மகிழ்மதி முதல் அந்நியன் வீடு வரை: கலை இயக்குநர்களின் மாயாஜால 'செட்' ரகசியங்கள்!

movie palace set
movie palace set baahubali anniayn secretsImg credit: AI Image
Updated on

திரையரங்கில் அமர்ந்து ஒரு படத்தை பார்த்து ரசிக்கும்போது, நம்மை அறியாமலேயே அந்தப் படத்திற்குள் நாம் இழுத்துச் செல்லப்படுகிறோம். விண்ணை முட்டும் கோபுரங்கள், ஆயிரம் கால்கள் கொண்ட மண்டபங்கள், கண்ணைப் பறிக்கும் கலைநயம் மிக்க அரண்மனைகள் எனத் திரையில் நாம் காண்பவை நம்மை வியப்பில் ஆழ்த்தும். ஆனால், இவை அனைத்தும் உண்மையானவைதானா? என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பல நேரங்களில் நாம் மெய்மறந்து பார்க்கும் அந்த பிரம்மாண்ட கட்டடங்கள், வெறும் மரப்பலகைகள் நிறைந்த ஒரு கலை இயக்குநரின் கற்பனைத் திறன் கலந்த செட் ஆகவும் கூட இருக்கலாம். வாருங்கள், அந்த வகையில் திரையரங்குகளில் அனைவரின் கவனத்தை ஈர்த்த பிரம்மாண்ட செட்கள் குறித்த தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.

மகிழ்மதி அரண்மனை:

இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த 'பாகுபலி' திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது. அதில் வரும் மகிழ்மதி பேரரசு, அதன் பிரம்மாண்டமான சிலைகள் மற்றும் கோட்டைச் சுவர்கள் நம்மை அந்த காலத்திற்கே கொண்டு சென்றன. உண்மையில், மகிழ்மதி என்ற ஒரு நகரம் நிஜத்தில் கிடையாது.

இதையும் படியுங்கள்:
இந்த வாரம் வெளியாகும் 4 திரைப்படங்கள்! - 'கர' முதல் 'சுயம்பு' வரை.. உங்கள் சாய்ஸ் எது?
movie palace set

ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஏக்கர் கணக்கான நிலப்பரப்பில் கலை இயக்குநர் சாபு சிரில் தலைமையில் உருவாக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான செட் அது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல மாதங்கள் உழைத்து உருவாக்கிய இந்த செட், திரையில் நிஜமான ஒரு பழங்கால நகரத்தைப் போலவே காட்சியளித்தது. இன்றுவரை அந்த செட்டின் சில பகுதிகள் சுற்றுலாப் பயணிகளுக்காக அப்படியே வைக்கப்பட்டிருக்கிறது.

அந்நியன் ஐயங்கார் வீடு:

பிரம்மாண்டம் என்பது வெறும் அரண்மனைகளில் மட்டுமல்ல, ஒரு சாதாரண வீட்டைக் கூட பிரம்மாண்டமாக மாற்றிக் காட்ட முடியும் என்பதற்கு ஷங்கரின் 'அந்நியன்' ஒரு சிறந்த உதாரணம். அந்தப் படத்தில் அம்பி வசிக்கின்ற அந்தப் பாரம்பரியமான 'ஐயங்கார் வீடு' பலரை வியக்க வைத்தது. அந்த வீட்டின் தூண்கள், முற்றங்கள் மற்றும் பழங்காலத் தோற்றம் அப்படியே ஒரு அசல் அக்கிரகார வீட்டைப் பிரதிபலித்தது. ஆனால், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த வீடு முழுக்க முழுக்க ஒரு ஸ்டுடியோவுக்குள் அமைக்கப்பட்ட செட் ஆகும். அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கலும், மரவேலைப்பாடுகளும் மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருந்தன. படத்தைப் பார்த்த பலரும் அது நிஜமான வீடு என்று நம்பியது கலை இயக்குநரின் மிகப்பெரிய வெற்றி.

சினிமாவில் ஒரு செட் அமைப்பது என்பது பொறியியலும், கலையும் இணைந்த அதிசயம். ஒரு வரலாற்றுப் படத்திற்காக ஒரு கோட்டையை உருவாக்கும்போது, அந்த காலத்து மண்ணின் நிறம், கற்களின் தேய்மானம் என ஒவ்வொன்றையும் ஆய்வு செய்து கலை இயக்குநர்கள் உருவாக்குகிறார்கள்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், பாதி செட் நிஜமாகவும், மீதிப் பாதி VFX (Visual Effects) தொழில்நுட்பம் மூலமாகவும் விரிவுபடுத்தப்படுகிறது. இது பார்ப்பவர்களுக்கு ஒரு முழுமையான பிரம்மாண்டத்தை அளிக்கிறது.

இதையும் படியுங்கள்:
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக மாறும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்!
movie palace set

செட்கள் ஏன் அமைக்கப்படுகின்றன?

"நிஜமான இடங்களுக்கே சென்று படம் பிடிக்கலாமே, ஏன் இவ்வளவு செலவு செய்து செட் அமைக்க வேண்டும்?" என்ற கேள்வி எழலாம். இதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலாவதாக, ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்ட இடத்திற்குச் செல்லும்போது அங்கே நவீன மின்சாரக் கம்பிகளோ அல்லது தற்காலக் கட்டடங்களோ குறுக்கிடலாம். இரண்டாவதாக, கேமரா கோணங்களுக்கு வசதியாகச் சுவர்களை மாற்றியமைக்கவோ, வெளிச்சத்தைக் கட்டுப்படுத்தவோ செட்களில் மட்டுமே சாத்தியம். எல்லாவற்றிற்கும் மேலாக, இயக்குநரின் கற்பனையில் உள்ள ஒரு உலகத்தை அப்படியே நிஜத்தில் காண்பது கடினம். அதைச் செட்கள் மூலமே சாத்தியப்படுத்த முடியும்.

திரையில் ஹீரோக்களைப் பார்த்து நாம் கைதட்டுகிறோம், ஆனால் அந்த ஹீரோக்கள் உலவும் உலகத்தைப் படைக்கும் கலை இயக்குநர்களையும், அவர்களுக்குக் கீழ் பணிபுரியும் தச்சர்கள், ஓவியர்கள் மற்றும் தொழிலாளர்களையும் நாம் கவனிக்கத் தவறுகிறோம். திரைப்படங்களில் நாம் பார்த்த அரண்மனை நிஜம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதை உருவாக்கியவர்களின் உழைப்பும், அதன் மூலம் நமக்குக் கிடைத்த அனுபவமும் உண்மையானது.

logo
Kalki Online
kalkionline.com