
நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிப்படங்களில் நடித்து வரும் இவர் வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து அதன் மூலம் தனது நடிப்பு திறமையை நிரூபித்து வருகிறார்.
2012-ம் ஆண்டு நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக 'போடா போடி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவரது நடிப்பில் வெளிவந்த தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. ஆனாலும் தமிழை விட மற்ற மொழிகளில் பிஸியான நடிகையாக வரலட்சுமி வலம் வருகிறார்.
தற்போது 'ஃபீனிக்ஸ்' மற்றும் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.
கடந்தாண்டு மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் சினிமாவில் இருந்து ரஜினி, கமல், தனுஷ், நெப்போலியன், மாதவன் போன்ற நடிகர்கள் ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் கலக்கி வந்த நடிகை வரலட்சுமி சரத்குமார் இப்போ ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் சந்திரன் ருட்னம் இயக்கத்தில் பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸ் நடிக்கும் ‘RIZANA-A Caged Bird’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது. 2005ல் சவுதி அரேபியாவில் குழந்தையைக் கொன்றதற்காக தலை வெட்டப்பட்ட ரிஜானா நபீக் என்ற பெண்ணின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது. இத்திரைப்படத்தை இலங்கையைச் சேர்ந்த சுமதி ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படம் குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியதாவது, அகாடமி விருது வென்ற ஜெர்மி ஐயன்ஸுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. ஜெர்மி ஐயன்ஸ் ஹாலிவுட்டில் மட்டுமல்ல, உலக சினிமா ரசிகர்களாலும் மிகவும் மதிக்கப்படும் நடிகர், அவருடன் ஹாலிவுட்டில் அறிமுகமாவதன் மூலம் தனது கனவு நனவாகி விட்டதாக கூறினார். மேலும் சர்வதேச திரைப்படத் துறையைச் சேர்ந்த ஜாம்பவான்களுடன் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். வரலட்சுமிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தப்படம் தெற்காசிய மற்றும் சர்வதேச சினிமாவிற்கு இடையே ஒரு மைல்கல்லாக இருக்கும் எனப் படக்குழு உறுதியளிக்கிறது.