

காற்றினிலே கலந்த கீதம்!
பாடிய குயிலொன்று பாட்டை நிறுத்தியது!
வாடிய மனங்களின்று வாடியே தவிக்கிறது!
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து ஏழினிலே
விதியின் விளையாட்டு திரைப்படத்தின் மூலமாக
கூவி உள்நுழைந்த கூத்தாட்டக் குயிலின்று
ஆறுதலைமுறையை அழகாய்க் கடந்த பின்னால்…
பதினேழு மொழிகளிலே பாடிக்களித்த பின்னால்…
ஐம்பதாயிரம் பாடல்களைப்பாடி அசத்திய பின்னால்…
ஓடி ஒளிகிறது! உயிரைப் பிரிக்கிறது!
ஆந்திராவின் குண்டூரில் அவதரித்த இந்தக்குயில்
சென்னைத் திரைவானில் சிறகடித்துப் பறந்ததுவே!
‘இஞ்சி இடுப்பழகா!மஞ்சச் செவப்பழகா!’
என்ற வார்த்தைகள் இதயத்தில் பதிந்தனவே!
மறக்க மனமின்றி மழைநீராய்க் கண்களிலே
ஊற்றொன்று தோன்றியதே!உதிர்கிறதே பெருநீரும்!
ஞானகான சரஸ்வதியாய் மௌனப் போராட்டத்தின்
மகுடம் சூட்டிய இசை அமைப்பாளராய்
உயரங்கள் பலவற்றை ஒருசேர நீதொட்டாய்!
செந்தூரப் பூக்களின்று சில்லென்று பூக்காமல்
உனையெண்ணி எங்கும் உதிர்ந்தே கிடக்கின்றன!
உனைப்போல் இனியொரு உயர்ந்த குயிலொன்று
நானிலத்தில் தோன்றுவது நடவாத காரியமே!
கலைமாமணியுடன் நான்குமுறை தேசிய விருது!
பதினான்குமுறை கேரள சிறந்த பாடகி விருது
பத்துமுறை ஆந்திர மாநில விருது
ஏழுமுறை தமிழகச் சிறந்த பாடகி விருதென்று
விருதுகளே அசந்துபோக வினையாற்றிய பாடகிநீ!
சிங்கார வேலனே தேவா என்ற சலங்கைப்பாடல்
கொஞ்சலாய் என்றைக்கும் எம் உள்ளத்தில்!
தூக்கம் உன் கண்களைத் தழுவியதோ
கண்ணிலே என்னவுண்டு என்றே கேட்டதோ!
வானுயர்ந்த சோலையிலே நிலவுதூங்கும் நேரத்திலே
ஆயிரம் தாமரை மொட்டுக்களைத் தேடியே
அகிலத்தை விட்டு நீயும் விடைபெற்றாயோ?
மாங்குயிலும் பூங்குயிலும் கோழிகூவும் நேரத்திலே
உன்னைத் தேடுதே! உதிரமது கொதித்திடவே!
ஒருநாளும் உனைமறவாத உறுதியான மனத்தைநாங்கள்
நாதமே உன் ஜீவனென்று நம்பியே வாழ்கின்றோமே!
தூக்கம் உன்கண்களைத் தழுவிட்டோ நிரந்தரமாக!
அமைதி உன்நெஞ்சில் ஆழமாய்க் குடிகொண்டதோ!
உலகம் உள்ளவரை உயர்குயிலே உன்குரலுக்கு
என்றும் அழிவில்லை!எப்பொழுதும் மரணமில்லை!
காற்றினிலே உன்கீதம் கலந்தே இவ்வுலகை
நித்தமும் சுற்றிவரும்! நிம்மதியைத் தந்துநிற்கும்!