

ஹாலிவுட் மட்டுமின்றி உலகளவில், பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் டாம் குரூஸ். இவருக்கும் ஹாலிவுட்டில் மட்டுமின்றி உலகளவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர். அதற்கு காரணம் இவரது அதிரடியான நடிப்பில் வெளிவந்த ‘மிஷன் இம்பாசிபில்’ திரைப்பட வரிசையை சொல்லலாம். அந்தளவிற்கு அந்த படம், அவருக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை மட்டுமின்றி, பெயரையும் புகழையும் உலகளவில் பெற்றுத்தந்தது. இவர் நடிப்பில் கடைசியாக ‘மிஷன் இம்பாசிபில்’ திரைப்பட வரிசையில் 8-வது பாகமான, ‘Mission: Impossible The Final Reckoning’ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
63 வயதாகும் டாம் குரூஸை இன்று பார்த்தாலும் அவரது ரசிகர்கள் ‘இவருக்கு மட்டும் எப்படி வயதே ஆகாமல் இருக்கிறது..?’ என்பதையே பெருங்கேள்வியாக வைக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, எவ்வளவு உயரமாக இருந்தாலும், எவ்வளவு பெரிய பில்டிங் ஆக இருந்தாலும் அதிலிருந்து தாவி குதித்து சாகசம் செய்யும் டாம் குரூஸ் இந்த வயதிலும் தான் நடிக்கும் எந்த படங்களுக்கும் டூப் போடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒவ்வொரு ஸ்டண்ட் காட்சிகளை மிகவும் சாதாரணமாக செய்து முடிப்பவர். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் உள்ளார்.
இந்த நிலையில், பல்வேறு சாதனைகளுக்கும், விருதுகளுக்கும் சொந்தக்காரரான டாம் குரூஸ் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக, அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் அமைப்பு, அவருக்கு கௌரவ ஆஸ்கர் விருதை அறிவித்தது.
இதற்கு முன்பாக, Born on the Fourth of July மற்றும் Jerry Maguire ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்காகவும், Magnolia திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்காவும், Top Gun: Maverick திரைப்படத்தின் தயாரிப்பாளர் என 4 முறை ஆஸ்கர் விருதுக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த நிகழ்ச்சியில் கௌரவ ஆஸ்கர் விருதை, டாம் குரூஸ் பெற்றுக் கொண்டார். புகழ்பெற்ற மெக்சிகன் இயக்குநர் இன்னாரிட்டு ( Alejandro González Iñárritu) கையினால் விருதைப் பெற்றார் டாம் குரூஸ். தற்போது இவர்கள் இருவரும் புதிய படத்தில் ஒன்றாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
ஜாக்கி சான் உள்ளிட்ட நடிகர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் என்கிற அடிப்படையில் கெளரவ ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த முறை அப்படியொரு அங்கீகாரத்தை நடிகர் டாம் குரூஸ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
கௌரவ ஆஸ்கர் விருதை பெற்ற பிறகு மேடையில் பேசிய டாம் குரூஸ், சினிமா தன் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தையும், அது சென்றடைந்த சமூகங்களையும் பற்றியும் மனம் திறந்தார். மேலும் அவர், ‘சினிமா எனக்கு தொழில் அல்ல, அதுதான் நான்’ என உணர்ச்சிவசமாகப் பேசியுள்ளார். தனது பேச்சில் சிறுவயதில் திரைப்படம் பார்த்த அனுபவம் தன்னை எப்படித் தூண்டியது என்று பேசினார். மேலும், தனது படங்களில் பணியாற்றிய குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.