
குழந்தைகளின் உலகம் சிறிய சந்தோஷங்களால் ஆனது. காத்தாடி, சைக்கிள், ரிப்போர்ட் கார்ட், தங்கை தம்பியர், நண்பர்கள், அப்பா அம்மா.... இவை மட்டுமே அவர்கள் உலகம். கண்டிப்பும் பாசமும் கலந்து இருப்பது பெற்றோர்களிடம் அவர்களைச் செலுத்துகிறது. ஒரு தந்தையின் கண் மண் தெரியாத அதட்டலும் அடிகளும் அவர்களை அவரிடமிருந்து அந்நியப்படுத்துகின்றன. விலகி ஓட வைக்கின்றன. அப்படி தன்னை அடி வெளுக்கும் தந்தைக்குப் பயந்து ஒரு சிறுவன் எடுக்கும் முடிவும் அதில் துணையாக நிற்கும் அவன் தங்கையும் சந்திக்கும் சம்பவங்கள் தான் பாராச்சூட்.
டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள இந்தச் சீரிஸ் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இருப்பது முதல் ஆசுவாசம். ஐந்தே எபிசோட்களில் முடித்து வைத்தது இரண்டாவது ஆச்சரியம். ஒவ்வொரு சீரிஸும் எட்டு எபிசோட்கள் இருக்க வேண்டும். கெட்ட வார்த்தைகள் ரத்த மயமான கதையோட்டம் என்று இருக்க வேண்டும் என்ற நிலையில் இது மிகப்பெரிய மாற்றம்.
தனது தந்தைக்குத் தெரியாமல் அவரது டிவிஎஸ் வண்டியை எடுத்துக் கொண்டு தங்கை ருத்ராவுடன் அவளுடைய பிறந்த நாளைக் கொண்டாட செல்கிறான் வருண். அந்த வண்டியைப் போலீஸ் சீஸ் செய்து கொண்டு சென்றுவிட, அதை மீட்க போகும் நேரம் அது ஒரு கடத்தல் கோஷ்டியால் எடுத்துச் செல்லப்படுகிறது. அதை மீட்க தங்கையுடன் துரத்திச் செல்கிறான் வருண். வீட்டில் சென்றால் தடியால் அப்பா அடிக்கும் அடிதான் அவனைப் பீதிக்கு உள்ளாக்குகிறது. அதே வண்டியில் கடத்தல் காரர்கள் தூக்கிச் செல்லும் ஒரு வெளிநாட்டு பைக்கைத் தேடி செல்கிறார் காவலர் கிருஷ்ணா. இந்தத் தேடுதலில் இவர்களின் அப்பா சமுத்திரக்கனியும் பெயர் சொல்லாத அம்மாவும் இணைகிறார்கள். இறுதியில் என்ன ஆனது என்பது தான் கதை.
இந்தக் காலத்தில் ஒரு வண்டியையும் ஒரு அண்ணன் தங்கையையும் வைத்துக் கொண்டு ஒரு பாசமலர் சீரிஸ் எடுக்க துணிச்சல் வேண்டும். அது இயக்குனர் ராசு ரஞ்சித்திடம் இருந்திருக்கிறது.
கண்டிப்பான அப்பாவாகக் கிஷோர். அனுசரணையான பக்கத்து வீட்டு ஆசாமியாகக் காளி வெங்கட். சிலிண்டர் போடும் ஆசாமியாக வரும் கிஷோர் மற்றும் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா இருவரும் கோபத்தால் தங்கள் வேலைகளில் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் இருவருக்குமே ஒரு கட்டத்தில் முட்டிக் கொள்கிறது. இவர்களின் பாத்திரப்படைப்புகளை கொஞ்சம் விரிவு படுத்தி இருக்கலாம். சுவாரசியம் சற்று கூடியிருக்கும்.
காணாமல் போன குழந்தைகளைத் தேடித் செல்லும் இவர்களுக்கு எதிராக ஒரு பிரச்சினையாக இருப்பது கர்நாடகா தமிழ்நாடு கலவரம் மட்டுமே. ஆனால் அதை அதிகமாகக் காட்சிப் படுத்தாமல் விட்டது ஒரு குறை. மேம்போக்காகத் தாகத்துக்குத் தவிக்கும் குழந்தைக்குக் கூடத் தண்ணீர் தர மறுப்பது போலக் காட்டி முடித்து விட்டார் இயக்குனர். குழந்தைத்தனமாக அந்தச் சிறுவன் செயல்படுவதும் சின்னத் தங்கையையும் அதில் ஈடுபடுத்துவதும் முதலில் பதற்றத்தை ஏற்படுத்தினாலும் பின்னால் அது குறைந்து விடுகிறது.
வலுவான வில்லன்களோ அழுத்தமான காட்சிகளோ இல்லாதது மைனஸ். மிகச் சுலபமாக ஊகிக்கக்கூடிய காட்சி அமைப்புகளும் இதே போல் தான்.
பெற்றவர்களிடம் வந்து தங்கள் பிரச்சினைகளைச் சொல்லும் அளவு அவர்கள் நடந்து கொள்ள வேண்டும். அவர்களைக் கண்டு பயந்து ஓடும் அளவு நடந்து கொள்ளக் கூடாது. இந்த ஒரு கருத்தைச் சொல்ல இவர்கள் எடுத்துக் கொண்ட ஐந்து எபிசோட்களே அதிகமாகத் தோன்றும் அளவு இருந்ததும் ஒரு குறை. சற்றே திரைக்கதையில் கவனம் செலுத்தி, சில பல சுவாரசியமான காட்சிகளைக் கூட்டியிருந்தால் இந்தச் சீரிஸ் இன்னும் கவனம் பெற்றிருக்கும்.
வருணாகச் சக்தி, ருத்ராவாக இயல் என இருவரும் கச்சிதம். அதுவும் அந்தப் சின்னப்பெண் தனது நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். மிகவும் ஆபத்தான ஒரு கட்டத்தில் கடைசியில் தனது அப்பாவைச் சந்திக்கும் வருண் அதைவிட இதை ஆபத்தாக நினைத்துச் ஓடி ஒளிவதும் சிறுநீர் கழிப்பதும் சற்றே கண்ணைக் கலங்க வைக்கிறது. கண்டிப்புக்கும் சித்ரவதைக்கும் உள்ள வித்தியாசம் நூலிழை தான் என்பதை அந்தக் காட்சி நன்கு உணர்த்துகிறது.
சில பல லாஜிக் மீறல்கள், நம்பமுடியாத சம்பவங்கள், சற்றே வாகாகச் சென்று முடியும் கிளைமாக்ஸ் என்று சில சறுக்கல்கள் இருந்தாலும் அந்தச் சிறுவர்கள் நடிப்புக்காகவும், இயல்பான சில காட்சியோட்டங்களுக்காகவும் இதைப் பார்க்கலாம். பெண்களும் சிறுவர்களும் இதை விரும்பலாம். இளைஞர்கள் 'இவ்வளவு க்ரிஞ்சா' என்று ஒதுக்கலாம்.