விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படம் "வீர தீர சூரன்". அதிரடி சண்டைக்காட்சிகளும், விறுவிறுப்பான திரைக்கதையுமாக அமைந்த இந்த திரைப்படம், இப்போது ஓடிடி தளத்திலும் வெளியாகவிருக்கிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அருண்குமார் இயக்கிய இப்படத்தில் விக்ரம், எஸ் ஜே சூர்யா, துஷாரா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் ரிலீஸ் ஆவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஆம்! பல போராட்டங்களுக்கு பிறகே இப்படம் வெளியானது. காலை 9 மணிக்கு வெளிவர வேண்டிய படம் இரண்டு காட்சிகளை மிஸ் செய்து மாலை தான் வெளியானது. ஆனால், சியான் ரசிகர்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை பார்ப்போம் என்று சொல்லி பார்த்துவிட்டுத்தான் போனார்கள்.
பாக்ஸ் ஆபிசில் 66 கோடியை வசூலித்தது, அந்த அளவிற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அந்த காத்திருப்பை ஏமாற்றாமல் படமும் ஆடியன்ஸை திருப்திப்படுத்தியது. அதை அடுத்து முதல் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்ற தகவல் கசிந்துள்ளது.
அதாவது ஏப்ரல் 24ம் தேதி இப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது. தியேட்டரில் மிஸ் செய்த ரசிகர்கள் எப்போது ஓடிடியில் வரும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம் இந்த செய்தி மிகவும் புத்துணர்ச்சி அளித்துள்ளது.
இதற்கு முன்னதாக விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படம் எதிர்பார்த்த அளவு வசூலிக்கவில்லை. இதனால், சியான் ரசிகர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள்.
ஆனால், பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு அடுத்தடுத்து தொடர் தோல்வியை சந்தித்து விக்ரமிற்கு 'வீர தீர சூரன்' படம் ஓரளவிற்கு நல்ல வெற்றியை பெற்றுக்கொடுத்தது.
அதேபோல் இயக்குநர் அருண்குமாருக்கும் சித்தாவை தொடர்ந்து இந்தப் படமும் நல்ல வெற்றியை பெற்றுக்கொடுத்தது.