சினிமாவில் ஒரு படம் வெற்றி அடைவதற்கு இசையும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருசில படங்கள் இசை மற்றும் பாடல்களுக்காகவே தியேட்டரில் வசூலைக் குவித்துள்ளன. தமிழ் சினிமாவில் இன்றைய காலகட்டத்தில் இசையமைப்பாளர்களின் எண்ணிக்கை அதிகம். இதற்கு முக்கிய காரணமே இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான். இவரிடம் பயிற்சி பெற்றவர்கள் தான் தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமாகி உள்ளனர். இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானிடம் பயிற்சி பெற்ற இசையமைப்பாளர்கள் குறித்து சமீபத்தில் அவரிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. இதற்கு மிகவும் பொறுமையாக நேர்மறையான பதிலைக் கொடுத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.
தமிழ் சினிமாவில் இளையராஜா உச்சத்தில் இருந்த சமயம், ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர்.ரகுமான். அன்றிலிருந்து இன்று வரை பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து, மிகப்பெரிய இசையமைப்பாளராக வளர்ந்திருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான ராயன் திரைப்படம் வெற்றி அடைந்ததற்கு ஏ.ஆர்.ரகுமானின் இசையும் ஒரு முக்கிய காரணம். படத்தின் கிளைமேக்ஸில் வரும் ‘உசுரே நீ தானே’ பாடல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிம்பு நடித்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு இசையமைத்திருக்கும் ஏ.ஆர்.ரகுமான் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது, "ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் மற்றும் சாய் அபயங்கர் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் உங்களிடம் பயிற்சி பெற்று மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளனர். இதனைப் பார்க்கும் போது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா அல்லது பொறாமையாக இருக்கிறதா?" என ஏ.ஆர்.ரகுமானிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான், “உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்; எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம் தான் இது. இன்றைய காலகட்டத்தில் அதிகளவில் திரைப்படங்கள் வெளியாகின்றன. இசையமைப்பாளர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. நிறைய இசையமைப்பாளர்கள் இல்லையென்றால் பலரும் என்னைத் தேடியே வருவார்கள். ஒரே நேரத்தில் பல படங்களில் இசையமைக்க முடியாது என்று சொன்னால், என்னுடன் இணைந்து ரகுமான் படத்தில் பணிபுரிய மாட்டாரா என்று குறை கூறுவார்கள். ஆனால் இப்போது அந்தப் பிரச்சினையே இல்லை.
அனிருத், சாய் அபயங்கர் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்து இசையமைப்பதால், என்னுடைய திரைப்படங்களுக்கு இசையமைக்க எனக்கு அதிக நேரம் கிடைக்கிறது. இதன் காரணமாக என்னால் தரமான இசையைக் கொடுக்க முடிகிறது.
நாம் எவ்வளவு குறைவான படங்களுக்கு இசையமைக்கிறோமோ, அந்த அளவிற்கு தரமான இசையையும் கொடுக்க முடியும். அந்த வகையில் இவர்களின் வளர்ச்சி எனக்கு நன்மையைத் தான் தருகிறது” என அவர் கூறினார்.
ஏ.ஆர்.ரகுமானின் இந்த நேர்மறையான எண்ணங்கள் தான், அவரை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது. இன்று தமிழ்த் திரையுலகில் இசைத்துறையில் ஒரு புதிய சகாப்தத்தையே அவர் உருவாக்கியுள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது.