கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நீண்டகாலமாகப் பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன், சின்மய்க்கு ஆதரவாகப் பகிரங்கமாக குரல் கொடுத்துள்ளார். வைரமுத்து ஒரு நல்ல கவிஞர் என்பதை ஒப்புக்கொண்டாலும், அவர் ஒரு நல்ல மனிதர் அல்ல என்று கங்கை அமரன் விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் பேசிய கங்கை அமரன், "வைரமுத்து மிகச்சிறந்த கவிஞர் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அவர் நல்ல மனிதர் இல்லை. நாங்கள் எல்லாம் நண்பர்கள்தான். அவர் நண்பராக இருந்தார் என்பதால் அவர் செய்த தவறை நான் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியுமோ? ஒரு பெண்ணாக தனக்கு நடந்த பிரச்னைகளை பேசும் சின்மயிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்." என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.
மேலும், சின்மயியிடம் "வைரமுத்து எவ்வளவு நல்லவர். அவரை போய் நீங்கள் இப்படி சொல்லலாமா?" என்று கிண்டல் செய்து பேசுவது போலும் கங்கை அமரன் பேசியது, இந்த விவகாரத்தில் சின்மய்க்கு வலுவான ஆதரவை அளிப்பதாகக் கருதப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து திரைப்படத் துறையில் பலர் வெளிப்படையாகப் பேசத் தயங்கும் நிலையில், கங்கை அமரனின் இந்த துணிச்சலான கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
சின்மயி, கடந்த 2018-ஆம் ஆண்டு மீ டூ இயக்கத்தின் மூலம் வைரமுத்து மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சின்மயிக்கு தமிழ்த் திரையுலகில் பல தடைகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கங்கை அமரனின் இந்த ஆதரவு சின்மயிக்கு ஒரு பெரிய ஆறுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சில நாட்கள் முன்னர்தான் வைரமுத்து தனது பாடல்களை எந்த அனுமதியும் இன்றி அனைவரும் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த சம்பவம் மேலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.