
தமிழ் சினிமா கண்ட கதாநாயகர்களில் ஒருசிலர் மட்டுமே அதிகளவில் காமெடி காட்சிகளில் நடிப்பார்கள். இதில் நக்கல் நையாண்டியுடன் காமெடி காட்சிகளில் சிறப்பாக நடிப்பவர் நடிகர் ஜீவா. சந்தானத்துடன் இவர் இணைந்து நடித்த படங்கள் எல்லாமே, காமெடி சரவெடியாக அமைந்திருக்கும். இருப்பினும் சில படங்களில் சீரியஸான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். திரைப்பட விருதுகள் குறித்து சமீபத்தில் மனம் திறந்த ஜீவா, தனக்கு எது பெரிய விருது என்பதை தெரிவித்துள்ளார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு ‘ஆசை ஆசையாய்’ என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித் திரைக்கு வந்தவர் ஜீவா. இவரது தந்தை ஆர்.பி.சௌத்ரி படத் தயாரிப்பாளர் என்பதால், சினிமா வாய்ப்பு மிக எளிதாகவே கிடைத்து விட்டது. இவரது நடிப்பில் 2005 இல் வெளிவந்த ராம், 2006 இல் வெளிவந்த ஈ மற்றும் டிஸ்யூம், 2009 இல் வெளிவந்த சிவா மனசுல சக்தி ஆகிய திரைப்படங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க படங்களாகும்.
2007 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான கற்றது தமிழ் திரைப்படம் தமிழ் மாணவர்கள் குறித்த புதிய பரிணாமத்தை வெளிப்படுத்தியது. இவரது சினிமா பயணத்தில் கற்றது தமிழ் படத்தில் நடிக்க தான் மிகவும் கஷ்டப்பட்டார். இப்படத்தில் ஜீவாவின் நடிப்பிற்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும் என பலரும் கூறியிருந்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த ஜீவா விருதை வாங்கி விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
ஆனால் எந்த விருதும் ஜீவாவிற்கு கிடைக்கவில்லை. ஏனெனில் அச்சமயத்தில் படத்தின் தயாரிப்பாளர் இறந்து விட்டதால், விருதுக்கு விண்ணப்பிக்க முடியாமல் போனது. அதிலிருந்து விருது மேல் இருந்த ஆசையையே துறந்து விட்டார் ஜீவா. அதன் பிறகு ரசிகர்களும், மக்களும் கொடுக்கும் பாராட்டுகள் தான் உண்மையான விருது என உணர்ந்து கெண்டார். அதிலிருந்து எந்த விருது நிகழ்ச்சியிலும் ஜீவா பங்கேற்பதில்லை என சமீபத்தில் ஜீவா தெரிவித்தார்.
ஜீவா நடித்த ராம் மற்றும் கற்றது தமிழ் ஆகிய படங்கள் வெளியாகி, பல ஆண்டுகளுக்குப் பிறகே மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. அம்மா மகன் பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ராம் திரைப்படத்திற்கு சுமார் 4 ஆண்டுகள் கழித்தே பாராட்டு கிடைத்து. அதேபோல், கற்றது தமிழ் திரைப்படத்திற்கு 10 ஆண்டுகள் கழித்தே பாராட்டு கிடைத்தது. சரியான நேரத்தில் ஒரு படத்தை அங்கீகரிக்காவிட்டால், அது அப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்குமே வருத்தமாக இருக்கும். இந்த நிலையை இரண்டு முறை அல்ல மூன்று முறை அனுபவித்திருக்கிறார் ஜீவா.
ராம் மற்றும் கற்றது தமிழ் படத்தோடு, 2021 இல் வெளியான 83 படத்திற்கும் ஜீவா எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. இந்திய கிரிக்கெட் அணி முதல் உலகக்கோப்பையை வென்றது எப்படி என்பதை 83 படத்தின் மூலம் திரைக்கு கொண்டு வந்தனர். இதில் தமிழக முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்திருந்தார்.
பான் இந்திய அளவில் வெளியான இப்படம், தமிழகத்தில் மட்டும் சோபிக்கவில்லை. தற்போது மாறுபட்ட கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் ஜீவா, ஒரு பெரிய வெற்றியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்.