விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் முதல் சாய்ஸ் நமக்கு பிடித்த முன்னணி காமெடியன்தான். அவர் யார் என்று தெரிந்தால், அந்த கதைக்கு நிஜமாக அவர் செட்டாகியிருப்பாரா? என்ற சந்தேகம் உங்களுக்கே தோன்றும்.
1999ம் ஆண்டு வெளியான துள்ளாத மனமும் துள்ளும் படம் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. முழுக்க முழுக்க ஒரு காதல் படமாக எடுக்கப்பட்ட இதில், விஜய் மற்றும் சிம்ரனின் கதாபாத்திரங்கள் சிறப்பாக செதுக்கப்பட்டிருக்கும். மனதை வருடும் பாடல்கள், லேசான கதை மற்றும் திரைக்கதை ஆகியவை அவ்வளவு அழகாக இருக்கும். இப்படத்தின் இயக்குநர் எழில். இவர் பெண்ணின் மனதை தொட்டு, பூவெல்லாம் உன் வாசம், மனம் கொத்திப் பறவை போன்ற படங்களை இயக்கினார்.
இயக்குநருடன் பணியாற்றிய கரு.பழனியப்பன் பல வருடங்களுக்கு முன்பு ஒரு செய்தியாளர் சந்திப்பில் இப்படம் குறித்து பேசினார். அப்போது, “எத்தனை வெற்றிகள் வந்தாலும் அலட்டிக் கொள்ளாத மனிதர் எழில். துள்ளாத மனமும் துள்ளும் கதையை பல ஹீரோக்களிடம் சொல்லி கால்ஷீட் கேட்டுக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் அப்போதைய வடிவேலு வரை இந்தக் கதையில் நடிக்கக் கேட்டுக் கொண்டிருந்தோம். கதையை கேட்ட வடிவேலு, 'இது ரொம்ப நல்ல கதை. ஆனா இந்த நல்ல கதையில் நான் நடிக்கணுமா? நல்லா யோசிச்சு பாருங்க.
ஒரு நல்ல கதைய நான் நடிச்சு வீணடிக்க விரும்பல. 6 மாசம் காத்திருந்து அப்பறம் வாங்க, அப்பவும் உஙளுக்கு இதே மனநிலை இருந்தா நான் நடிச்சு குடுக்குறேன்' என்றார். அதன்பிறகு சூப்பர்குட் ஃபிலிம்ஸ் படத்தைத் தயாரிக்க முன்வந்தது. விஜய் கால்ஷீட் தந்தார். இல்லாவிட்டால் வடிவேலுதான் நடித்திருப்பார். வடிவேலு நடித்திருந்தால் இந்த திரைப்படத்தில் விஜய் நடித்திருக்க முடியாது." என்று கூறினார்.
சில காலங்களுக்கு முன்னர் இப்படத்தில், முதலில் ரம்பா மற்றும் முரளி ஆகியோர் நடிக்கவிருந்தனர். ஆனால், சில காரணங்களால் அவர்கள் நடிக்கவில்லை.
நினைத்துப் பாருங்களேன். இந்தப் படத்தில் வடிவேலு நடித்திருந்தால், படம் எப்படியிருந்திருக்கும். அப்படத்தின் கதை, ஒரு காமெடியனை கதாநாயகனாக மாற்றிருக்கும்.