வாழும் நடிகையர் திலகம்: நடிகை ரேவதி!

மண் வாசனை படத்தில் ரேவதி
மண் வாசனை படத்தில் ரேவதி

டிக்கத் தெரியாமல், படப்பிடிப்புத் தளத்திலேயே இயக்குநர் பாரதிராஜாவிடம் அடியும் திட்டும் வாங்கிய ஒரு நடிகை, அதன் பிறகு இந்தியாவின் மிகச் சிறந்த நடிகையரில் ஒருவராக வலம் வருகிறார் என்றால் அது வேறு யாருமல்ல, நடிகை ரேவதிதான். கடந்த நாற்பதாண்டுகளாக திரைத் துறையில் இருந்து வரும் நடிகை ரேவதி 1966ம் ஆண்டு, ஜூலை மாதம் 8ம் தேதி பிறந்தவர். ஆம், இன்று நடிகை ரேவதியின் 58வது பிறந்த நாள்.

கொச்சியை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ரேவதியின் இயற்பெயர் ஆஷா கேளுன்னி. இவர் பள்ளியில் படிக்கும் நாட்களிலேயே சாஸ்திரிய நடனம் பயின்றவர்.

ஒரு வார இதழுக்காக ஆஷா கேளுன்னி தனது மாடலிங் புகைப்படத்தைக் கொடுக்க, அதை  தனது டைரக்டர் பாணியில் இரண்டு கைகளின் வழியே பார்த்த  பாரதிராஜா, இதுதான் நாம் தேடிய 'மண் வாசனை' பெண் என முடிவு செய்து, தனது படத்தில் நடிக்க வைத்தார். 1983ம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய ‘மண்வாசனை’ படத்தில் ரேவதி என்ற பெயரோடு அறிமுகம் ஆனார் ஆஷா கேளுன்னி. இந்தப் படத்தில் இவரது வெகுளித்தனமான கிராமத்து நடிப்பும்,  படத்தில் இடம்பெறும்  'பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு' பாடலில் காட்டிய எக்ஸ்பிரஷனும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை இவருக்குத் தேடித் தந்தது.

தேவர் மகன் திரைப்படத்தில் கமலுடன் ரேவதி
தேவர் மகன் திரைப்படத்தில் கமலுடன் ரேவதி

இயக்குநர் மணிரத்னம் தனது திரைக்கதையில் சித்தரித்து வைத்திருந்த பெண்ணிற்கு நடிப்பில் உயிர் கொடுத்தவர் ரேவதி. மணிரத்னம் தனது கதாநாயகிகளை சுட்டிப் பெண்ணாகவும், கொஞ்சம் குழந்தைத்தனம் கொண்டவராகவும் தனது திரைப்படங்களில் காட்டுவார். இதை சரியாக, ‘மௌன ராகம்’ படத்தில் காட்டி இருப்பார் நடிகை ரேவதி.

ஒரு கைம்பெண்ணின் உணர்வுகளை நடிப்பிலும், நடனத்திலும் காட்டிய, ‘வைதேகி காத்திருந்தாள்’, துள்ளலுடன் ஒரு க்யூட் நடிப்பை தந்த, ‘புன்னகை மன்னன்’ என படத்திற்குப் படம் தனது வைரைட்டியாக நடிப்பைத் தந்து தமிழ் ரசிகர்களுக்கு ஒரு நடிப்பு விருந்து வைத்தார். நகைச்சுவை, சோகம், காதல் என  எப்படி வேண்டுமானாலும்  இயக்குநர்கள் நடிப்பை ரேவதியிடம் வாங்கிக்கொள்ளலாம்  என்பது போல, ரேவதி தனது சிறப்பான நடிப்பை படத்திற்குப் படம் தந்தார்.

ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் இயக்குநர்களாலும், தயாரிப்பாளர்களாலும் ரேவதியை  பயன்படுத்த முடியவில்லை. அதுதான் கிளாமர். கவர்ச்சியான நடிப்பு என்ற ஒரு விஷயத்தில் மட்டும் ரேவதி ஒதுங்கியே இருந்தார். 1980களின் காலகட்டத்தில் கதாநாயகிகளே கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்திருந்த காலம். ஆனால், ‘நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்’ என்பதில் உறுதியாக இருந்தார் நடிகை ரேவதி. பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோதும் கிளாமருக்கு நோ சொன்னவர் ரேவதி.

சிறந்த கலைஞர்களை மனம் திறந்து பாராட்டி ஊக்குவிப்பவர் நடிகர் கமல்ஹாசன். நாசர், ஊர்வசி வரிசையில் கமலின் குட் புக்கில் இருப்பவர் நடிகை ரேவதி. ‘தேவர் மகன்’ படத்தில் சிவாஜி, கமல், நாசர் நடிப்புக்கு இணையாக ரேவதியின் நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது. ‘தேவர் மகன்’ படத்தில் நடித்ததற்காக, ‘சிறந்த துணை நடிகை’க்கான தேசிய விருது இவருக்குக் கிடைத்தது.

ஜாக்பாட் திரைப்படத்தில் ஜோதிகாவுடன் ரேவதி
ஜாக்பாட் திரைப்படத்தில் ஜோதிகாவுடன் ரேவதி

நாசர், ரேவதி, ஊர்வசி இந்த மூவரின் மாறுபட்ட நடிப்புத்  திறமையை வெளிக்கொணர்வதற்காகவே, 'மகளிர் மட்டும்' என்ற திரைப்படத்தை 1994ல் தயாரித்தார் கமல். வேலைக்குப் போகும் பெண்களின் பிரச்னைகளை நகைச்சுவை பின்புலத்தில் சொன்ன இந்தப் படத்தில்  அனைவரையும் விட ஊர்வசியின் நடிப்பு பாராட்டப்பட்டது. ரேவதி கூட, ‘ஊர்வசிதான் மகளிர் மட்டும் படத்தில் சிறப்பாக நடித்தார்’ என்று பல இடங்களில் அவரைப் பாராட்டினார்.

1995ம் ஆண்டு நாசர் முதல் முறையாக, ‘அவதாரம்’ என்ற படத்தை இயக்கினார். ஒரு கூத்து கலைஞனாக  நடித்த நாசர், தனக்கு ஜோடியாக ரேவதி நடித்தால்தான் சரியாக இருக்கும் என உறுதியாக நம்பி, இந்தப் படத்தில் அவரை நடிக்க வைத்தார்.  இந்தப் படத்தில் கண் தெரியாத அப்பாவிப் பெண்ணாக நடித்திருப்பார் ரேவதி. இப்படம் வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும் ரேவதி, நாசர் இருவரின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது.

கடந்த 2019ம் ஆண்டு ‘ஜாக்பாட்’ என்ற நகைச்சுவை படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்தார் ரேவதி. ஜோதிகா, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ் இவர்களுடன் சேர்ந்து இந்தப் படத்தில் ஒரு காமெடி தர்பாரையே நடத்தி இருப்பார் ரேவதி. எந்தத் தலைமுறை கலைஞர்களானாலும், யாருடன் நடித்தாலும் தனக்கான முத்திரையை பதித்து விடுவார் ரேவதி. தனது தாய்மொழியான மலையாளத்தில் பல நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார் ரேவதி. தமிழை போலவே மலையாளத்திலும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மறைந்த நடிகை சாவித்திரிக்கு பிறகு, ‘நடிகையர் திலகம்’ என்ற பட்டத்திற்கு தகுதியானவர் நடிகை ரேவதி மட்டுமே என்பது பலரது கருத்து.

இதையும் படியுங்கள்:
6 மணிக்கு மேல் நடிக்க வர மாட்டேன் என்று கூறிவிட்டேன் – கே. ஆர். விஜயா!
மண் வாசனை படத்தில் ரேவதி

நடிப்பு மட்டுமல்லாமல், சில படங்களை இயக்கவும் செய்திருக்கிறார் ரேவதி. கடந்த 2002ம் ஆண்டு, 'மிதர் மை பிரண்ட்' என்ற ஆங்கிலப் படத்தை இயக்கினார். இந்தப் படத்திற்கு சிறந்த ஆங்கில மொழிப் படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. ‘பியார் மிலேங்கே’ என்ற ஹிந்தி படத்தையும் இவர் இயக்கி உள்ளார்.

பல்வேறு உயரங்களைத் தொட்ட நடிகை ரேவதி, கடந்த மாதம் யூ டியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தனது திருமணம் குறித்து வருத்தமாகப் பேசி உள்ளார். தான் சினிமாவில் பீக்கில் இருந்தபோது இருபது வயதிலேயே திருமணம் செய்து கொண்டதாகவும், இதனால் தனது சினிமா வாழ்வில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் சொல்லி உள்ளார். ‘இப்போது இருக்கும் நடிகர், நடிகைகளைப் போல தெளிவான சிந்தனை தனக்கு அப்போது இல்லை. திருமணம் தனது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு’ என்கிறார் ரேவதி. மற்றவர்களை சந்தோஷப்படுத்தும் கலைஞர்களுக்குள் ஒரு மீளாத சோகம் இருக்கும் என்பதற்கு ரேவதியும் விதிவிலக்கு அல்ல. அனைத்து  சோகங்களும் மறைந்து, நடிகை ரேவதி இன்னும் பல்வேறு சாதனைகளை புரிய அவரது இந்த இனிய பிறந்த நாளில் வாழ்த்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com