திரில்லர் படங்களின் முடிசூடா மன்னன் - ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் பிறந்த தினம் (ஆகஸ்ட் 13)!

HBD Alfred Hitchcock
HBD Alfred Hitchcock
Published on

' மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ்' என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இயக்குனர் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் 1899 ஆம் ஆண்டு ஆகஸ்டு 13ஆம் தேதி லண்டனில் உள்ள லேயிடன் ஸ்டோனில் பிறந்தார். அவரது தந்தை வில்லியம் ஜே. ஹிட்ச்காக் ஒரு பழ வியாபாரி, தாயார் எம்மா ஜேன். தனது பள்ளிப் படிப்பிற்கு பிறகு மின் துறை மற்றும் மெக்கானிக் துறையில் பயிற்சி பெற்றார் ஆல்ஃபிரட். ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு ஒவியங்கள் மீது ஆர்வம். அதனால் விளம்பரங்களுக்கு ஓவியங்கள் வரையும் பணியில் சேர்ந்தார். அதுவே அவரை திரைப்பட துறைக்கு ஆர்ட் டைரக்டராக அழைத்து வந்தது. பின்னர் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்

1925 ல் முதன் முதலாக ' பிளஷர் கார்டன்' எனும் படத்தை டைரக்ட் செய்தார். அதனை தொடர்ந்து இயக்கிய ' லாட்ஜர்'  எனும் முதல் திகில் திரைப்படமே அவருக்கு பேரும் புகழும் வாங்கித் தந்தது. ஹிட்ச்காக் 1925 லிருந்து 1976 வரை 72 படங்களை டைரக்ட் செய்துள்ளார். 

1976ல் வெளிவந்த 'பேமிலி பிளாட்' திரைப்படம்தான் அவரது கடைசி திரைப்படம். அதன் பிறகு ' ஷார்ட் நைட்' என்ற படத்தை இயக்க அவர் மேற்கொண்ட முயற்சி உடல்நிலை காரணமாக ஆரம்பத்திலேயே நின்று போனது.

1979 ல் அமெ‌ரிக்கன் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது. அறுபது வருடங்களில் அறுபதுக்கு மேற்பட்ட படங்களை இயக்கிய, திரில்லர் படங்களின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த ஹிட்ச்காக், 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கலிபோர்னியாவில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

மனித மனங்களின் சிக்கலான பகுதிகளை நன்றாக அறிந்து வைத்திருந்தார் ஹிட்ச்காக். கதாபாத்திரங்களுடன் பார்வையாளர்களை ஒன்ற வைக்கும் வித்தையை அவரளவுக்கு தெ‌ரிந்து வைத்தவர்கள் யாருமில்லை எனலாம்.

லாட்ஜர் திரைப்படத்திலிருந்து ஒவ்வொரு திரைப்படத்திலும் ஏதாவது ஒரு காட்சியில் திரையில் தோன்றுவதை வழக்கமாக கொண்டிருந்த ஹிட்ச்காக், உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களை, அவர் எந்த காட்சியில் தோன்றுவார் என ஆர்வமாக கவனிக்க வைத்தார்.

இதையும் படியுங்கள்:
'பேரழகிங்கிறதை தாண்டி ஓர் அற்புதமான ஆன்மா அவள்' - ஆச்சரியங்கள் நிறைந்த சில்க் ஸ்மிதா!
HBD Alfred Hitchcock

தான் தயாரிக்கும் படங்களில் ஏதாவது ஒரு காட்சியின் போது ஒரு விநாடியாவது தம் தலையை நீட்டி வைக்கும் ஹிட்காக்கிற்கு, அவர் தயாரித்த 'லைட் போட்' என்ற படத்தில் ஒன்பது நடிகர்களுக்கு மட்டுமே பங்கு இருந்தது. அவரது வழக்கப்படி தன் தலையை காண்பிப்பதற்கு அந்தப் படத்தில் இடமே இல்லாமல் இருந்தது. ஹிட்ச்காக்கிற்கு இந்த படத்தில் தனது வழக்கமான ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்றே அனைவரும் கருதினார்கள். ஆனால் படத்தின் கடைசி காட்சியில் நடிகர் ஒருவர் பத்திரிகையைப் பார்க்கும் காட்சி வந்தது. அந்தப் பத்திரிகையில் ஒரு விளம்பரம் காணப்பட்டது. அந்த விளம்பரத்தில் ஹிட்ச்காக்கின் படம் இடம்பெற்றிருந்தது. அது தான் ஹிட்ச்காக்.!  

லைஃப்போட், ரியர் விண்டோ மற்றும் சைக்கோ போன்ற திரைப்படங்களுக்காக ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் 20 ஆண்டுகளில் சிறந்த இயக்குனருக்கான ஐந்து அகாடமி விருது பரிந்துரைகளைப் பெற்றார். ஆனால் அவர் ஒரு ஆஸ்கார் விருதைக்கூட வென்றதில்லை. இதனால் அவருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருது விழாவில் அவர் என்ன பேசப்போகிறாரோ என்ற சஸ்பென்ஸ் மூடில்  அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்க, கம்பீரமாக மேடைக்கு வந்த ஆல்ஃபிரட் ஹிட்ச்காக், தனது அகாடமி விருதுகள் ஏற்பு உரையில், விழாவில் பேசியது ஐந்து வார்த்தைகள் தான் அது "மிகவும் நன்றி, உண்மையாகவே!" என்பது தான்

இதையும் படியுங்கள்:
எனது கேரியரில் இதுதான் சிறந்த படம்: நடிகர் சூரி!
HBD Alfred Hitchcock

அமெரிக்க திரைப்படக் கல்லூரி ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கியபோது ஹிட்ச்காக் பேசியது...

“எனக்கு அன்பும் ஆதரவும் ஊக்கமும் வழங்கி தொடர்ந்து என்னோடு இணைந்து பணியாற்றிய நான்கு நபர்களின் பெயரைச் சொல்ல, இந்த அவை என்னை அனுமதிக்க வேண்டும். முதலாவது ஒரு படத்தொகுப்பாளர், இரண்டாவது ஒரு திரைக்கதை எழுத்தாளர், மூன்றாவது என் மகள் பேட்ரிசியாவின் தாய், நான்காவது வீட்டுச் சமையலறைக்குள் அதிசயங்களை நிகழ்த்தும் ஒரு சமையல் கலைஞர். அவர்களின் பெயர்கள்.. ‘அல்மா ரிவிலே’ [திருமதி ஹிட்ச்காக்]”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com