அஜித்தின் குட் பேட் அக்லி படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் அப்படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் அஜித்துடன் நடித்தது குறித்து பேசியிருக்கிறார்.
விடாமுயற்சி படத்திற்கு பின் அஜித்தின் அடுத்தப் படத்திற்கான அப்டேட் கடந்த மார்ச் மாதம் வெளியானது. அஜித்தின் 63வது படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்ற தகவல் வந்தது. இப்படத்திற்கு குட் பேட் அக்லி என்று பெயரிடப்பட்டது.
மைத்திரி மூவிஸ் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகும் இந்தப் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனவும் படக்குழுத் தெரிவித்தது. ஆனால் அதுவும் தள்ளிப்போனது. இயக்குனர் ஆதிக் 'திரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்திற்குப் பிறகு தொடர் தோல்விகளையே சந்தித்து வந்தார். இந்தநிலையில் அவரின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்று வசூலை ஈட்டியதால், அவர் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
இப்படியான நிலையில், இவரின் அடுத்த படமான குட் பேட் அக்லி ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பை தாங்கி நின்றது. இதற்கு மற்றொரு காரணம் அஜித்தான். விடாமுயற்சி படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இதனால், அஜித் ரசிகர்கள் குட் பேட் அக்லி படத்தை நம்பியிருந்தார்கள். அஜித்தை நம்புவோர் கைவிடப்படமாட்டார் என்பதுபோல், படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தின் ட்ரைலரிலேயே மற்றொரு கதாபாத்திரம் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆம்! அது அர்ஜுன் தாஸ் கதாபாத்திரம்தான். அந்தவகையில் அர்ஜுன் தாஸ் அஜித் குறித்து பேசியதைப் பார்ப்போம். “D’ONE நிறுவனத்தில் நான் வேலை செய்த போது அஜித் சாருடைய படங்களுக்கான மார்க்கெட்டிங் விளம்பரங்கள் எல்லாம் செய்வேன். அப்போது அஜித் சாரின் படங்களில் அவருடன் நடிப்பேன் என்று ஒருபோதுமே நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால், பல வருடங்களுக்குப் பிறகு அது உண்மையாகி இருக்கிறது.
D’ONEல் நாங்கள் இரவு முழுவதுமே கண்விழித்து அதிகாலையில் தியேட்டருக்கு சென்று பார்வையாளர்களின் வரவேற்பை கவனிப்பதெல்லாம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஒரே வித்தியாசம் தான், நான் அவருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி அஜித் சார். இது உங்கள் மீதான முழுமையான மரியாதை, உங்களுடன் பணிபுரியும் ஒவ்வொரு நாளையும், உங்கள் கருணையும், உரையாடல்கள், நகைச்சுவைகள், கொடுத்த ஆலோசனைகள் எல்லாவற்றையும் கொண்டாட்டத்துடன் மதித்து எப்போதுமே போற்றுவேன். இப்போது நான் நடித்திருப்பது உங்களால் உங்களுக்காக தான்.” என்று பேசினார்,.