
வரதட்சணை என்ற பிரச்னையில் சிக்கிக் கொண்டு குடும்பங்கள் படும் கஷ்டங்களைச் சற்றே சிரிப்புடனும் சற்றே பதைபதைப்புடனும் சொல்லியிருக்கும் படம் தான் பொன்மேன். இதுவும் ஒரு மலையாளப் படம் என்று சொல்லவும் வேண்டுமா?
வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் இன்றளவும் பெரிய கௌரவமாகப் பல குடும்பங்களில் கருதப்படுகிறது. கேரளாவில் இது இன்னும் அதிகம். சாதாரண குடும்பங்களில் கூட அளவுக்கு அதிகமாக நகை போடுவதை எதிர்ப்பார்ப்பது குறையவேயில்லை.
ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கட்சி ஈடுபாடு அதிகம் உள்ளவர் ஆனந்த் மன்மதன். இவரது தங்கை பினா மோள். இவரது திருமணத்திற்காக நகைகளைக் கடனாக வாங்குவது; திருமணத்தில் வரும் மொய்ப் பணத்தை வைத்து அதை அடைத்து விடுவது. இது தான் திட்டம். இதற்காகவே உள்ள ஒரு நகைக்கடையில் வேலை செய்பவர் (அஜீஷ்) பசில் ஜோசப்.
இடையில் கட்சிப் பிரச்னை காரணமாகச் தேவாலயத்தைச் சேர்ந்த ஒருவரை அடித்து விடுகிறார் ஆனந்த். பிரச்னை பெரிதாகவே கட்சியிலிருந்தும் சர்ச்சிலிருந்தும் வரும் உதவிகள் நின்றுவிடுகின்றன. எதிர்பார்த்த மொய்ப் பணம் வசூலாகாததால் பணத்தைக் கொடுக்க முடியாத நிலை.
ஒன்று பணம் வர வேண்டும் இல்லை நகையைத் திருப்பிக்கொடு என்று நிற்கிறார் ஜோசப். ஒரு முரட்டு ஆளைத் (சஜின் கோபு) திருமணம் செய்து கொண்ட பினா மோள் செய்வதறியாமல் நிற்கிறார். வரதட்சணை வந்த நகைகளைக் கொடுக்க முடியாது என்று நிற்கிறார் கணவர். அந்த நகைகள் என்ன ஆனது. பணம் திரும்பக் கிடைத்ததா என்பதை சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார்கள்.
இது போன்ற கதைகளைப் படம் எடுக்கலாம் என்ற நினைத்தற்கே பாராட்ட வேண்டும். வரதட்சணை என்ற கொடுமையால் குடும்பங்கள் படும் கஷ்டங்கள், மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்ளும் மனிதர்கள், வறட்டு கவுரவம் முக்கியம் மனிதர்கள் இரண்டாம் பட்சம் என்ற நிலை, இவற்றை எல்லாம் போகிற போக்கில் அடித்துச் சென்றிருக்கிறார்கள்.
எந்தப் பாத்திரம் கொடுத்தாலும் அதில் நச்சென்று பொருத்திக் கொள்கிறார் பசில். குடித்துவிட்டு சலம்புவதும், பணம் வாங்காமல் போகமாட்டேன் என்று ஆடம் பிடிப்பதும், பினா மோளின் நிலையை உணர்ந்து தயங்குவதும் சபாஷ். என்னதான் அண்ணனைப் பிடிக்க வில்லை என்றாலும் கோபத்தை விழுங்கிக்கொண்டு வா சரக்கடிக்கலாம் என்று அழைத்துப் போவது இயல்பு. அடித்து வீழ்த்த முடியாது என்று தெரிந்து அந்த முரடனிடம் சாமர்த்தியமாக ஆடுவதும் நன்று.
படத்தில் எந்தவிதமான செலவும் தேவைப்படவில்லை. கடற்கரையோர கிராமம் அதில் இரண்டு வீடுகள். இரண்டு அறைகள். கொஞ்சம் சரக்கு. படத்தை முடித்து விட்டார் இயக்குனர் ஜோதிஷ் ஷங்கர். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் கொஞ்சமும் மிகைப்படுத்தலின்றி படத்தை நகர்த்தி இருக்கிறது. திரும்பத் திரும்ப வரும் குடிக்கும் காட்சிகளைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
பசில், பினா இருவரைத் தவிர மற்றவர்களுக்குக் குறிப்பிட்டு சொல்லும்படி பெரிதாக நடிக்க எந்த வாய்ப்பும் இல்லை என்பதும் ஒரு குறை. இது போன்ற படங்களில் வசனங்கள் பல இடங்களில் சற்றுக் கூர்மையாக இருந்திருக்கலாம் என்ற நினைப்பும் வந்து போகிறது.
திரையரங்குகளில் வெளியான போதே நல்ல வரவேற்பைப் பெற்றாலும் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியானதும் மேலும் ரசிகர்களைக் குவித்து வருகிறது இந்தப்படம்.