
1999-ம் ஆண்டு சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிஷா, ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்திருந்தார். 2002-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'மௌனம் பேசியதே' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து அவர் நடித்த சாமி, கில்லி, ஆறு போன்ற திரைப்படங்கள் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. 40 வயதை கடந்தும், திரைத்துறையில் ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் இவர், தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னனி நாயகியாக வலம் வருகிறார்.
அதுமட்டுமின்றி ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் திரிஷா இணைந்து நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த ‘குந்தவை’ கதாபாத்திரம் உலகளவில் புகழ் பெறச்செய்தது.
இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா நடித்துள்ள ‘குட் பேட் அக்லி' படம், உலகம் முழுவதும் கடந்த 10-ம்தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுக்கும் அதேவேளையில், எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்து வருகிறது. குறிப்பாக திரிஷாவின் கதாபாத்திரத்தை விமர்சித்து கருத்துகளை சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கு திரிஷா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘‘விஷத்தன்மை கொண்ட நபர்களே... நீங்கள் எல்லாம் எப்படி வாழ்க்கையை வாழ்கிறீர்கள்? எப்படி நன்றாக தூங்குகிறீர்கள்? சமூக வலைதளங்களில் மற்றவர்களைப் பற்றி அர்த்தமற்றவற்றைப் பதிவிடுவது உங்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறதா? உங்களுக்காகவும், உங்களுடன் வாழும் நபர்களுக்காகவும் உண்மையில் மிகவும் வருத்தப்படுகிறேன். பெயர் தெரியாத கோழைகளே... கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக...'' என்று குறிப்பிட்டுள்ளார்.
திரிஷாவின் இந்த கருத்தை திரையுலகினரும், ரசிகர்களும் வரவேற்று ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.