தமிழ் சினிமாவில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி, வெற்றிகரமான கூட்டணியாக வலம் வந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் உள்ளிட்ட 4 படங்களில் தனுஷ் நடித்துள்ளார். இந்த 4 படங்களுமே மெகாஹிட் வெற்றியைப் பதிவு செய்தன. தற்போது 5வது வெற்றிக்காக இருவரும் மீண்டும் கூட்டணி சேர்கின்றனர். இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் தற்போது சூர்யா நடிக்கும் வாடி வாசல் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் முதல் கட்டப் பணிகள் தொடங்கி விட்ட நிலையில், படத்தை முடித்த கையோடு தனுஷை இயக்கவிருக்கிறார். ஏற்கனவே வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை நிச்சயமாக எடுப்பேன் என உறுதியளித்தார் வெற்றிமாறன். அவ்வகையில் தனுஷை வைத்து வடசென்னை-2 எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இருப்பினும் வடசென்னை-2 படத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஒருவேளை தனுஷ் மற்றும் மணிகண்டனை வைத்து தான் வடசென்னை-2 படத்தை எடுக்கப் போகிறாரா வெற்றிமாறன் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது. தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தையும் சேர்த்தால் தனுஷின் அடுத்த 3 படங்களையும் வேல்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. தனுஷ் நடிக்க, விக்னேஷ் ராஜா மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இரண்டு படங்களைத் தயாரிக்கவுள்ளது வேல்ஸ் நிறுவனம். இந்தப் பட்டியலில் தற்போது வெற்றிமாறனும் இணைந்திருக்கிறார். முதலில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தான் தனுஷ் நடிக்கவுள்ளார். இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கி விட்ட நிலையில், விரைவில் படப்பூஜையுடன் ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது.
தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இன்று முன்னணி இயக்குநராக இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணமே தனுஷ் தான். தனுஷ் கொடுத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட வெற்றிமாறன் பெல்லாதவன் என்ற தரமான படத்தைக் கொடுத்தார். அதற்குப் பின் அவர் அடுத்த படத்திற்கான கதையை எழுதி முடித்ததும், இதிலும் தனுஷ் நடித்தால் தான் சரியாக இருக்கும் என நினைத்தார். அந்தப் படம் தான் ஆடுகளம்.
வெற்றிமாறனின் திறமையைக் கண்டு பல நடிகர்கள் எனக்கும் ஒரு கதையை எழுதுங்கள்; இணைந்து பணியாற்றலாம் எனக் கூறினர். ஆனால் அவர் எழுதிய அடுத்த கதைக்கும் தனுஷ் தான் பொருத்தமாக இருந்தார் என வெற்றிமாறனே ஒருமுறை சொல்லியிருந்தார்.
தனுஷை நினைத்து அவர் கதையை எழுதவில்லை. இருப்பினும் ஆரம்பத்தில் அவர் எழுதிய கதைகளில் தனுஷ் நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்தார். அதற்கேற்ப தனுஷூம் மிரட்டலான நடிப்பைக் கொடுத்திருப்பார். இந்தக் கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் என ரசிகர்கள் ஏற்கனேவே சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது இது நிஜமாகி உள்ளது.
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் அடுத்த வெற்றிப் படத்தைக் கொண்டாட கோலிவுட்டும், ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த எதிர்ப்பார்ப்பை இந்தக் கூட்டணி பூர்த்தி செய்யுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.