பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி நடித்த ஒரு படம் ஒரு ரூபாய் கூட வசூலிக்காது என்று ரஜினி கூறியதாக எழுத்தாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் வேராக இருந்த இரண்டு நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி கணேசன். இருவரும் இரு வேறு ஸ்டைல்களை வைத்துக்கொண்டாலும், சம அளவு ரசிகர்களை பெற்றிருந்தார்கள். குறிப்பாக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிவாஜி கணேசன். அவர் கர்ணனாக நடித்து மக்கள் மனதில் அந்த கதாபாத்திரத்தைப் பதிய செய்தவர். மேலும் கட்டபொம்மன் போன்ற கதாபாத்திரங்கள் இன்றும் மக்களை ஈர்த்திருக்கிறது.
இவர் நடித்த படங்கள் ஏராளம், வயதான பிறகும் பல படங்களில் நடித்து வந்தார். அப்போதைய காலத்தில் அதிகபட்ச சம்பளமே லட்சம்தான். பிறகு அடுத்த கட்டம் வரும்போது அதாவது கமல் ரஜினி வரும்போது அவர்களுக்கு சம்பளம் கோடி கணக்கில் மாறினாலும், சிவாஜி வெறும் லட்சக் கணக்கில் மட்டுமே வாங்கி வந்தார்.
சிவாஜியும் ரஜினியும் பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். எப்போதும் சிவாஜி மீது ரஜினிக்கு ஒரு பாசமும் பற்றும் உள்ளது என்றே கூறலாம். இதற்கு சாட்சி ஒன்று உள்ளது. படையப்பா படத்தில் கே.எஸ்.ரவிகுமார் சிவாஜிக்கு ஒரு கோடி செக் கொடுத்திருக்கிறார். அதனை ரஜினிதான் கொடுக்க சொன்னார் என்று ரவிகுமார் கூறியும் இருக்கிறார்.
இப்படியான நிலையில், சிவாஜியின் ஒரு படத்தைப் பற்றி ரஜினி மோசமாக விமர்சித்திருக்கிறார் என்று பிரபல கதாசிரியர் கூறியதுதான் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
அன்னக்கிளி பட கதை எழுதிய பிரபல கதாசிரியர் செல்வராஜ் கூறியிருப்பதாவது :-
முதலில் முதல் மரியாதை திரைப்படமானது தயாரிக்கப்பட்டு அனைவரும் பார்த்த பொழுது ரஜினி அவர்கள் இந்த படம் குருட்டு அதிர்ஷ்டத்தில் கூட ஓடாது என சொன்னார்.
ஆனால் பாரதிராஜாவோ தன்னிடம் தைரியமாக இரு ஐயா இந்த படம் கண்டிப்பா வெற்றி பெறும் எனவும், அதன்பின் திருச்சியில் மாய்ஸ் தியேட்டர் ஓனர் ராமசாமி பார்த்த பின்பு திருச்சி மற்றும் தஞ்சாவூர் இரண்டுக்கும் விநியோக உரிமையை வாங்கிக் கொண்டதாகவும் பின் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.