
தமிழ் சினிமாவில் கதாநாயகர்களின் எண்ணிக்கைக்கு பஞ்சமே இல்லை. அடிக்கடி புதுப்புது ஹீரோக்கள் திரைக்கு வந்து விடுகின்றனர். இது போதாதென இயக்குநர்களும், இசையமைப்பாளர்களும் கூட ஹீரோவாக நடிக்கத் தொடங்கி விட்டனர். இருப்பினும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் சினிமா வாய்ப்பை இழந்தவர்கள் பலபேர். அதில் ஒரு நடிகர் தனது ஆதங்கத்தை சமீபத்தில் தெரிவித்துள்ளார். யார் அந்த நடிகர்? என்ன சொல்லியிருக்கிறார் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் புதிய ஹீரோக்களின் வருகை நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் யார் பல ஆண்டுகள் தாக்குப் பிடிக்கிறார்கள் என்பது தான் முக்கியம். வாரிசு நடிகர்களே ஆனாலும், படம் நன்றாக இருந்தால் தான் வெற்றி பெறும். இருப்பினும், என்னுடைய வாய்ப்புகளை வாரிசு நடிகர்கள் தட்டிப் பறித்து விட்டனர் என குமறுகிறார் நடிகர் ஷாம். சினிமா பின்புலம் இல்லாத நடிகர்கள் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்பது சற்று கடினம் தான் என்றாலும், நல்ல படங்கள் அமைந்தால் நிச்சயம் வெற்றி அடையலாம்.
ஷம்சுத்தீன் இப்ராஹிம் என்ற பெயரை சினிமாவிற்காக சுருக்கிக் கொண்டார் நடிகர் ஷாம். கடந்த 2000 இல் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளிவந்த குஷி திரைப்படத்தில், விஜய்க்கு நண்பனாக நடித்து வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்தார் ஷாம். அதன்பின்பு 2001 ஆம் ஆண்டில் 12B படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, பாலா, அன்பே அன்பே, லேசா லேசா, இயற்கை, ABCD, மனதோடு மழைக்காலம் மற்றும் இன்பா போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார். இருப்பினும் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால், கிடைக்கும் சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தில்லாலங்கடி திரைப்படத்தில் போலீஸ் வேடத்திலும், கடந்த ஆண்டு வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணனாகவும் நடித்திருந்தார். இவரது சினிமா பயணம் முன்னேறாமல் போனதற்கு வாரிசு நடிகர்கள் தான் காரணம் என சமீபத்தில் உருக்கமாக பேசினார். இதுகுறித்து ஷாம் மேலும் கூறுகையில், “நான் 2001 ஆம் ஆண்டில் ஹீரோவாக அறிமுகம் ஆனேன். அதற்கு அடுத்த ஆண்டிலேயே சிம்பு, தனுஷ், ஜீவா, விஷால் மற்றும் ஜெயம் ரவி என பல வாரிசு நடிகர்கள் அறிமுகம் ஆனார்கள்.
இவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சினிமாத் துறையில் இருந்ததால், அது இவர்கள் அனைவருக்குமே பேருதவியாக இருந்தது. இதன் காரணமாக எனக்கான பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்தது. ஒரு விதத்தில் எனது சினிமா பயணம் வெற்றியடையாமல் போனதற்கு வாரிசு நடிகர்கள் தான் காரணம்” என உருக்கமாக தெரிவித்துள்ளார் ஷாம்.
நடிகர் ஷாம் நடிப்பில் வெளியான படங்கள் பலவும் பெரிய வெற்றியைப் பெற்றதில்லை. இருப்பினும், லேசா லேசா, இயற்கை மற்றும் அன்பே அன்பே போன்ற சில படங்கள் மட்டும் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றன.