
தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றி பெற்றால், அதிகமாக கொண்டாடப்படுவது கதாநாயகர்கள்தான். ஆனால், சில படங்களில் மட்டும் கதாநாயகிகள் கொண்டாடப்படுவார்கள். அப்படி ஒரு நாயகி தான் நித்யா மேனன். இவர் சினிமாவில் நுழையும் போது பெரிதாக எந்த இலக்கையும் நிர்ணயித்துக் கொள்ளவில்லை. இருப்பினும் சில படங்களில் நடித்து விட்டு சினிமாவை விட்டு விலகி விடலாம் என்று நினைத்திருந்தார். இந்நிலையில் இவர் தொடர்ந்து நடிக்க காரணமே ஒரு சூப்பர்ஹிட் திரைப்படம் தான் என்பதை சமீபத்தில் தெரிவித்தார். நித்யா மேனன் தொடர்ந்து நடிக்க காரணமாக இருந்த அந்தத் திரைப்படம் எது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கர்நாடகாவில் பிறந்த நித்யா மேனன், மலையாளக் குடும்பத்தைச் சேர்ந்தவர். சினிமா துறையில் கதாநாயகியாக நடிப்பார் என்று, இவரே சில ஆண்டுகளுக்கு முன்பு நினைத்திருக்க மாட்டார். ஏனெனில் இவரது ஆர்வம் முழுக்க பத்திரிகை துறையில் தான் இருந்தது. இதழியல் துறையில் பட்டம் பெற்ற நித்யா மேனன், பத்திரிகை துறையில் பணியாற்றவே விரும்பினார். பிறகு பத்திரிகை துறையில் ஆர்வம் குறைந்ததால், சினிமாவின் பக்கம் வந்துவிட்டார். இதற்காக திரைப்படத் துறையில் ஒளிப்பதிவாளர் படிப்பையும் படித்துள்ளார்.
கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நித்யா மேனனின் சினிமா பயணத்தில், திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் 'திருச்சிற்றம்பலம்'. உறவுகளின் உன்னதத்தை எதார்த்தமாக கூறிய இத்திரைப்படம் 100 கோடி வசூலைக் குவித்து மெகா ஹிட் வெற்றியைப் பதிவு செய்தது. இதுமட்டுமின்றி இத்திரைப்படத்திற்காக நித்யா மேனனுக்கு தேசிய விருதும் கிடைத்தது. படத்தில் இவரது நடிப்புக்கு, பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகளும் குவிந்தன.
ஒருசில ஆண்டுகளில் சினிமாவை விட்டு விலக நினைத்த நித்யா மேனன், தேசிய விருதைப் பெற்றதும் ‘நானே சினிமாவை விட்டாலும், சினிமா என்னை விடாது’ என்பதைப் புரிந்து கொண்டார். சினிமா நடிகையானதால் தனிப்பட்ட சுதந்திரத்தை இழந்து விட்டதாகவும், புகைப்படக் கலைஞர் போல வாழ ஆசைப்படுவதாகவும் சமீபத்தில் நித்யா மேனன் தெரிவித்திருந்தார். சினிமா துறையில் கிட்டத்தட்ட 15 வருடங்களைக் கடந்துள்ள நித்யா மேனனுக்கு, சினிமா என்றாலே சுத்தமாக பிடிக்காதாம்.
வெப்பம், மெர்சல், கீதா கோவிந்தம், காஞ்சனா 2 மற்றும் ஓ காதல் கண்மணி போன்ற பல படங்களில் நடித்துள்ள நித்யா மேனன், தற்போது தனுஷ் இயக்கும் இட்லி கடை படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். சிறந்த நடிகையாக மட்டுமின்றி, பின்னணிப் பாடகியாகவும் சில பாடல்களை பாடியுள்ளார் நித்யா மேனன். மேலும் இவருக்கு திரைக்கதை எழுதுவதிலும் ஆர்வம் உண்டு. கொரோனா ஊரடங்கில் இரண்டு பாடல்களைப் பதிவு செய்தும், ஒரு திரைக்கதையை எழுதவும் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைத்துறையில் இருக்கும் கதாநாயகர்கள் பலருக்கும் பாடகர், இயக்குநர் மற்றும் எழுத்தாளர் போன்ற பன்முகத் திறமைகள் இருக்கிறது. அதேபோல் நடிகைக்கும் பல்வேறு திறமைகள் இருக்கும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் நித்யா மேனன்.