விமர்சனம்: வருணன் - காட் ஆப் வாட்டர் - 'வெயில் கொடுமையே பரவாயில்லை'
ரேட்டிங்(2 / 5)
இந்த வேகாத வெயிலில் என்ன படம் பார்க்கலாம் என யோசித்து கொண்டிருந்த போது வருணன் - காட் ஆப் வாட்டர் படத்தின் போஸ்டர் கண்ணில் பட்டது.
'ஆஹா பங்குனி வெயிலுக்கு குளிர்ச்சியா ஒரு படம் வந்திருக்கே' என்ற எண்ணத்துடன் தியேட்டர்க்குள் நுழைந்தேன். சரண்ராஜ் கம் பேக் தந்துள்ளதும் படம் பார்க்க ஒரு காரணம். ஜெயவேல் முருகன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
வடசென்னை பகுதியில் சரண்ராஜும், ராதாரவியும் தனித்தனியே தண்ணீர் கேன் பிசினஸ் செய்றாங்க. ராதாரவிகிட்ட ஹீரோ துஷ்யந்த் தும் அவர் நண்பர்களும் வேலை செய்றாங்க. காதலியை பார்க்கும் எண்ணத்தில் சரண்ராஜ் சப்ளை செய்யும் ஏரியாவுக்கு போய் அங்கே உள்ள காதலி வீட்டில் தண்ணி கேன் போடுறாங்க. இதனால சரண் ராஜ் ஆட்களுக்கும், ராதாரவி ஆட்களுக்கும் அடிதடி பிரச்சனையில் போய் முடியுது.
நடுவுல ஒரு போலீஸ்காரர் தன் பங்குக்கு நாட்டாமை பன்றாரு. கடைசியில் வழக்கம் போல் ஹீரோ யார் பக்கம் இருக்கிறாரோ அந்த பக்கம் வெற்றி கிடைக்குது. சரி பரவாயில்லை. கதையை சொன்ன விதத்தில் ஏதாவது ட்விஸ்ட் இருக்குமான்னு பார்த்தா அதுவும் இல்லை.
ஒரு கேரக்டர் அறிமுகம் ஆகும் போதே இந்த கேரக்டர் இப்படிதான் முடிய போகுதுன்றதை படம் பார்க்கும் சின்ன குழந்தை கூட சொல்ற மாதிரிதான் இருக்கு. படத்தின் தலைப்புக்கும், 'நீரின்றி அமையா உலகு' என்று படத்தில் வரும் வாசகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏதோ குழாய் அடி சண்டையை பார்த்த உணர்வுதான் இருக்கு (படத்தில் நிஜமாகவே குழாயடி சண்டை காட்சிகள் இருக்கு)
வருணன் தலைப்பை பார்த்து உள்ள போனா இந்த பங்குனி வெயிலுக்கு தலையில் மிளகாய் வைச்சு அரைச்ச மாதிரி இருக்கு. படத்தில் சரண் ராஜ் கேரக்டர் திக்கு வாய் மாதிரி வடிவமைச்சிருகாரு டைரக்டர். இது ஏன்னு புரியாத புதிரா இருக்கு. ராதாரவி அண்ணன் "அதை பண்ணிடுவேன், இதை பண்ணிடுவேன்னு" சொல்றதோட சரி எதையும் பெருசா பண்ணலை. ஹீரோவோட நண்பரும், நண்பனின் காதலியும் சுமாரா நடிச்சிருக்காரு. படத்தில் ஒரே ஆறுதலான விஷயம் படத்தோட கேமராதான். ஸ்ரீராம சந்தோஷின் கேமராவில் வட சென்னை தெருக்கள் தத்ரூபமா இருக்கு. பத்துவின் ஆர்ட்டைரக்ஷனில் சில பொருட்கள் தனித்துவமாக இருக்கு.
வருணன் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய படிக்ககுழுவினர் விழாவில் தண்ணீரின் அவசியம் பற்றி சொல்கிறது என்றார்கள். ஆனால் இந்த படம் தண்ணீர் கேனுக்காக நடக்கும் சண்டையை சுவாரஸ்யம் இல்லாமல் சொல்லி இருக்கிறது. நாங்களே கூட உங்களுக்கு கேன் தர்றோம். உங்க பஞ்சாயத்தை சீக்கிரம் முடிங்க என்று ரசிகர்கள் சொல்வதை கேட்க முடிந்தது.