வரலட்சுமி சரத்குமாரின் திருமணக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், அதில் நடிகை ராதிகா டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தனது அடுத்தக்கட்ட வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்க உள்ளார். கடந்த 2012ம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான, 'போடா போடி' படத்தில் நடித்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றபோதிலும், அதைத் தொடர்ந்து வரலட்சுமிக்கு பட வாய்ப்புகள் பெரிதாகக் கிடைக்காமல் போனது. தமிழ்ப் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், மற்ற மொழி படங்களில் அவர் நடித்து வந்தார்.
தொடர்ந்து, அடுத்தடுத்து போல்ட் கதாபாத்திரங்களை எடுத்து நடித்து அசத்தி வந்தார். இவருக்கான வில்லி கதாபாத்திரம் பக்காவாகப் பொருந்த அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில், 14 வருடங்கள் பழகிய நண்பரும், தொழிலதிபருமான நிக்கோலய் சச்தேவ் என்பவரை தான் கரம் பிடிக்க உள்ளார். நாளை அவரது திருமணம் நடைபெறவுள்ள நிலையில், திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் தற்போது ஜோராக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அவரின் மெஹந்தி விசேஷம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
இதில் அவரது குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டனர். வரலட்சுமியின் திருமணக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட நடிகை ராதிகா சரத்குமார், தன்னுடைய மூத்த மகள் ரயானே மிதுன் உடன் குத்தாட்டம் போட்டுள்ளார். அப்போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ரயானே மிதுன், தனக்கு ஒரு டான்சிங் பார்ட்னர் கிடைத்துவிட்டதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தப் புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் வரலட்சுமி சரத்குமாருக்கு வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர். வரலட்சுமி - நிக்கோலாய் ஜோடியின் திருமணத்தைத் தொடர்ந்து பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் ஏற்பாடு செய்துள்ளனர். அதில் திரையுலகம் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர்கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல்வேறு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களுக்கு வரலட்சுமி சரத்குமார் நேரில் அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.