Trauma movie review
Trauma movie review

விமர்சனம்: ட்ராமா - ஒரு எச்சரிக்கை மணி!

Published on
ரேட்டிங்(3 / 5)

"பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி செயற்கை கருவுறுதல் மையங்கள் பற்றி நமக்கு அதிகமா தெரியாது. ஆனா இன்னைக்கு பல இடங்களில் செயற்கை கருவுரு மையங்கள் இருக்கு. இன்னும் பத்து வருஷத்தில் கறுவுரு மையங்களுக்கு போனால்தான் குழந்தை பெத்துக்க முடியும் என ட்ராமா படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வசனம் வரும்போது நாம் சற்று அதிர்ச்சி ஆகிறோம். Trauma என்றால் அதிர்ச்சி என்று பொருள். செயற்கை கருவுறுதல் என்ற விஷயத்திருக்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சி தரும் க்ரைம் அம்சத்தை சொல்லி இருக்கிறது இந்த படம்.

திருமணம் ஆகி பல வருடங்களுக்கு குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகள் சுந்தர் (விவேக் பிரசன்னா) மற்றும் கீதா (சாந்தினி). சில மருத்துவ சிகிக்சைக்கு பின் கீதா கர்ப்பமாகிறார். ஒரு நாள் ஒரு மர்ம மனிதன் கீதாவுக்கு போன் செய்து ஐம்பது லட்சத்துடன் நான் சொல்லும் இடத்திற்கு வா என்று பிளாக்மெயில் செய்கிறான்.

இரண்டு கார் திருடர்கள் காரை திருடி கொண்டு போகும் போது போலீஸ் மடக்கி பிடிக்கிறது. கார் டிக்கிகுள் ஒரு சடலம் இருப்பதை பார்க்கிறது போலீஸ். ஒரு இளைஞனும், இளம் பெண்ணும் காதலிக்கிறார்கள். காதலி தன் காதலனை பற்றி அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்றை தெரிந்து கொள்கிறார். மூன்று வெவ்வேறு இடங்களில் செல்லும் கதை ஒரு மைய்யத்தில் இணையும் 'ஆந்தாலஜி ' வகையில் சிறப்பாக திரைக்கதை அமைத்துள்ளார் அறிமுக டைரக்டர் தம்பிதுரை மாரியப்பன். மேலும் சாதரணமாக காட்சிகளை பார்க்கும் போது ஒன்றோடொன்று தொடர்பு இல்லாதது போல் தோன்றும். ஆனால் சிறிய தொடர்பு காட்சிகளுக்கு நடுவில் இருக்கும். இந்த Hyperlink பாணி திரைக்கதையை நன்றாக கையாண்டுள்ளார் இயக்குநர்.

இந்த திரைக்கதையை மிக சிறப்பாக தனது எடிட்ங்கால் கூர்மையாக்கி இருக்கிறார் எடிட்டர் முகன் வேல். படத்தின் திரைக்கதையை திரில்லர் போன்று மாற்றியதில் எடிட்டர் பங்கு முக்கியமானது. திரைக்கதை, எடிட்டிங்கில் நேர்த்தியாக உருவாக்கி டைரக்டர் ஒளிப்பதிவில் கோட்டை விட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சில இடங்களில் லாங் ஷாட் வரும்போது, திரையில் புள்ளிகள் அதிகமாக தெரிகிறது. இசை பரவாயில்லை தான்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: பொன்மேன் - பொன்னை மையப்படுத்தி ஒரு காமெடி த்ரில்லர்... பசில் ஜோசப் 'பளிச்' பர்ஃபார்மன்ஸ்!
Trauma movie review

சாந்தினி பதினைந்து வருடமாக சினிமாவில் நடித்து வருகிறார். இப்போதுதான் திறமையை நிரூபிக்கவும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. குழந்தைக்கு ஏங்கும் ஒரு பெண்ணாக நன்றாக நடித்திருக்கிறார் சாந்தினி. "இந்த உலகத்தில் யாருமே வலியை வேண்டாம் தான் சொல்லுவாங்க. ஆனால் வேணும்ன்னு நினைக்கிற ஒரே வலி தாய்மை தரும் வலியை மட்டும்தான்" என்று சாந்தினி சொல்லும் போது சாந்தினியை தமிழ் சினிமா டைரக்டர்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்றே சொல்ல தோன்றுகிறது.

பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் விவேக் பிரசன்னா கதையின் நாயகனாக இப்படத்தில் நடித்துள்ளார். பொதுவாக ஹீரோக்கள் ஏற்று நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தை ஏற்று தேவையான நடிப்பை வழங்கி உள்ளார் விவேக் பிரசன்னா. படத்தில் சில குறைகள் இருந்தாலும் சிறிய கலைஞர்கள் இணைந்து நல்ல கான் செப்ட்டில் புதிய முயற்சி செய்ததற்காக Trauma படத்தை பாராட்டலாம்.

"குழந்தை வேணும்ன்னு ஹாஸ்பிடலுக்கு போறவங்க ஒரு பக்கம். தனக்கு பெற்றோர்கள் கிடைக்க மாட்டாங்களா என்று எங்கும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றொருபுறம். ஏன் குழந்தையில்லா தம்பதிகள் இந்த ஆதரவற்ற குழந்தைகளை ஏன் தன் குழந்தைகளாக வளர்க்க கூடாது?" என்ற வசனம் படம் முடியும் சமயத்தில் வருகிறது. இந்த கேள்வி நம்மை சிந்திக்க வைக்கிறது. உண்மைதான். பெற்றால் தான் பிள்ளையா?

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ஆபீசர் ஆன் டூட்டி - மற்றொரு வாரம் மற்றொரு வெற்றிப்படம் கேரளாவிலிருந்து!
Trauma movie review
logo
Kalki Online
kalkionline.com