80களில் முன்னணி நடிகராக விளங்கிய ராம்கி 7 வருடங்களாக வீட்டுக்கு போகாதது குறித்து பேசியிருக்கிறார்.
ராமகிருஷ்ணன் என்கின்ற ராம்கி 1987ம் ஆண்டு சின்ன பூவே மெல்ல பேசு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின், தமிழ் சினிமாவில் செந்தூர பூவே (1988), மருது பாண்டி (1990), இணைந்த கைகள் (1990), ஆத்மா (1993), கருப்பு ரோஜா (1996) மற்றும் RX 100 (2018) போன்ற வெற்றிகரமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார்.
அப்போதைய பெண்களுக்கு கனவு கண்ணனாக இருந்தவர்தான் ராம்கி. அந்தவகையில் சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படத்தின்மூலம் மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்தார். இந்தப் படத்தில் மரியாதைக்குரிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இளைஞர்கள் மனதையும் பிடித்துவிட்டார். குணச்சித்திர நடிகராக வலம் வந்தாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தே வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய ராம்கி தனது சொந்த வாழ்க்கைப் பற்றி பேசியிருக்கிறார். “எங்க வீட்ல யாருக்கும் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அவங்கள பொருத்தவரை சிகரெட் பிடித்தாலே ரொம்ப பெரிய தவறு. என் வீட்ல எல்லாருமே ரொம்ப நல்லா படித்தவர்கள். ஆனால் எனக்கோ படிப்பு சுத்தமாக வரவில்லை.
அதனால் அப்பா என்னை தண்ணீர் தெளித்துவிட்டார். அதன்பிறகு சுமார் 7 வருடங்கள் நான் வீட்டு பக்கமே செல்லவில்லை. இதன்பிறகுதான் 1987ம் ஆண்டு ஹீரோவாக நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது. அப்போ நான் நடித்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. எங்க அப்பா அந்த படத்த பாத்துட்டு நான் தான் இவனோட அப்பா அப்படின்னு சொல்ற அளவுக்கு நான் என்னோட நிலைமையை மாற்றினேன். அதன்பிறகுதான் என்னுடைய வீட்டிற்கு சென்றேன்.” என்று பேசியிருக்கிறார்.
அந்த காலத்தில் சினிமாவுக்கு வருவது என்பதே சவாலானது. அதற்கு இதுபோன்ற பல பிரச்னைகளை சந்தித்தே ஆக வேண்டும். அதேபோல்தான் ராம்கியும் தனது வாழ்க்கையில் பல பிரச்னைகளை சந்தித்து பெரிய ஹீரோவாக கலக்கினார்.