இரண்டாண்டுகளுக்கு முன்பு, 'எஞ்சாய் எஞ்சாமி' என்ற ஆல்பம் மூலம் பிரபலமானவர் அறிவு. தற்போது, 'தெருக்குரல்' என்ற பெயரில், 'வள்ளியம்மாள் பேராண்டி' என்ற இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சோனி நிறுவனம் இந்த இசை ஆல்பத்தை வழங்குகிறது. இந்த ஆல்பத்தை இயக்குநர் பா.ரஞ்சித், முன்னாள் IAS அதிகாரி சிவகாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இந்த ஆல்பத்தில் தலித்திய, சமூக விடுதலை சிந்தனைகள் இடம் பெற்றுள்ளன. இந்த வெளியீட்டு நிகழ்வில் ‘என்னைக் கொன்று விடுவார்களோ என்றுகூட பயமாக இருக்கிறத‘ என்று அறிவு பேசியது, ஊடகங்கள் சிலவற்றில் பேசுபொருளாக மாறி உள்ளது.
வெற்றியின் இந்தப் பயத்திற்குக் காரணம் என்ன? என்பதை தெரிந்துகொள்ள அறிவை தொடர்பு கொண்டோம். பயத்தோடு இல்லாமல் தெளிவாக பதில் தருகிறார் அறிவு.
“இன்று நாடு இருக்கும் சூழ்நிலையில் யார் வேண்டுமானாலும் கொலை செய்யப்படலாம் என்ற நிலை நிலவுகிறது. இது எனக்கும் பொருந்தும் என்ற அர்த்தத்தில் சொன்னேன். நான் அரசியல் பேசவில்லை. மிக மோசமான வன்முறையை சினிமா காட்டுவதன் பிரதிபலிப்பும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
உங்கள் ஆசான் பா.ரஞ்சித் படங்களில் கூட இது போன்ற வன்முறை இருக்கிறதே?
பா.ரஞ்சித் படங்களில் இருக்கும் வன்முறை என்பது அடக்குமுறைக்கான எதிர்குரல் போன்றது. வெறும் பழிவாங்கல் தளத்தில் இருக்காது.
‘வள்ளியம்மா பேராண்டி’யில் வள்ளியம்மாள் யார்?
என் பாட்டிதான். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பின்பு இன்று வரை கூட விளிம்பு நிலை சமுதாயத்தை சேர்ந்த பெண்களில் பலர் தங்கள் உரிமைகளை போராடித்தான் பெற வேண்டியுள்ளது. என் பாட்டி வள்ளியம்மாள் பல போராட்டங்களைச் சந்தித்துள்ளார். என் பாட்டி எனக்கு சொன்ன பல விஷயங்கள் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. எனவே, சமூக விடுதலையைப் பற்றிப் பேசும் பாடலில் என் பாட்டியின் பெயரை வைத்தேன்.
இன்று விளிம்பு நிலை பெண்களின் நிலை மாறி உள்ளதே?
ஓரளவுக்கு மாற்றம் வந்துள்ளது என்பது உண்மைதான். கடந்து வந்த பாதையை மறந்து விட கூடாது என்பதே என் இசை ஆல்பத்தின் நோக்கம்.