தமிழ்நாட்டில் தொடர் மலையாளப் படங்களின் மாஸ் ஹிட்டிற்குப் பிறகு மலையாள இயக்குனர்களும் நடிகர்களும் தமிழ் சினிமாவில் அறிமுகமான வண்ணம் உள்ளனர். அந்தவகையில் தற்போது இரண்டு மலையாள பிரபல நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளனர்.
மலையாளப் படங்களில் அவர்களதுத் திறமைகளைக் கண்டதிலிருந்தே தமிழ் ரசிகர்கள் "அந்தச் செல்லங்கள அப்படியே தூக்கிட்டு வாங்கடா" என்பதுப் போன்ற கமென்ட்களைச் செய்து வந்தனர். அந்தக் கமென்ட்கள் யாருக்குக் கேட்டதோ இல்லையோ இரண்டு தமிழ் இயக்குனர்களுக்கு நன்றாகவே கேட்டுவிட்டது.
மோகன்லால், மம்மூட்டி, ப்ரித்விராஜ் எனப் பல மலையாள நடிகர்கள் தங்களதுத் திறமைகளால் தமிழ் சினிமாவிலும் கால் பதித்தனர். அவர்களுக்குப் பிறகு துல்கர் சல்மான், நிவின் பாலி, ஃபகத் ஃபாசில், டொவினோ தாமஸ், மாத்யூ தாமஸ் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்தவகையில் முதலாவதாகத் தற்போது ஸ்ரீநாத் பாஸி தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். இவர் ரேடியோ ஜாக்கியாக இருந்து மலையாள சினிமாவில் அறிமுகமாகி சின்னச் சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்தார். குறிப்பாக இவர் தேர்வு செய்யும் கதைகள் அனைத்துமே தனித்துவமாக இருக்கும். அண்ணன் தம்பி கதை, நண்பர்கள் கதை என குடும்பக் கதைகளையே இவர் அதிகம் தேர்வு செய்வார்.
பல மலையாளப் படங்களில் நடித்தாலும் 'கும்பலாங்கி நைட்ஸ்' படத்தின் மூலமே தமிழ் ரசிகர்களை ஈர்த்தார். அதன்மூலம் தமிழ் மக்கள் மனதுக்குள் நுழைந்த இவர் தற்போது வெளியான 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தின் மூலம் தமிழ் குழந்தைகளின் மனதில் கூட தனக்கான இடத்தைப் பிடித்துவிட்டார். 'குழிக்குள் விழுந்த சுபாஷ்' என்றால் தெரியாத யாருமே இல்லை.
அந்தவகையில் மஞ்சமெல் பாய்ஸ் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துவிட்டது. பா.ரஞ்சித் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஸ்ரீநாத் பாஸி நடிக்கவுள்ளார்.
இரண்டாவதாக மலையாள நடிகர் ஷேன் நிகம் தமிழ் சினிமா உலகில் தடம் பதிக்கவுள்ளார். இவர் இரண்டு மலையாளப் படங்களில் நடித்து மலையாள ரசிகர்களை ஈர்த்தப் பின் 'கும்பலாங்கி நைட்ஸ்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை ஈர்த்தார். கும்பலாங்கி நைட்ஸ் படம் ஒரு நான்கு அண்ணன் தம்பிகளின் கதையாகும்.
ஸ்ரீநாத் பாஸி, ஷேன் நிகம், சௌபின் சாகிர் ( மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் குட்டனாக நடித்தவர் ) மற்றும் மாத்யூ தாமஸ் ( லியோ படத்தில் விஜயின் மகனாக நடித்தவர் ) ஆகியோர் அண்ணன் தம்பிகளாக நடித்தார்கள். அந்த நான்கு பேருமே தற்போது சினிமாவில் சிறப்பாக வளம் வருகின்றனர்.
கும்பலாங்கி நைட்ஸ் படத்திற்குப் பிறகு ஷேன் நிகம் நடித்த RDX படம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. குறிப்பாக “நீல நிலவே” பாடல் பிரபலமாக இருந்தது. இவரும் மெட்ராஸ்காரன் என்றப் படத்தில் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.
இதனையடுத்து தேசிய விருது வாங்கிய மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, சித்தா இயக்குனர் அருண்குமார் எடுக்கும் படத்தில் விகரம், எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திறமைகளை வரவேற்கும் தமிழ் சினிமாவில் இன்னும் பல மலையாள நடிகர்கள் அறிமுகமாகிப் பட்டையை கிளப்புவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.