சமீப காலமாக மலையாள சினிமா உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் 100 கோடி வசூலிக்கத் தள்ளாடிய திரைப்படங்கள், இப்போது பான் இந்திய அளவில் சாதனை படைத்து, வசூலில் கலக்கி வருகின்றன. எதார்த்தமான கதைக்களங்களும், திறமையான புதுமுக நடிகர்களும் இதற்கு ஒரு காரணமாக இருக்கின்றனர். மலையாள சினிமாவில் நேர்த்தியான கதைத் தேர்வுடன் 12 ஆண்டுகளில் 50 படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்ற மலையாள நடிகரைப் பற்றிய பதிவு தான் இது.
கடந்த சில வருடங்களில் மலையாள சினிமாவில் ஒரு தனிப்பட்ட நடிகரின் படங்கள் மட்டும் நிச்சயமான இலாபத்தைத் தருகின்றன. அதாவது இவர் நடிக்கும் படங்கள் குறைந்தபட்ச இலாபத்தையாவது ஈட்டி விடும் என்பது விநியோகஸ்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அவர் தான் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்த டொவினோ தாமஸ். தொடக்கத்தில் இருந்து நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தது தான், இவரது இந்த வெற்றிக்கு காரணம். மூத்த நடிகர்கள் இருக்கும் அதே வேளையில், டொவினோ தாமஸ் மலையாள சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்திருப்பது அவரது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.
இன்றைய சினிமா உலகில் முன்னணி நடிகர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு படம் நடிப்பதே பெரிது தான். இப்படியான சூழலில் 12 ஆண்டுகளில் 50 படங்களை நடித்ததும், அதில் பல படங்கள் நல்ல வசூலை அள்ளியதும் மலையாள சினிமாவில் சாதனையாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக கேரளாவில் வெள்ளம் வந்ததை உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுடன் ரசிகர்களுக்கு திரையில் காட்டிய “2012” என்ற திரைப்படம் சுமார் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து டொவினோ தாமஸுக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
ஒரு சிறிய வேடத்தில் “பிரவின்டே மக்கள்” என்ற திரைப்படத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டில் அறிமுகமானார் டொவினோ தாமஸ். அதற்குப் பின் சல்மான் நடிப்பில் வெளிவந்த “ஏபிசிடி” என்ற திரைப்படத்தில் இளம் அரசியல்வாதியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றார். மாய நதி மற்றும் மின்னல் முரளி போன்ற படங்களில் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி தனது சினிமா பயணத்தை மெருகேற்றிக் கொண்டார்.
சினிமாவில் நிலைத்து நிற்பது என்பது சாதாரண ஒன்றல்ல. முதலில் ஒரு நடிகரை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படியே ஏற்றுக் கொண்டாலும், அடுத்தடுத்து நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும். இதற்கிடையில் ஒரு சறுக்கல் ஏற்பட்டாலும், மீண்டு வருவதற்கு சில காலம் ஆகலாம். இச்சூழலில் திரைத்துறையில் 12 ஆண்டுகளை நிறைவு செய்த டொவினோ தாமஸ், உண்மையிலேயே தரமான நடிகர் தான்.
தனது சினிமா பயணம் குறித்து டொவினோ தாமஸ் கூறுகையில், “எனது மனம் பெருமிதம் கொள்கிறது. இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் சக நடிகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. மேலும் நடிகராக வளர்ந்து வந்த காலத்திலும் சரி, இப்போதைய நிலையிலும் சரி, எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் என்னால் 12 ஆண்டுகள் சினிமா பயணத்தை நிறைவு செய்திருக்க முடியாது” என கூறினார்.