

தர்மேந்திரா என்றால் அனைவருக்கும் நியாபகம் வருவது அவரது வசீகரமான முகமும் , அவரது அஜாகுபாகுவான உடலமைப்பும் தான். மென்மையான நடிகர்கள் கொண்ட பாலிவுட்டில் அதிரடியான சண்டைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் .ஷோலே திரைப்படத்தின் மூலம் உலகின் பட்டி தொட்டி எல்லாம் அறிந்த நாயகனாக உருவெடுத்தவர். இந்தியாவின் முதல் 7 சூப்பர் ஸ்டார்களில் தர்மேந்திராவும் ஒருவராக குறிப்பிடப்படுகிறார்.
சமீப காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தர்மேந்திரா , அக்டோபர் 31 ஆம் தேதி மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சில தினங்கள் முன்பு அவர் இறந்ததாக வதந்திகள் பரவிய நிலையில் இன்று (நவ.24) அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 89. இன்னும் சில தினங்களில் 90 வது பிறந்த நாளை கொண்டாடவிருந்த நிலையில் இன்று காலமானார். அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது , இறுதிச் சடங்குகள் பவன் ஹான்ஸ் தகனக் கூடத்தில் செய்யப்படும்.
1935 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நர்சாலியில் தர்மேந்திரா பிறந்தார். முதலில் இவருக்கு தர்மேந்திர கேவல் கிரிஷன் தியோல் என்று பெயர் சூட்டப்பட்டது.1960 ஆண்டு வெளியான "இல் தில் பி தேரா ஹம் பி தேரே" திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.பின்னர்
'பூல் அவுர் பத்தர் , ஆயே தின் பஹர் கே , தரம் வீர் , சுப்கே சுப்கே , யம்லா பகலா தீவானா, தில்லகி , ஆசாத் போன்ற படங்கள் மூலம் பிரபலமான நடிகராக மாறினார்.யம்லா பகலா தீவானா என்ற பாடல் இவரது ஐகான் பாடலாக எப்போதும் உள்ளது. இறுதியாக அவர் இக்கிஸ் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
1970 களில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற இவர் , ஷோலே படத்தில் அமிதாப் பச்சனை இரண்டாம் கதாநாயகனாக நடிக்க வைக்க சிபாரிசு செய்தார். ஷோலே எல்லா காலங்களிலும் மிகப் பெரிய வெற்றியை பெற்ற இந்திய திரைப்படமாக உள்ளது. இந்த திரைப்படத்தில் உடன் நடித்த ஹேமா மாலினியை காதலித்து மணந்தார். அதற்கு முன்னர் பிரகாஷ் கவுர் என்ற மனைவியும் அவருக்கு இருந்தார்.
தனது முதல் மகன் சன்னி தியோல் பாலிவுட்டில் அறிமுகமானதை தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை தர்மேந்திரா குறைத்துக் கொண்டார். அவருக்கு மேலும் பாபி தியோல் , அபய் தியோல் என்ற மகன்களும் , இஷா தியோல் , அஹானா தியோல் என்ற மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் பாலிவுட் நடிகர்களாக உள்ளனர்.
தர்மேந்திராவின் மறைவை ஒட்டி பல பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் செய்தியை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இது பற்றி முன்னணி பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் தனது பதிவில் " இது ஒரு சகாப்தத்தின் முடிவு. ஒரு மகத்தான மெகா ஸ்டார்.பிரபலமான சினிமாவில் ஒரு ஹீரோவின் உருவகம். நம்பமுடியாத அழகானவர் ,அவர் இந்திய சினிமாவின் ஒரு உண்மையான ஜாம்பவான்.சினிமா வரலாற்றின் பக்கங்களில் வரையறுக்கப்பட்டவர் மற்றும் வளமாக இருப்பவர். பெரும்பாலும் அவர் சிறந்த மனிதர்.அவர் நம் துறையில் உள்ள அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்டார்" என்று அஞ்சலி செலுத்தி இருந்தார்.
மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன், ஷாருக்கான் , அமீர்கான், சல்மான் கான் , அபிஷேக் பச்சன், சலீம் கான், சஞ்சய் தத், ராஜ்குமார் சந்தோஷி உள்ளிட்ட பல திரைப்பட பிரபலங்கள் இறுதி அஞ்சலிக்காக பவன் ஹான்ஸ் தகன மையத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.