
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகனும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பேரனுமான இன்பநிதி விரைவில் வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார். இன்பநிதி திரையில் அறிமுகமாக உள்ள முதல் திரைப்படத்தை மாரி.செல்வராஜ் இயக்குவார் என்று தகவல்கள் வந்துள்ளன. உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படத்தையும் மாரி.செல்வராஜ் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்பநிதி அரசியல் பின்னணி மற்றும் சினிமா பின்னணி இரண்டும் சேர்ந்த குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை உதயநிதி ஸ்டாலின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸின் தலைமை பொறுப்பில் முதலில் இருந்தார். ஆரம்பத்தில் மற்ற நடிகர்களின் படத்தினை தயாரித்த அவர் ,பின்னர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
முதல் திரைப்படமே வெற்றி பெற்ற நிலையில் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் உதயநிதி நடித்து வந்தார். அதன் பின்னர் தீவிர அரசியலில் இறங்கிய அவர் சினிமாவில் நடிப்பதை குறைத்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மாரி.செல்வராஜ் இயக்கத்தில் நடித்த மாமன்னன் திரைப்படமே தனது இறுதி திரைப்படம் என்று அறிவித்து இருந்தார். மாமன்னன் திரைப்படம் வெளியான பிறகு சினிமாவில் இருந்து விலகியதுடன்,ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்தும் விலகினார்.
இன்பநிதியின் தாயான கிருத்திகா உதயநிதியும் இயக்குனராக பல படங்களை இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடித்த வணக்கம் சென்னை திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக கிருத்திகா உதயநிதி அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்த காளி திரைப்படத்தையும் , ரவிமோகன் நடித்த காதலிக்க நேரமில்லை படத்தையும் இயக்கி இருந்தார்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலின் விலகிய பின்னர் , இன்பநிதி அதன் தலைமை பொறுப்பை ஏற்றார். சமீபத்தில் வெளிவந்த தனுஷ் இயக்கி நடித்த இட்லிகடை திரைப்படத்தின் விநியோக உரிமையை பெற்றார். தற்போது அவர் திரையில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படத்தை இயக்கிய மாரி.செல்வராஜிடம் இன்பநிதியின் முதல் படத்தை இயக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. தற்போது மாரி.செல்வராஜ் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதன் பணிகள் முடிவடைந்த பின்னர் இன்பநிதி நடிக்கும் திரைப்படத்தின் வேலைகள் தொடங்க உள்ளது. தற்போது திரைப்படத்தில் நடிப்பதற்காக இன்பநிதி நடிப்பு பயிற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இன்பநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று தலைமுறைக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கின்றனர். உதயநிதி ஸ்டாலினின் தாத்தாவான முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் புகழ்பெற்ற திரைப்பட கதையாசிரியராக இருந்து பின்னர் அரசியலுக்கு வந்தவர்.இன்பநிதியின் தாத்தாவான தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் சில திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.