நடிக்கத் தெரியாதவர்போல் மிக நன்றாக நடிக்கிறார் டோவினோ தாமஸ்!

Tovino Thomas
Tovino Thomas

திரையுலகில் ‘பேசும் படங்கள்’ வரத் தொடங்கிய ஆரம்ப நாட்கள் முதலே மிகச் சிறந்த படங்களை மலையாள சினிமா தந்துகொண்டிருக்கிறது. நூறு சதவிகித கல்வி அறிவு, அதிகமான புத்தக வாசிப்பு, மார்க்சிய சிந்தனைகள் போன்றவை சிறந்த மலையாள இலக்கியங்களை உருவாக்கின. இதன் நீட்சி மலையாள படங்களிலும் எதிரொலித்தது. 1970 முதல் அழகியல் சார்ந்த மென்மையான அதேசமயம் கருத்துள்ள நல்ல படங்கள் மலையாளத்தில் வர ஆரம்பித்தன. பல்வேறு விருதுகளும், பாராட்டுகளும் மலையாள சினிமாவுக்குக் கிடைத்தன.

கடந்த 2000ஆம் ஆண்டுக்கு பின் ஏற்பட்ட உலகலாவிய பொருளாதார மாற்றங்கள் மலையாள சினிமாவிலும் எதிரொலித்தன. இருப்பினும் மலையாள சினிமா தனது அழகியலை இழந்துவிடவில்லை. மாறுபட்ட சிந்தனைகள் கொண்ட இயக்குநர்களும், சிறந்த நடிப்பு திறமை கொண்ட நடிகர்களும் கடந்த 15 ஆண்டுகளாக மலையாள சினிமாவில் ஆளுமை செலுத்தி வருகிறார்கள். இவர்களின் படங்கள் மலையாள எல்லை தாண்டி பல்வேறு மாநில ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகின்றன. இந்த வரிசையில் டோவினோ தாமஸ் இடம் பெற்று வருகிறார். நல்ல கதையம்சத்துடன் உள்ள படங்களில் சிறப்பான நடிப்பைத் தந்துவருகிறார். இவர் தமிழில் மாரி 2, அபியும் அனுவும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கேரள மாநிலம் இரிங்ஞாலகுடாவில் 1989ஆம் ஆண்டு பிறந்தவர் டோவினோ. கேரளாவில் பள்ளி படிப்பை முடித்து, கோவையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் ECE முடித்தார். இன்ஜினியரிங் வேலைக்குப் போகாமல் திரையுலகில் கால்பதித்தார். 2012ல் வெளியான பிரபுவிந்தே மக்கால் என்ற படத்தில் அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் சிறு சிறு துணை கதாபாத்திரங்களில் நடித்தவர், பின்பு ஹீரோவாக உயர்ந்தார். சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதுகள் பெற்றார். களா, மாயநதி போன்ற படங்கள் டேவினோ தாமஸ் ஹீரோவாக நடித்து வெளிவந்த படங்களில் குறிப்பிடத்தக்க படங்களாகும். கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த மின்னல் முரளி படத்தில் கையில் மின்னல் தாக்கியதால் கிடைக்கும் சக்திகளைக் கொண்ட மனிதனாக நடித்து ரசிகர் எண்ணிக்கையை பலமடங்கு உயர்த்தினார்.

2012ல் அறிமுகமான டேவினோ தாமஸை உலகம் முழுவதும் அறிந்த நடிகராக அறியச் செய்தது சென்ற ஆண்டு வெளியான ' 2018' என்ற திரைப்படம். கடந்த 2018 கேரளாவில் பெய்த கன மழையை மையப்படுத்தி உருவான படம் இது. 160 கோடி வரை வசூல் செய்த இப்படம் ஆஸ்கர் கதவுகளைத் தட்டியது. இந்தப் படத்தில் நடித்ததற்காக நெதர்லாந்தில் நடைபெற்ற செப்டியமஸ் என்ற விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆசிய நடிகருக்கான விருதைப் பெற்றார் டோவினோ. தென்னிந்திய நடிகர்களிலேயே முதன்முதலாக இந்த விருதைப் பெற்றவர் இவர்தான். மேடையில் இந்த விருதை பெற்றுக்கொண்ட டோவினோ, "இந்த விருதை நான் ஆஸ்கர் விருதுக்கு இணையாக நினைக்கிறேன். நான் இந்தியாவின் கேரள மாநிலத்தில் இருந்து வருகிறேன். எங்கள் மாநிலமும், திரைப்படத் துறையும் மிக சிறியது. எங்கள் மாநிலத்தில் இருந்து வருவதை எண்ணி பெருமைப்படுகிறேன்" என்று கூறியது நெகிழச் செய்தது. 2018 படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என்று மலையாளிகள் எதிர்பார்த்து கிடைக்காத சூழ்நிலையில், செப்டியமஸ் விருது மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. "வீழாமல் இருப்பது பெருமை அல்ல. வீழ்ந்து மீண்டும் எழுவதே பெருமை" என 2018 படம் பற்றியும், பெரு மழை பற்றியும் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டார் டோவினா தாமஸ்.

இதையும் படியுங்கள்:
வரப்போகுது பாகுபலி அனிமேஷன் வெப் சீரிஸ்: எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!
Tovino Thomas

இந்த ஆண்டு (2024) தொடக்கத்தில், டார்வின் குரியகோஷ் இயக்கத்தில் 'அன்பேஷிப்பின் கண்டேதும்' என்ற திரில்லர் வெற்றிப்படத்தை வழங்கினார் டோவினோ தாமஸ். இரண்டு வெவ்வேறு வழக்குகளை விசாரிக்கும் காவல் துறை அதிகாரியாக சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார் இப்படத்தில். இப்படம் தமிழ் ரசிகர்களாலும் விரும்பி பார்க்கப்படுகிறது.

கடந்த வெள்ளியன்று ஜூனியர் லால் (இவர் பிரபல நடிகர் லாலின் மகன்) இயக்கத்தில் டோவினோவின் நடிப்பில் ‘நடிகர்’ என்ற படம் வெளியாகி உள்ளது. கலந்துபட்ட விமர்சனங்களை இப்படம் பெற்று வருகிறது. பிரபல நடிகர் ஒருவரின் சினிமா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமாரான நடிப்புத் திறமைகொண்ட பிரபல நடிகர் சந்தர்ப்பவசத்தால் மிக நன்றாக நடிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்தச் சினிமா நட்சத்திரம் எதிர்கொள்ளும் பிரச்னைதான் ‘நடிகர்’ படத்தின் கதை. இயல்பாக நன்றாக நடிக்கும் டோவினோ நடிக்கத் தெரியாதவர்போல நடித்து சபாஷ் வாங்கி வருகிறார்.

தற்போது டோவினோ ‘ஏ.ஆர்.எம்.’ என்ற பான் இந்திய படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதை 1900, 1950,1990 ஆகிய காலக்கட்டங்களில் நடக்கிறது. மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து வித்தியாசமாக நடிக்கும் தென்னிந்திய சினிமாவின் இளைய தலைமுறையின் அடையாளமாக திகழும் டோவினோ தாமஸ் இன்னும் பல நல்ல திரைப்படங்களை வழங்க வாழ்த்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com