
ஹாலிவுட் படங்கள் பெரும்பாலும் சண்டைக் காட்சிகளுக்காக பெரிதும் பாராட்டப்படும். 20 வருடங்கள் பின்னோக்கிச் சென்றால், சண்டைக் காட்சிகளின் உண்மைத் தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் தொழில்நுட்பத்தின் உதவியால் இப்போது எல்லா சண்டைக் காட்சிகளும் கிராபிக்ஸ் செய்யப்படுகின்றன. இது மாதிரியான சண்டைக் காட்சிகளில் உண்மைத் தன்மைக்கு இடமில்லாமல் போகிறது என ஜாக்கி சான் சமீபத்தில் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் சண்டைக் காட்சிகள் என்றால் உடனே பலருக்கும் ஜாக்கி சான் தான் நினைவுக்கு வருவார். ஒல்லியான தேகம், சிக்ஸ் பேக், வேகமாக சண்டையிடும் திறன் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் முக பாவனை என அனைத்திலும் அசத்துவார் ஜாக்கி சான். 80 மற்றும் 90களில் பிறந்த பலருக்கும் மிகப் பிடித்தமான ஹாலிவுட் நாயகன் இவர் தான். ஜாக்கி சானின் அசாத்திய சண்டைக் காட்சிகள் பலவும் இப்போதுள்ள தலைமுறைக்கும் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
5 வயதில் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடிக்கத் தொடங்கினார் ஜாக்கி சான். இவர் 1960 ஆம் ஆண்டில் இருந்து கிட்டதட்ட 150 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர்களில் அதிகமுறை சண்டைக் காட்சிகளில் நடித்தவர் என்ற கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளார் ஜாக்கி சான்.
போலீஸ் ஸ்டோரி, தி லெஜெண்ட் ஆப் டிரங்கன் மாஸ்டர், ஸ்னேக் இன் தி ஈகிள்ஸ் ஷாடோ, தி யங் மாஸ்டர் மற்றும் தி ஃபியர்லெஸ் ஹைனா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார் ஜாக்கி சான். ஜாக்கி சான் கராத்தே பயிற்சியாளராக நடித்து கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘தி கராத்தே கிட்’ என்ற திரைப்படம் உலகளவில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்தது.
உலகளவில் மெகா ஹிட் வெற்றியைப் பதிவு செய்த இப்படத்தின் அடுத்த பாகம் தற்போது ‘கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.
இப்படத்திலும் ஜாக்கி சான் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற மே 30 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டியொன்றில், ஹாலிவுட் படத்தில் வரும் சண்டைக் காட்சிகளில் உண்மைத் தன்மை இல்லை என வெளிப்படையாக குற்றம் சாட்டியிருக்கிறார் ஜாக்கி சான்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “கிராபிக்ஸ் தொழில்நுட்பம் வந்த பிறகு, ஹாலிவுட்டில் அனைத்து சண்டைக் காட்சிகளுக்கும் இதனைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். இதனால் முன்பைப் போல் சண்டைக் காட்சிகளில் யதார்த்தமும், உண்மைத் தன்மையும் இல்லை. நாங்கள் இளம் வயதில் நடிக்கும் போது சண்டைக் காட்சிகளுக்கு எங்கள் கண் முன் இருந்த ஒரே வழி களத்தில் இறங்குவது மட்டும் தான். ஆனால் இப்போது கம்பியூட்டர் கிராபிக்ஸின் மூலம் நடிகர்களால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். திரையில் இதனைப் பார்க்கும் போது உண்மைத் தன்மை இல்லை என்பதை நம்மால் உணர முடிகிறது” என ஜாக்கி சான் தெரிவித்துள்ளார்.
நவீன உலகில் எதுவும் சாத்தியமே என்பதால், பிரம்மாண்டம் என்ற பெயரில் திரைப்படக் காட்சிகள் கிராபிக்ஸ் செய்யப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.