புரொமோஷனுக்கு வராததை கெத்து என நினைக்கிறார்கள்! அஜித், நயன்தாராவை சாடிய திருப்பூர் சுப்ரமணியம்..!

150 கோடி சம்பளம் வாங்கும் நட்சத்திரங்கள் பட புரமோஷனுக்கு வராததால் கொதித்தெழுந்த திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர்!
Thirupur subramaniam
Thirupur subramaniamPuthiya thalaimurai & Instagram
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

திருப்பூர் சுப்ரமணியம் தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவராக நீண்ட காலம் இருந்தவர். தற்போது தமிழக மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவராக இருக்கிறார். நீண்ட காலம் திரைப்படங்களை விநியோகம் செய்த அனுபவமும் , திரைத்துறை முக்கிய புள்ளிகளின் நட்பும் கொண்டவர். அவ்வப்போது மீடியாக்களில் நேர்காணல் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அவரது சமீபத்திய நேர்காணலில் நடிகர் அஜீத்தையும் நடிகை நயன்தாராவையும் மிகக் கடுமையாக சாடியிருந்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக கோலோச்சி இருந்தவர் நடிகர் அஜீத். நடிப்பு மற்றும் கார் ரேஸ் என்று தொடர்ந்து இரட்டைக் குதிரையில் பயணித்து வருகிறார். 30 ஆண்டுகள் நடிகராக விஜய்க்கு முழுமையான போட்டியாளராக இருந்தார். தற்போது கார் ரேஸ் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் நாட்டில் ஏராளமான ரசிகர்கள் அவருக்கு இருந்தாலும் நீண்ட காலம் தனித்துவமிக்க சில பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து வருகிறார்.

பொதுவாக அஜீத் தான் நடிக்கும் எந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார். தனது திரைப்படங்களை பாருங்கள் என்று தன் ரசிகர்களுக்கு வேண்டுகோளும் விடுக்க மாட்டார். திரைப்படங்களை விளம்பரப்படுத்த நேர்காணல் நிகழ்ச்சிகள் , திரையரங்க விசிட்கள், வெற்றி விழாக்கள் என்று எதிலும் பங்கேற்க மாட்டார். தனது ரசிகர் மன்றங்களில் ஈடுபாடு காட்டாத அவர் , ஒரு கட்டத்தில் அவற்றையும் கலைத்து விட்டார். எப்போதும் தனது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் தள்ளி இருந்து தனது தனியுரிமையை பாதுகாத்து கொண்டவர்.

நடிகை நயன்தாராவும் தான் நடிக்கும் சிறிய பட்ஜெட் திரைப்படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதில்லை என்றும் , பெரிய திரைப்படங்கள் சார்ந்த விளம்பர நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்துக் கொள்கிறார் என்ற குற்றச்சாட்டும் இருந்தது. சமீபத்தில் அவர் நடித்திருந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் பிரமோஷன்களில் அவர் கலந்து கொள்ளாதது விமர்சனத்திற்கு ஆளாகியது.

Ajith Nayanthara
Ajith Nayantharafacebook

இந்நிலையில் திருப்பூர் சுப்ரமணியம் ஒரு நேர்காணலில்," நான் நீண்ட நாட்களாக இதை சொல்கிறேன் , எந்த நடிகராக இருந்தாலும் உலகப் புகழ் பெற்றவராக இருந்தாலும் தங்கள் படத்தை பிரமோஷன் செய்யும் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்கின்றனர். அஜித்தும் நயன்தாராவும் மட்டுமே இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை . இவர்களுக்கு ஏதோ கிரீடம் கொடுத்துள்ளதாக நினைத்துக் கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளாததை கெத்து என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் , இதெல்லாம் கெத்து கிடையாது. இந்த செயல்பாடுகள் அவர்களின் மார்க்கெட்டை இழக்கச் செய்துவிடும். இதை அவர்கள் விரைவில் புரிந்துக் கொள்வார்கள் அவர்கள் இப்படியே இருந்தால் காணாமல் போவார்கள். அது தான் நடக்கும் , இவர்களின் செயல்பாடுகளை நான் ஆரம்பித்தில் இருந்தே விமர்சிக்கிறேன். சம்பளம் மட்டும் 100 கோடி , 150 கோடி என்று கேட்கத் தெரிகிறது. ஆனால் , அந்த திரைப்படத்தை விளம்பரப் படுத்த வருவதில்லை. தயாரிப்பாளருக்கு நன்மை செய்யும் எண்ணமே கிடையாது.

நயன்தாரா சொந்தமாக திரைப்படம் தயாரிக்கும் போது மட்டும் ப்ரோமோஷனில் கலந்து கொள்கிறார்.அஜித்தும் அவரது தயாரிப்பான 'டேர் டெவில்' திரைப்பட பிரமோஷனில் நிற்பார். அவரால் கார் விளம்பரத்திலும் பிஸ்கட் விளம்பரத்திலும் நடிக்க முடியும் ஆனால் , பட ப்ரோமோஷனுக்கு மட்டும் வர தெரியாது. இப்போது அவரை வைத்து யாரும் படம் எடுக்க வந்தார்களா? இனி இப்படித்தான் நடக்கும். அவர்கள் சினிமாவிலிருந்து காணாமல் போய்விடுவார்கள்," என்று பேசியிருந்தார். அவரது நேர்காணல் தற்போது வைரலாகி உள்ளது.