவிக்கிறார். பின்னர் அவனை கடுமையாக தாக்கி விட்டு தனது புத்திசாலித்தனத்தினால் தப்பிக்கிறார். இதனால் கோபமடைந்த ராட்சசனின் தந்தையான கடல் கடவுள் பொஸைடன் , ஒடிஸியஸின் பயணத்தைத் தடுக்கிறார்.
சிரேன்கள் :
கடலை கடக்க ஒடிசி முயற்சி செய்யும் பொழுது , அழகிய குரல்களால் பாடி கடல் கன்னிகள் அவனது மாலுமிகளை ஈர்த்து கொலை செய்கின்றனர். அவர்களிடமிருந்து தனது மாலுமிகளை ஒடிசி காப்பாற்றுகிறார்.
சிரிஸ் மற்றும் கலிப்ஸோ:
சிரிஸ் என்னும் பெயருடைய பயங்கரமான சூனியக்காரி ஒருத்தி ஒடிஸியஸின் அனைத்து வீரர்களையும் பன்றிகளாக
மாற்றி விடுகிறாள். அவர்களை மீண்டும் மனிதர்களாக மாற்ற ஒடிசியஸ் முயற்சி செய்யும் பொழுது கலிப்ஸோ என்ற தேவதை ஒடிஸியஸை ஏழு ஆண்டுகள் ஒரு தீவில் சிறை வைக்கிறாள்.
தாயகம் திரும்புதல்:
இறுதியாக கிரேக்க தேவதை ஏதினா உதவியுடன் , பிச்சைக்காரன் வேடத்தில் தீவில் இருந்து தப்பி தனது நாட்டை அடைகிறான். அவனது மனைவி பெனிலோப் தன்னை அடையத் துடிக்கும் 108 இளவரசர்களுக்கும் ஒரு வில் போட்டியை நடத்துகிறாள். அந்தப் போட்டியில் ஒடிசியும் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறான். பின்னர் தனது வேடத்தை கலைத்த ஒடிசி அத்தனை இளவரசர்களையும் கொன்றுவிட்டு தனது மனைவி மற்றும் மகனுடன் இணைகிறான். இந்தக் கதை மனிதர்களின் அறிவாற்றல் , வீரம் , குடும்பம் ஆகியவற்றின் மேன்மையை பற்றி கூறுகிறது.
தற்போது இந்த கதையை மெருகேற்றி ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் திரைப்படமாக எடுத்து வருகிறார். இந்த திரைப்படம் ஜூலை 2026 ஆம் ஆம் ஆண்டு திரையில் வெளியாக உள்ளது.