
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் பல்வேறு படங்கள் அவ்வப்போது வெளிவருகின்றன. 1990களில் புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் ஆர்.கே.செல்வமணி இயக்கி வெற்றி பெற்றார். தனியார் தொலைக்காட்சிகள் ஆதிக்கம் செலுத்திய பிறகு வா.கௌதமன் இயக்கிய உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான ஆட்டோ சங்கர், சந்தன காடு போன்ற தொலைக்காட்சி தொடர்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு தொடர்களும் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
2009 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சந்தனக்காடு தொடர் வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது காவல் துறையினரால் சித்திரவதைக்கு உள்ளான பழங்குடி மக்களின் மோசமான அனுபவத்தை பற்றி சொல்லியது. இந்த தொடரில் பாதிக்கப்பட்ட மக்களே நேரடியாக தொடரில் பேசினர். இதனால் சற்று பயந்த அதிகார வர்க்கத்தில் சிலர் இந்த தொடரை நிறுத்த நீதிமன்றத்தை நாடினர்.
நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது கர்நாடக, தமிழக அரசின் அதிரடி படையினர் நடத்திய கொடூரமான மனித உரிமை மீறல்கள் வெளிச்சத்திற்கு வர வா.கெளதமனின் இந்த தொடரும் ஒரு காரணம்.
கடந்த 2010 ஆம் ஆண்டு வா.கௌதமன் எழுத்தாளர் நீல பத்மநாபன் எழுதிய 'தலைமுறைகள்' நாவலை மையமாக கொண்டு மகிழ்ச்சி என்ற திரைப்படத்தை இயக்கி தானே ஹீரோவாக நடித்தார். பிறகு அரசியலில் இணைந்து இலங்கை தமிழர் பிரச்சனை, ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டார். தற்போது வா.கௌதமன் 'யூ டர்ன்' அடித்து மீண்டும் சினிமா பக்கம் வந்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக இருந்தவர் 'குரு'. கடந்த 2018 ஆம் ஆண்டு மறைந்த குரு, 'காடுவெட்டி குரு' என்று தனது தொண்டர்களால் அழைக்கப்பட்டார். இவரது பரபரப்பான அரசியல் நடவடிக்கைகளுக்காக தொண்டர்கள் இந்த பெயர் கொண்டு இவரை அழைத்தார்கள். இவரது மேடை பேச்சிற்காக, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இவரை சிறையில் வைத்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள்.
காடுவெட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படமான 'படையாண்ட மாவீரா' என்ற படத்தை இயக்கி தானே காடுவெட்டி குரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வா.கௌதமன். மிக விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது. இந்த சூழ்நிலையில் 'இந்த படம் காடுவெட்டி குருவை தவறாக சித்தரித்து உள்ளது' என்று கூறி சிலர் நீதிமன்றத்தின் படியை ஏறி உள்ளனர். 'இப்படம் குறிப்பிட்ட ஜாதிக்கு ஆதரவான படம்' என்கின்றனர் சிலர்.
இந்த படம் வெளியாகுமா? என்ற சந்தேகத்தை சிலர் முன் வைக்கும் போது "காடு வெட்டி குரு அவர்கள் தன் வாழ் நாளில் பல போராட்டங்களை நடத்தியவர். பல தடைகளை கடந்து தமிழக மக்களுக்கு பணியாற்றியவர். அவரது வாழ்க்கையே போராட்டமாக இருந்த போது அவரது படமும் சில போராட்டங்களை கடந்து வருவது இயல்பு தான். படம் கண்டிப்பாக வெளியாகும்" என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் வா.கெளதமன். 'படையாண்ட மாவீ ரா' படத்தின் தலைப்பே கம்பீரமாக இருக்கிறது படம் எப்படி இருக்கும்? வா.கெளதனுக்கு இன்னொரு சந்தனக்காடாக இப்படம் அமையுமா? சில நாட்களில் தெரிந்து விடும்.