பூமியில் வியப்பூட்டும் விஷயங்களுக்கு பஞ்சமுண்டா என்ன? அப்படியான ஒரு இடம் தான் பெரிங் ஜலசந்தி. (Bering strait)
டியோமெட் தீவுகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையா.. அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.
உலக வரைபடம் பார்த்திருப்பீர்கள். அதை அப்படியே சுருட்டினால் ரஷ்யாவும் வட அமெரிக்காவும் உண்மையில் அக்கம்பக்கத்தினர் என்பதைக் காணலாம். பசிபிக் பெருங்கடலில் தான் இந்த டியோமெட் தீவுகளில் இரண்டு உள்ளன. பெரிது ஒன்று சிறிது ஒன்று. பெரிய டியோமெட் தீவு ரஷ்யாவைச் சேர்ந்ததாகவும் சின்ன தீவு அமெரிக்க கட்டுப்பாட்டிலும் உள்ளது. இரண்டு தீவுகளும் வெறும் மூன்று மைல் தொலைவில்தான் உள்ளன. உறைபனிக் காலங்களில் கடலில் நடந்தே அடையலாம். வெறும் ஐந்தே கிமீ தான்!
அமெரிக்காவின் குட்டி டியோமெட் தீவில் இன்று காலை ஒரு 10 மணிக்கு நடக்கத் துவங்குகிறீர்கள் என்று வையுங்கள். அடுத்த ஒரு மணி நேரத்தில் ரஷ்யாவின் பெரிய தீவில் கால் வைத்துவிடுவீர்கள். அப்போது மணி 11 என்று நினைத்தீர்களானால் அது தவறு. பெரிய தீவில் மறுநாள் காலை 7 மணி என்று காட்டிக்கொண்டிருக்கும்.
இதற்குக் காரணம் இரு தீவுகளுக்கு இடையில் தான் பெரிங் ஜலசந்தி உள்ளது. இதன் வழியாகத் தான் சர்வதேச தேதிக்கோடு (International Date Line) வரையப்பட்டுள்ளது. இதனால் 5 கிமீ பயணத்துக்கு 21 மணி நேரம் என்று காட்டப்படுகிறது.
ஆர்வமூட்டுவதாக உள்ளது அல்லவா.. பெரிய தீவில் ஒருவேளை நாம் பயணம் துவங்கினால் இன்று கிளம்பி நேற்று போய்ச் சேரலாம். வாவ்….. இது ஒரு ரியல் டைம் மெஷின் தான்.
இரு தீவுகளும் நடந்து போகும் தொலைவுதான் உள்ளன என்றாலும் நடந்து போவது சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அமெரிக்க பனிப்போர் நிகழ்ந்த போது இந்த பெரிங் நீரிணை தான் பனித்திரையாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆசிய கண்டத்திலிருந்து வட அமெரிக்க கண்டத்துக்கு பெரிங் நீரிணை வழியாகத்தான் மக்கள் கடந்து போயிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.
பெரிய டியோமெட் தீவின் பூர்வக்குடிகள் ரஷ்யாவுக்கு இடம்பெயர்த்தப்பட்டுள்ளனர். தற்போது ரஷ்ய ராணுவத்தினரும் கடற்படையினரும் தான் அங்கு உள்ளனர். சின்ன டியோமெட் தீவில் அலாஸ்காவின் இன்னூபியாட் பூர்வக்குடி எஸ்கிமோக்கள் வாழ்கிறார்கள்.
சிறப்பு அனுமதிகள் பெற்று இந்த பெரிங் ஜலசந்திக்கு சுற்றுலா செல்லலாம்.
'இன்று கிளம்பி நேற்று போய்ச் சேர்ந்து மகிழலாம்...'