லியோவின் மாஸ்டர் லோகேஷ் கனகராஜ் வெற்றியின் ரகசியம் என்ன?

Lokesh kanagaraj
Lokesh kanagaraj
Published on

லோகேஷ் கனகராஜ் இன்றைக்கு இந்தியா சினிமாவில் இவரின் பெயரை கேள்விப்படாதவர்களே இருக்கமுடியாது. அந்த அளவுக்கு வெள்ளித்திரையில் நுழைந்த ஆறு ஆண்டுகளிலேயே அசுர வளர்ச்சியை கண்டிருக்கிறார்.

கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு எனும் சிறு கிராமத்தில் இருந்த வந்தவர் லோகேஷ் கனகராஜ். சினிமா பின்புலமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த லோகேஷின் அப்பா கனகராஜ், கோவை மாநகராட்சியில் பேருந்து நடத்துனராக பணிப்புரிந்தவர். எம்பிஏ படிப்பை கோவை தனியார் கல்லூரியில் முடித்துள்ள லோகேஷ், அதன்பிறகு வங்கியில் சிறிதுகாலம் பணியாற்றியுள்ளார். ஆனால் லோகேஷின் கனவு சினிமாவில் சாதிக்கவேண்டும் என்பதுதான். வளர் இளம் பருவத்தில் இருந்தே சினிமா பார்ப்பதில் ஆர்வம்கொண்ட லோகேஷ் ஒரு கட்டத்தில் தனது வங்கி பணியை ராஜினாமா செய்துவிட்டு முழுமையாக திரைத்துறையில் கவனம் செலுத்ததொடங்கினார்.

இதற்காக கோவையில் இருந்த சென்னை வந்துள்ளார். பொதுவாக சினிமாவில் யாரும் அவ்வளவு எளிதில் நுழைந்துவிடமுடியாது. ஏற்கனவே பலர் திரைப்படம் எடுக்கவேண்டும் என்ற ஆசையில் பல ஜாம்பவான்களிடம் உதவி இயக்குநர்களாக தங்களுடைய காலத்தை கடத்திக்கொண்டிருக்க, எந்தவித சினிமா பின்புலமோ அல்லது பிலிம் இன்ஸ்டிடியூட் போன்ற சினிமா சார்ந்த தொழில்நுட்ப பயிற்சி பெற்றிருக்காத லோகேஷ் கனகராஜின் கடந்த காலம் ஒரே வரியில் எழுதிவிடும் அளவுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

வாய்ப்பு எனும் வாசல்

சினிமாவில் ஒரு படமாவது எடுக்கவேண்டும் என தயாரிப்பு நிறுவனங்கள், முன்னணி ஹீரோக்களிடம் கதை சொல்ல அல்லோலப்பட்டுக்கொண்டிருக்கும் பல இயக்குநர்களை போல், லோகேஷ் கனகராஜும் தன்னுடைய ஆரம்பகாலத்தை பல ஏமாற்றங்கள், அவமானங்கள் மத்தியில் கழித்திருக்கிறார். ஆனால், திறமையும் விடாமுயற்சியும் இருந்தால் திரைத்துறையில் சாதிக்கலாம் என்பதற்கு வாழும் உதாரணங்களாக உள்ளனர் இயக்குநர் மணிரத்னம், ரஜினிகாந்த் போன்றவர்கள்.

அதேபோல்தான் லோகேஷ் கனகராஜக்கும் குறும்படம் போட்டியின் மூலமாக வாய்ப்பு எனும் வாசல் திறந்தது. கார்ப்பரேட் குறும்படப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டார் லோகேஷ். அந்த போட்டியில் பீட்சா, இறைவி, ஜிகர்தண்டா மற்றும் பேட்டை போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடுவராக இருந்தார். லோகேஷின் குறும்படத்தால் ஈர்க்கப்பட்ட கார்த்திக் சுப்புராஜ், அவரை தொடர்ந்து திரைப்படங்களை இயக்குமாறு ஊக்குவித்தார்.

இதனைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் 2016ம் ஆண்டு ’அவியல்’ எனும் ஆந்தாலஜி படத்தில் லோகேஷ்க்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்தில் ’களம்’ எனும் தலைப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் திரைத்துறையினரால் கவனம்பெற்றது. இதனையடுத்து வெள்ளித்திரையில் தனது முதல் படமான மாநகரம் படத்தை 2017ம் ஆண்டு வெளியிட்டார் லோகேஷ். ஸ்ரீ, சந்திப் கிஷன், சார்லி, ரெஜினா என பெரிய ஹூரோக்கள் படத்தில் இடம்பெறாவிட்டாலும் மாநகரம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Managaram Movie
Managaram Movie

படத்தில் வேலை தேடிச் சென்னை வரும் ஸ்ரீ, காதலிக்கச் சொல்லி ரெஜினா பின்னால் சுற்றும் சந்தீப் கிருஷ்ணன், மகனின் மருத்துவத்திற்காக சென்னை வரும் கேப் ஓட்டுனர் சார்லி, ஊரில் பெரிய தாதா மதுசூதனன் ராவ், அதே ஊரில் இருக்கும் குட்டி தாதா அருண் அலெக்சாண்டர் இவர்கள் வாழ்வில் தனித்தனியே நடக்கும் சில நிகழ்வுகள் வெவ்வேறு கதாபாத்திரங்களுக்கு இடையில் ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறது. எந்தப் புள்ளியில் அந்தத் தொடர்பு ஒன்று சேர்கிறது, அது எப்படி முடிகிறது என்பதே மாநகரம் படம்.  

Chaos Theory அடிப்படையாக கொண்டதாக LCU படங்கள்?

கமலின் தசாவதாரம் படத்தில் செல்லப்படும் கேயாஸ் தியரியை (பட்டம்பூச்சி விளைவு) அடிப்படையாக கொண்டு மாநகரம் படத்தை எடுத்திருப்பார் லோகேஷ் கனகராஜ். படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் ஒன்றுக்கொன்றுக்கு நேரடியாக தொடர்பு இல்லை என்றாலும், அவர்களை சேர்க்கும் மையப் புள்ளியாக ஒரு விஷயம் இடம்பெற்றிருக்கும். இதனை ரசிகர்களுக்கு புரியும்படி காட்சி மற்றும் வசனங்கள் மூலம் எளிமையாக கடத்தி இருப்பார் லோகேஷ்.

மாநகரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் பின்பற்றிய கேயாஸ் தியரியைதான் (Chaos theory butterfly effect) அவரின் அடுத்தடுத்த படங்களான கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் தற்போது வெளியாகியுள்ள லியோ ஆகிய படங்களில் பின்பற்றிவருகிறார். ஆனால், இந்த Chaos theory butterfly effectஐ ஒரே படத்தில் சொல்லாமல் அதனை ஒரு படத்தில் இருந்து மற்றொரு படத்திற்கு கதை வழியாகவும், காட்சி வழியாகவும், கதாபாத்திரங்கள் வழியாகவும் ரசிகர்களுக்கு புரியும் வகையில் கடத்தி செல்வதில்தான் லோகேஷ் கனகராஜின் வெற்றி சூட்சமம் அடங்கியுள்ளது.

இந்த வெற்றி சூட்சமத்தை எந்த இடத்திலும் பிசாகாமலும், சொல்ல வரும் விஷயத்தை நேரடியாகவும், நிதானமாகவும் அதேநேரம் மாஸ் ஹீரோக்கள் வழியாக ரசிகர்களிடம் கொண்டுச் செல்வதில் மாஸ்டராக உள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Vikram
Vikram

LCUவின் வெற்றி மந்திரம்

மகாபாரதம், ராமாயணம், சங்க இலக்கியங்கள், பைபிள், குரான் மற்றும் உலக புகழ்பெற்ற நாவல்களில் ஒரு முக்கிய கதையை மையப்படுத்தி பல கிளை கதைகள் அதனை தொடர்புப்படுத்தி எழுதப்பட்டு இருக்கும். அதுபோல்தான் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படங்களில் சமூகத்தில் போதை எனும் சந்தை எந்தளவுக்கு விரிவடைந்துள்ளது. அதனுடைய பாதிப்புகள் என்ன? அடுத்த தலைமுறையினரை சீரழிக்கும் போதை கலாச்சாரத்திற்கு மாற்று எது? இதன் பின்னால் உள்ள வர்த்தகம், அரசியல் மற்றும் வன்முறை எனும் ஒரு மைய புள்ளியை பல்வேறு கிளை கதைகளாக உருவாக்குவதில் தேர்ச்சிப்பெற்றுள்ளார்.

போதை விழிப்புணர்வு மற்றும் வன்முறைக்கு எதிரான படங்கள் பொதுவாக சமூகத்தில் நடக்கும் விஷயங்களை பிரதிபலிப்பதாகவும் அதிலிருந்து விழிப்புணர்வு பெறுவதற்காக எடுக்கப்படுகிறது. ஆனால், நிதர்சனத்தில் போதை மற்றும் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வுக்காக எடுக்கப்படும் திரைப்படங்கள் எதிர்மறையான விஷயங்களுக்குதான் அடித்தளமிடுகிறது. அதேநேரம் சமூகத்திற்கு தேவையான மற்றும் சமானிய மக்களின் உணர்வுகளை திரைப்படங்கள் மூலமாக தூண்டும்படியான படங்கள் தமிழ் சினிமா இயக்குநர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

இதில் இயக்குநர் லோகேஷ்க்கு பக்கபலமாக உள்ளவர்கள் என்றால் அவரின் உதவி இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் மாஸ் ஹீரோக்கள்தாம். நம்பிக்கையான படக்குழு மற்றும் தன்னுடைய கதையை ஒரு மாஸ் ஹீரோவின் கிரிடத்தில் மற்றொரு வைரக்கல்லாக மாற்றும் வித்தையே ஐந்து படங்களை மட்டும் இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜின் வெற்றியின் ரகசியமாக அமைந்துள்ளது.

rajini - lokesh
rajini - lokesh

அதுவே லோகேஷ் கனகராஜை இன்றைய சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் மாற்றியுள்ளது. அதுதான் LCU என்றழைக்கப்படும் Lokesh Cinematic Universe எனும் திரைபானி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com