இசைத்தமிழ் பாடி அரும் சாதனை செய்த - டி.ஆர்.மகாலிங்கம்!

T.R.Mahalingam
T.R.Mahalingam
Published on

தெள்ளத் தெளிவான இசைத்தமிழில் மனம் மயக்கும் கணீர் கம்பீரக் குரலில் ரசிகர்களைக் கட்டிப்போட்ட டி.ஆர்.மகாலிங்கத்தின் நினைவுகளை தமிழ்த்திரை உலகம் என்றும் மறக்க முடியாது. டி.ஆர்.மகாலிங்கத்தின் சிலை திறப்பு விழாவில் தொடங்கி, அவரின் நூற்றாண்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் அவரைப் பற்றிய சுவாரசியமான செய்திகளின் சிறு தொகுப்பு இங்கே…

  • மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்த தென்கரையைச் சேர்ந்த ராமகிருஷ்ண கணபதி மற்றும் லட்சுமி அம்மாள் தம்பதிகளுக்கு 1924ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி பிறந்தார். தென்கரை ராமகிருஷ்ணன் மகாலிங்கம் என்பதன் சுருக்கம்தான் டி.ஆர். மகாலிங்கம்.

  • பாய்ஸ் நாடக கம்பெனியில் நடித்த டி.ஆர். மகாலிங்கத்துக்கு சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அவரின் கணீர் குரலில் ஈர்க்கப்பட்ட ஏவி. மெய்யப்ப செட்டியார், தான் தயாரித்த ‘நந்தகுமார்’ படத்தில் சிறு வயது கண்ணனாக நடிக்க வாய்ப்பு தந்தார்.

  • 13 வயது சிறுவனாக இருந்தபோதே சினிமாவில் நடிக்கத் தொடங்கி குறுகிய காலத்திலே மிகவும் பிரபலமான டி.ஆர். மகாலிங்கம், எஸ். ஜி. கிட்டப்பாவின் ‘இசை வாரிசு’ என்ற பட்டப் பெயருடன் புகழ் பெற்றார்.

  • 1938இல் வெளியான ‘நந்தகுமார்’ படத்திற்கு சுமாரான வெற்றி என்றாலும் அதில் இவர் பாடிய பாடல்கள் பெருத்த வரவேற்பை பெற்றதால் இவர் கவனிக்கப்பட்டார். இந்தப் படம் ஹிந்தி, மராத்தி மொழிகளிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

  • முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றார் டி ஆர் மகாலிங்கம், துணை நடிகராகவே பாடி, நடித்து பிரபலமானவர். திரையில் மட்டுமின்றி நாடகங்களில் நடித்து புகழ் பெற்றார். குறிப்பாக இவர் நடித்த ‘பவளக்கொடி’, ‘வள்ளித்திருமணம்’ போன்ற நாடகங்கள் அக்காலம் முதல் இன்று வரை பேசப்படுகிறது.

  • 1945 ஆம் ஆண்டின் ஏவி மெய்யப்பச் செட்டியார், தான் தயாரித்த ‘ஸ்ரீ வள்ளி’ என்ற படத்தில் டி.ஆர். மகாலிங்கத்தை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியது இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. முருகனாக நடித்த இவருக்கு ஜோடியாக குமாரி ருக்மணி நடிக்க 50 வாரங்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது ‘ஸ்ரீ வள்ளி’. திரை உலகில் கதாநாயகனாக நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு இந்தப் படம் அடித்தளமாக அமைந்தது.

  • ‘ஸ்ரீவள்ளி’யைத் தொடர்ந்து ‘வேதாள உலகம்’, ‘நாமிருவர்’. ‘ஞானசௌந்தரி’, ‘ஆதித்தன் கனவு’ போன்ற பல படங்கள் இவரது வெற்றிப் படங்களாக அமைந்தன. ‘நாம் இருவர்’ படத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயரான ‘சுகுமார்’ என்பதை தனது மகனுக்கு வைத்து அழகு பார்த்தவர் டி.ஆர். மகாலிங்கம்.

  • அந்தக் காலத்தில் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவது என்பது ஒரு சிலருக்கே வாய்த்தது. அதில் ஒருவராக இவர் தனது 23 வயதிலேயே ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகராக பெரும் அந்தஸ்தில் இருந்தார்.

இதையும் படியுங்கள்:
இனி ஹீரோ இல்லை... முழு நேர வில்லனாகும் கோபி... அவரே கொடுத்த அப்டேட்!
T.R.Mahalingam
  • டி. ஆர். மகாலிங்கத்தின் இசையில் குரலில் கவரப்பட்டு, அவரை குருவாக எண்ணி, பாட்டு பயிற்சியில் இறங்கி, ஒரு துணை நடிகராக அவருடன் இணைந்து நடித்தவர் சீர்காழி கோவிந்தராஜன். ‘அகத்தியர்’ எனும் திரைப்படத்தில் தனது ஆதர்ச இசை நாயகனுடன் இணைந்து பாடி அசத்தியுள்ளார் சீர்காழி கோவிந்தராஜன்.

  • பெரும் சொத்து பத்துகளுடன் புகழுடன் இருந்த டி. ஆர். மகாலிங்கம் ஒரு கட்டத்தில் (1950 ஆம் ஆண்டில்) ‘ஸ்ரீ சுகுமார் ப்ரொடக்ஷன்’ எனும் படநிறுவனம் தொடங்கி, சொந்தமாக படங்களைத் தயாரித்தார். இவர் தயாரித்த ‘சின்னத்துரை’, ‘மோகனசுந்தரம்’, ‘மச்ச ரேகை’ மற்றும் ‘தெருப்பாடகன்’ போன்ற படங்கள் பெரும் தோல்வியைச் சந்தித்தது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தினால் மனமடைந்து போன டி.ஆர். மகாலிங்கம் பட வாய்ப்புகளையும் இழந்து சொந்த ஊருக்குச் சென்றார்.

  • இந்தக் காலகட்டத்தில் திரைப்படங்களின் பார்வையும் சமூகப் படங்களுக்கு மாறியதால், தானே நடித்து தன் படங்களில் பாடி வந்த டி.ஆர். மகாலிங்கத்துக்கு பெரும் வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனால், இதில் வருத்தப்படாமல் தனது கவனத்தை நாடகங்களில் செலுத்தினார் இவர்.

  • கண்ணதாசன் அவர்களால் அழைக்கப்பட்டு ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் நடிக்க மீண்டும் சென்னைக்கு வந்தார். பலரின் ஆச்சரியத்திற்கிடையில் 1958இல் வெளியான ‘மாலையிட்ட மங்கை’ மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் இவருக்கு பட வாய்ப்புகளை வழங்கியது.

  • ‘மாலையிட்ட மங்கை’யில் இவர் பாடிய காதல் ரசம் சொட்டும் ‘செந்தமிழ் தேன்மொழியாள்… நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்’ எனும் பாடல் காலத்துக்கும் அழியாத புகழைத் தேடித் தந்தது.

  • 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டி.ஆர். மகாலிங்கத்தின் கடைசி திரைப்படம் 1977ல் வெளியான ‘ஸ்ரீ கிருஷ்ண லீலா’.

  • 1978 ஏப்ரல் 21ஆம் தேதி தனது 54 ஆம் வயதில் நாடகத்துக்கு புறப்பட்ட நிலையில் பெரும் புகழில் உள்ளபோதே மாரடைப்பு வந்து மறைந்தார் டி.ஆர். மகாலிங்கம்.

‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை…’ பாடலில் வரும் வரிகளான, ‘தமிழுக்குப் பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை’ என்று உச்சஸ்தாயியில் அவர் பாடுவதை ரசிப்பவர் இன்றும் உள்ளனர். இறுதிவரை செந்தமிழைப் பாடி தனக்கென அழியாப் புகழைத் தமிழ்த்திரை உலகில் பெற்று நிலைத்துள்ளார் டி.ஆர். மகாலிங்கம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com