டோலிவுட் ஹீரோ ரவி தேஜாவின் அடுத்த படமான 'கழுகு' திரைப்படம் இன்னும் 9 நாட்களில் வெளியாகவுள்ள நிலையில் அதற்கான போஸ்டர் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே டாலிவுட்டில் வரிசையாக வெற்றிப்படங்கள் வெளியாகி வருகின்றன. பொங்கலுக்கு 'குண்டூர் காரம்', 'ஹனு மான்', 'சைந்தவ்', 'நா சாமி ரங்கா' ஆகிய படங்கள் வெளியாகி ஹிட் கொடுத்தன. அதேபோல் பிப்ரவரி மாதம் 9ம் தேதி 'ஒரு பேரு பைரவகோனா', 'லால் சலாம்', 'அன்வெஷிப்பின் கண்டேதும்', 'தேரே படோம் மே ஐசா உஜா ஜியோ' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. ஆனால் இப்போது இந்த போட்டியிலிருந்து 'ஒரு பேரு பைரவகோனா' படம் விலகப்போவது உறுதியானது. மேலும் இப்படம் பிப்ரவரி 16ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
ரவி தேஜா 1990ம் ஆண்டிலிருந்தே டோலிவுட்டை கலக்கி வருகிறார். இவர் இதுவரைக் கிட்டத்தட்ட 84 படங்களில் நடித்துள்ளார். கழுகு அவருடைய 85வது படமாகும். கழுகு திரைப்படம் பொங்கலுக்கே வெளியாகும் என்றிருந்த நிலையில் அன்று நிறைய படங்கள் வெளியானதால் படக்குழு கழுகு பட வெளியீட்டு தேதியை தள்ளி வைத்தது. 120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தை தனியாக வெளியிட வேண்டும் என்று படக்குழு திட்டம் போட்டது.
அந்தவகையில் தெலுங்கில் பல திரையரங்குகளில் கழுகு படம் மட்டும் திரையிடும்படி படக்குழு தனி வெளியீட்டை உறுதி செய்துள்ளது. அதேபோல் போட்டிப் படங்களும் அவ்வளவாக இல்லை. இப்படத்தில் ரவி தேஜாவுடன் இணைந்து அனுபாமா பரமேஷ்வரி, நவ்தீப், வினய் ராய் ஆகியோரும் நடித்துள்ளனர்.
கார்த்திக் கட்டம்னேனி இயக்கிய இப்படத்தை People media factory தயாரித்துள்ளது. அதேபோல் கார்த்திக் தான் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் செய்துள்ளார். மேலும் இப்படத்திற்கு தாவ்சப்த் இசையமைத்திருக்கிறார்.
கழுகுப் படத்தின் டீசர் நவம்பர் மாதம் 6 தேதி வெளியானது. இதில் ரவி தேஜா பல கெட்டப்பில் நடித்திருக்கிறார். மேலும் மக்களுக்கு இது ஒரு கட்டுக்கதையாகவும் அரசால் மறைக்கப்பட்ட ஒரு கதையாகவும் இருக்கும் என டீசர் மூலம் தெரியவருகிறது. இப்படத்தை பான் இந்தியா லெவலில் எடுத்திருப்பதாக இயக்குனர் கார்த்திக் கூறியிருக்கிறார்.