
ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் டாம் குரூஸ். இவர் உலகில் அதிக சம்பளம் வாங்கும் சினிமா நடிகராகவும் இருக்கிறார். மிஷன் இம்பாசிபிள் படங்களின் மூலம் ஹாலிவுட் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த இவர், மிகவும் ஆபத்தான சண்டைக் காட்சியில் டூப் இல்லாமல் நடிப்பதில் புகழ் பெற்றவர்.1996 ஆம் ஆண்டு முதல், இவர் நடிப்பில் வெளிவந்த மிஷன் இம்பாசிபிள் படத்தின் தொடர்ச்சிகள் அனைத்தும் பெரும் வெற்றியை பெற்றவை.
தற்போது வெளியாகி திரையில் ஓடிக் கொண்டிருக்கும் மிஷன் இம்பாசிபிள் தொடரின் எட்டாவது படமான மிஷன் இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங் படத்திற்காக மீண்டும் ஒரு முறை டாம் குரூஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
மிஷன் இம்பாசிபிள் படத்தின் முந்தைய பாகங்களில் டாம் குரூஸ், ஒரு விமானத்தின் ஓரத்தில் அபாயகரமான முறையில் தொங்கிக் கொண்டு வருவது போலவும், மிகவும் ஆபத்தான மலை உச்சியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று பறப்பது போலவும், உலகின் மிக உயரமான கட்டிடத்தில் ஏறுவது போன்ற காட்சிகளிலும் நடித்துள்ளார்.
62 வயதான பின்னும் , இன்னும் ஆபத்தான சண்டைக் காட்சியில் நடிப்பதால் அவருக்கான ரசிகர் கூட்டம் அதிகமாக உள்ளது. டாம் குரூஸ் 30 ஆண்டுகளாக விமானி உரிமம் வைத்துள்ளார். அது போல நன்கு பயிற்சி பெற்ற ஸ்கை டைவராக தேர்ச்சி பெற்று உரிமம் பெற்றுள்ளார். முந்தைய சில படங்களிலும் அவர் வான்வழி சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ளார்.
மிஷன் இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங் படத்திற்காக சண்டைக் காட்சியில் ஆபத்தான முறையில், ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட் உதவியுடன் குதிப்பார். அப்போது பாராசூட் வானிலேயே தீப்பிடித்து முற்றிலும் எரிந்து நாசமாகும். இந்த சாகசக் காட்சி தென் ஆப்பிரிக்காவின் உயரமான மலைப் பகுதிகளில் 7500 அடி உயரத்திலிருந்து எடுக்கப்பட்டது.
இந்த உயிருக்கு ஆபத்தான காட்சி ஒரு முறை அல்ல 16 முறை மீண்டும் மீண்டும் எடுக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் டாம் பயமில்லாமல் நடித்து கொடுத்தார்.
இதன் மூலம் எரியும் பாராசூட்டில் இருந்து அதிக முறை குதித்தவர் என்ற சாதனையை அவர் செய்துள்ளார். இந்த சாகசக் காட்சிக்காக கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அவருக்கு பாராட்டு பாத்திரம் கொடுத்துள்ளது.
டாம் குரூஸ்க்கு இது முதல் கின்னஸ் சாதனை அல்ல. இதற்கு முன்னர் திரைப்பட வசூலுக்காக ஒருமுறை டாம் கின்னஸ் சாதனை செய்துள்ளார். தொடர்ச்சியாக 11 திரைப்படங்கள் மூலம், ஒவ்வொன்றும் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தினை வசூல் செய்ததற்காக கின்னஸ் சாதனையை செய்திருந்தார். இந்த சாதனையை எந்த ஒரு ஹாலிவுட் நடிகரும் நெருங்கவில்லை. அது மட்டுல்லாமல் புர்ஜ் கலீபா கட்டிடத்தின் உச்சியில் இருந்து அவர் எடுத்த புகைப்படம் உலகின் அதிக லைக்குகளை பெற்ற படமாக இருக்கிறது.