
ஒரே ஒரு பாடல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் பேவரெட்டாக மாறிவிட்டார் ஒரு பாடகி. அவர் வேறுயாமில்லைங்க. நம்ம சின்மயி தான். தக் லைஃப் திரைப்படம் யாருக்கு வெற்றியை கொடுத்ததோ இல்லையோ, நம்ம சின்மயிக்கு ‘கம்பேக்’ கொடுத்திருக்குனு சொல்லலாம். 4 வருடங்களாக பல இன்னல்களுக்கு பிறகு தற்போது அவருக்கு பாடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
பாடகி சின்மயி, #MeToo பிரச்சனையில், வைரமுத்துவின் மீது குற்றம் சாட்டிய போது, பெரும்பாலானோர் அவருக்கு ஆதரவாக துணைநிற்காமல் இவருக்கு பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து கண்டனங்கள் எழுந்தது. அதுமட்டுமின்றி சின்மயி டப்பிங் பேசவும், பாடவும் தடை விதிக்கப்பட்டது. இந்த பிரச்சனையால் சின்மயிக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ் படங்களில் பாடுவதற்கு வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது.
ஆனால், தற்போது ‘முத்தமழை’ பாடல் சின்மயியின் அனைத்து தடைகளையும் உடைத்து எறிந்து விட்டது. இப்போது தமிழிலும் பாட ஆரம்பித்து விட்டார் சின்மயி.
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் கூட்டணியில் கடந்த 5-ம்தேதி வெளியான 'தக் லைப்' திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் கலவையான விமர்சனங்களையே பெற்றது. 'தக் லைப்' படத்தில் இடம்பெற்றிருந்த 'முத்த மழை' பாடலை பாடகி தீ பாடியுள்ளார். ஆனால் 'முத்த மழை' பாடலின் சின்மயி வெர்ஷன்தான் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்துள்ளது. அதாவது, தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தீ பாடவிருந்த இப்பாடலை, அவர் வர இயலாததால் சின்மயி பாடி அனைவரையும் கவர்ந்தார்.
அந்த பாடலை ரசிகர்கள் யூடியூபில் டாப் டிரெண்டிங் ஆக்கி கலக்கினார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், சிவா அனந்த் வரிகளில் உருவான இப்பாடல், உலக டிரெண்டிங் பாடல்கள் லிஸ்டில் 10-ம் இடத்தையும், இந்திய டிரெண்டிங் பாடல்கள் லிஸ்டில் 8-ம் இடத்தையும் பிடித்ததுடன் 5 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
சின்மயி ‘முத்தமழை’ பாடலை மேடையில் பாடி, ஒரு மாதம் கடந்து விட்டது. ஆனால், அவர் பாடிய அந்த வீடியோ இன்னும் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. தக் லைஃப் படத்தின் டிரைலரே 35 மில்லியனில்தான் இருக்கிறது. ஆனால் நான்கு வாரங்களுக்கு முன்பு வெளியான இந்த பாடல், தற்போது வரை யூடியூப் தளத்தில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது என்பதை கூகுள் தேடல் முடிவுகள் உறுதி செய்கின்றன. இது குறித்து சின்மயி தனது எக்ஸ் தளத்தில், ‘50 மில்லியன் பார்வைகளுக்கும், கடவுளுக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.
முத்தமழை பாடல் ஹிட் ஆனதற்கு பிறகு, டி.இமான் பாடகி சின்மயிக்கு முதன் முதலாக பாட வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
சின்மயி பாடல் சகாப்தம் தொடங்கி விட்டது.. இனி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்....