
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குநர்களில் ஒருவர் சுந்தர் சி. இவரது திரைப்படங்கள் காமெடி கலந்த திரைக்கதையாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. தற்போது பேய் படங்களின் வரிசையில் அரண்மனை திரைப்படத்தின் 4 பாகங்களை எடுத்து முடித்துள்ளார். அடுத்ததாக மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சினிமாவில் தான் செய்த முதல் வேலை குறித்தும், தனது வெற்றிக்கான காரணத்தையம் பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.
தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் கதாநாயகர்களாக நடிப்பது சமீபத்தில் அதிகமாக நடக்கிறது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னரே நடிகர் அவதாரம் எடுத்தவர் இயக்குநர் சுந்தர் சி. அருணாச்சலம், அன்பே சிவம், அரண்மனை, ஆம்பள, உள்ளத்தை அள்ளித்தா, உள்ளம் கொள்ளை போகுதே, உன்னைத் தேடி, கலகலப்பு, கிரி, சின்னா, முறை மாமன், ரிஷி மற்றும் வின்னர் போன்ற திரைப்படங்கள் சுந்தர் சி இயக்கிய வெற்றித் திரைப்படங்களாகும். இதுதவிர்த்து முத்தின கத்திரிக்காய், இருட்டு, அரண்மனை, தீ, ஆயுதம் செய்வோம், சண்டை, வீராப்பு மற்றும் தலைநகரம் போன்ற பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
சுந்தர் சி சினிமாவில் நுழைய முதல் வாய்ப்பை அளித்தவர் மணிவண்ணன் தான். இவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சுந்தர் சி பலவற்றைக் கொண்டு தான், இன்று வெற்றிகரமான இயக்குநராக மிளிர்கிறார். இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் இல்லாத அன்றைய காலத்தில், சுந்தர் சி தனது பணியை திறம்படச் செய்தது மணிவண்ணனின் ஆளைமையால் தான். சமீபத்தில் சினிமாவில் தான் செய்த முதல் வேலை குறித்து சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்திருக்கிறார் சுந்தர் சி.
முதல் வேலை குறித்து பேசிய சுந்தர் சி, “நடிகர் சத்யராஜ் பைக்கில் வரும் காட்சியை ஷூட் செய்வதற்காக கேமிராவை நடுரோட்டில் வைத்திருந்தோம். கேமிரா முன்னாடி சாணி இருந்தது. மணிவண்ணன் சார் சாணியை எடுங்கடா என்று சொன்னார். நான் உடனே இன்னொருவரை எடுக்கச் சொன்னேன். அதற்கு ஏன் நீ எடுக்க மாட்டியா என கெட்ட வார்த்தையில் திட்டினார் மணிவண்ணன். அதன்பிறகு நானே சாணியை எடுத்து விட்டேன். சினிமாவில் நான் செய்த முதல் வேலை சாணி அள்ளுனது தான்.
இன்றைக்கு நான் ஒரு இயக்குநராக தமிழ் சினிமாவில் தடம் பதித்திருக்கிறேன் என்றால் அதற்கு முழுக்க முழுக்க மணிவண்ணன் சார் தான் காரணம். எந்த வேலையும் அவமானம் அல்ல; ஆகையால் எதற்கும் தயங்கக் கூடாது என்பதை நான் முதல் நாளிலேயே கற்றுக் கொண்டேன். முதல் நாள் சினிமா ஷூட்டில் சாணி அள்ளியது, எனக்கு இன்று வரை உதவுகிறது. அனைத்து வேலைகளையும் நாமே இழுத்துப் போட்டுச் செய்ய வேண்டும் என்பதை நான் மணிவண்ணன் சாரிடம் தான் கற்றுக் கெண்டேன்” எனக் கூறினார்.
எந்த வேலையும் அவமானம் என்பதை இன்றைய இளம் கலைஞர்களும் புரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும். அப்போது தான் வெற்றி எளிதில் நம் வசமாகும்.