டாம் க்ரூஸ் நடிப்பில் மிகவும் பிரபலமான மிஷன்: இம்பாஸிபிள் திரைப்படத் தொடரின் எட்டாவது பாகமான மிஷன்: இம்பாஸிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங் திரைப்படம் இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
1996 ஆம் ஆண்டு வெளியான மிஷன்: இம்பாஸிபிள் திரைப்படம், பிரபலமான தொலைக்காட்சித் தொடரை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் திரைப்படத்தில் டாம் க்ரூஸ் பல ஆபத்தான சண்டைக் காட்சிகளிலும், திகைப்பூட்டும் ஸ்டண்ட் காட்சிகளிலும் நடித்திருந்தார். குறிப்பாக, சிஐஏ தலைமையகத்தில் பைக் காட்சி மிகவும் பிரபலமானது. இந்தத் திரைப்படத்தில் டாம் க்ரூஸ் ஈதன் ஹண்ட் என்ற இரகசிய உளவாளியாக நடித்திருந்தார்.
இந்தத் திரைப்படத்தின் 8ம் பாகம் உலகம் முழுவதும் மே 23, 2025 அன்று வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவில் மே 17, 2025 அன்றே திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இது தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்திய திரையரங்குகளில் வெளியிடப்படும். இந்தியாவில் இந்தத் திரைப்படத்திற்கான முன் பதிவுகள் நம்ப முடியாத அளவு வரவேற்பைப் பெற்றுள்ளது. முன் பதிவு தொடங்கிய முதல் 24 மணி நேரத்திற்குள், பிவிஆர் ஐநாக்ஸ் மற்றும் சினிபோலிஸ் போன்ற பெரிய திரையரங்குகளில் 11,000 க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. மே 13ஆம் தேதி மாலை நிலவரப்படி, இந்த எண்ணிக்கை 45,000 டிக்கெட்டுகளைத் தாண்டியுள்ளது. காலை 6 மணி போன்ற அதிகாலை காட்சிகளுக்கும் பலத்த வரவேற்பு காணப்படுகிறது.
டாம் க்ரூஸ் ஈதன் ஹண்டாக மீண்டும் நடிக்கிறார். விங் ராம்ஸ் லூதர் ஸ்டிக்கெல்லாகவும், சைமன் பெக் பெஞ்சி டன்னாகவும், ஹேலி ஆட்வெல் கிரேஸாகவும், ஹென்றி செர்னி கிட்ரிட்ஜாகவும், ஏஞ்சலா பாசெட் ஆகியோரும் மீண்டும் நடிக்கின்றனர். எசாய் மொராலஸ் வில்லன் கேப்ரியலாக நடிக்கிறார்.
இத்திரைப்படம் இன்று கேன்ஸ் திரைப்பட விழாவில் premiere செய்யப்பட்டது. இந்திய நடிகை அவ்னீத் கவுர் சமீபத்தில் டாம் க்ரூஸை சந்தித்து "நமஸ்தே" கூறிய புகைப்படம் வைரலானது. இவர் முன்னதாக படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கும் சென்றிருந்தார். ஆகையால் இந்திய மக்களுக்கு படத்தில் ஒரு டிவிஸ்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்தத் திரைப்படம் சுமார் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விறுவிறுப்பான ஆக்ஷன் மற்றும் சாகச அனுபவத்தை அளிக்கும். மிஷன்: இம்பாஸிபிள் - டெட் ரெக்கனிங் பார்ட் ஒன் திரைப்படம் இந்தியாவில் ₹100 கோடி வசூல் செய்து பெரிய வெற்றியைப் பெற்றது. தி ஃபைனல் ரெக்கனிங் திரைப்படமும் பெரிய ஓப்பனிங் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது இந்தத் தொடரின் இறுதிப் பாகமாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆர்வம் நிலவுகிறது.