
55முதலிலேயே ஒரு விஷயத்தைச் சொல்லிவிடுவது நலம். விடாமுயற்சி பார்ப்பதற்கு முன் அதன் மூலக்கதையான பிரேக் டவுன் படத்தைப் பார்க்கும் சபலம் இருந்தால் கட்டுப்படுத்திக் கொள்ளவும். பார்த்தவுடன் பார்க்கலாம் என்ற நினைப்பையும் அழித்து விடவும். இரண்டிலும் ஏமாற்றம் தான் மிஞ்சும்.
விவாகரத்துக்குத் தயாரான காதல் ஜோடியான அர்ஜுன் (அஜீத்குமார்) கயல் (த்ரிஷா) தம்பதியர். பிரிவதற்கு முன் தனது பெற்றோர்கள் வீட்டில் வசிக்க விரும்புவதாகக் கூறும் த்ரிஷாவிடம் கடைசியாக ஒரு ஒன்பது மணி நேர சாலைப்பயணம் செல்லலாம் என்று அனுமதி வாங்குகிறார் அஜீத். ஆளரவமற்ற அஜர்பைஜான் சாலையில் பிரேக் டவுன் ஆகிவிடுகிறது இவர்கள் சென்ற கார். அவ்வழியே ஒரு ட்ரக்கில் வரும் ரெஜினா அர்ஜுன் ஜோடியுடன் த்ரிஷாவை அனுப்பி ஒரு 'டோ ட்ரக்' சர்வீஸை தொடர்பு கொண்டு அனுப்பச் சொல்கிறார். த்ரிஷாவும் அதில் ஏறிச் செல்கிறார். அவரை இறக்கி விடுவதாகச் சொன்ன இடத்தில் அவரில்லை. ஏற்றிச் சென்ற அர்ஜுனோ அஜீத் யாரென்றே தெரியாதென்று சாதிக்கிறார். தனது மனைவி கடத்தப்பட்டதை அறிந்த அஜீத் அவரைத் தேடி அலைகிறார். ஒரு கட்டத்தில் அர்ஜுனின் உண்மை முகம் தெரிய வருகிறது. பின்னர் என்ன ஆனது என்பது தான் கதை.
பிரேக் டவுன் தான் மூலக்கதை என்பது தெள்ளத் தெளிவாக முதல் முப்பது நிமிடங்களிலேயே தெரிந்து விடுகிறது. காட்சிக்குக் காட்சி மிகச் சிறிய வித்தியாசங்களுடன் அப்படியே தான் திரையில் இருக்கிறது. ஆங்கிலப் படத்தைப் பார்த்துத் தொலைத்த காரணத்தால் அடப்பாவிகளா என்று தான் பார்க்க வேண்டியிருக்கிறது. ஓரளவு தெளிவாகவே அதைத் தமிழ்ப்படத்திற்கு ஏற்றவாறு மாற்றியிருந்தாலும், அந்த லொகேஷன்களும் நடிகர்களும் படத்தை அந்நியமாகவே உணர வைக்கிறது. ஆனாலும் அஜர்பைஜான் சாலைகள் அருமை. அகன்ற திரையில் அதைப் பார்க்கப் பிரமிப்பாக இருக்கிறது. ரேஸ் டிரைவரான அஜீத்துக்கு வித விதமான கார் ஓட்டும் வேடம், கேட்க வேண்டுமா. புகுந்து விளையாடுகிறார்.
தனது இமேஜுக்கு சற்றும் முக்கியத்துவம் கொடுக்காமல் பார்ப்பவர்களிடமெல்லாம் அடி வாங்குகிறார். அவரைப் பூமர் என்று அழைக்கிறார்கள். வம்பு இழுப்பவர்களிடம் மன்னிப்பு கேட்கிறார். தனது மனைவி திரிஷா இன்னொரு ஆணுடன் திருமணம் தாண்டிய உறவில் இருப்பதை மௌனமாகக் கடந்து போகிறார். ஒரு மாஸ் ஹீரோ இதில் ஒன்றை கூட ஏற்றுக்கொள்ள மாட்டார். இது கதைக்குப் பலம் என்றாலும், ரசிகர்களுக்கும் படத்தின் ஓட்டத்திற்கும் பலவீனம். பெரிய ஹீரோ படங்களில் அவர்களுக்கு ஏற்ற சில மாஸ் காட்சிகளாவது வைப்பது வழக்கம். இதில் அப்படி ஓரேயொரு பலமான காட்சி கூட இல்லை. அதனாலேயே அஜீத் சாதாரணமாக அடித்தால் கூடக் கைதட்டி தங்கள் ஏமாற்றத்தை மறைத்துக் கொள்கின்றனர் ரசிகர்கள்.
படம் கதைக்குள் நுழைவதற்கே இடைவேளை வரை ஆகிவிடுவதால், அதன் பின் அஜீத் த்ரிஷாவைக் கண்டுபிடிக்கப் போடும் சண்டைகள் தான் இரண்டாம் பாதி முழுக்க. த்ரில்லர் படமாக இருந்து சண்டைப்படமாக மாறிவிடுவது இந்த இடத்தில் தான். ஆனாலும் ஒரு ஹம்மர் காருக்குள் நடக்கும் சண்டை அட்டகாசம். படத்திலேயே ஆகச் சிறந்த காட்சி இது தான். ஒளிப்பதிவு, இசை, சண்டைப்பயிற்சி, என அனைத்தும் தரமாக இணைந்திருப்பது இதில் தான். பறந்து பறந்து எல்லாம் அடிக்காமல் அடி கொடுத்து வாங்கி நடித்திருக்கிறார் அஜீத். எத்தனை அம்புகள் தைத்தாலும் கத்தியால் குத்தப்பட்டாலும் ஸ்டைலாக நடந்து அடுத்த இடத்திற்கு சென்று சண்டைபோடும்போது நான் இன்னும் ஒரு தமிழ் ஹீரோ தான் என்று நிரூபிக்கிறார்.
குறைந்த காட்சிகளே வந்தாலும் திரிஷா அழகாக இருக்கிறார். இவரைப் பார்க்கும்பொழுது ரெஜினா பரவாயில்லை. ஆனாலும் இவருக்கும் அர்ஜூனுக்குமான பிளாஷ் பாக் காட்சிகள் படத்தில் ஒட்டவே இல்லை. அவர்களுக்குக் கொடுக்கப்படும் பிம்பங்களுக்கும் அவர்கள் நடவடிக்கைக்கும் சம்பந்தமே இல்லை. ஆரவ் ஒரு அடியாளாக மட்டுமே அடையாளம் காட்டப்படுகிறார். ரம்யா சுப்பிரமணியனும் இருக்கிறார்.
அஜீத்தை இளமையாகக் காட்ட வேண்டும். அவரது பல கெட்டப்கள் வர வேண்டும் என்று எடுக்கப்பட்ட முதல் இருபது நிமிடங்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. எதற்காக ஆண்டுகளை மாற்றி மாற்றி அவர் கெட்டப் மாற்ற வேண்டும்? மகிழ் திருமேனிக்கே வெளிச்சம்!
லவடிகா பாடல் பக்கா தியேட்டர் மெட்டிரியல். டீ ஏஜிங் செய்து ஆளையே நசுக்கி காட்டும் படங்களுக்கு இடையில் இதில் அஜீத் அழகாக இருக்கிறார். (இல்லை ஏதேனும் பண்ணிவிட்டு மறைத்துவிட்டார்களா?) இந்த முதல் பதினைந்து நிமிடங்களைத் தூக்கி விட்டாலும் படத்தின் தொடர்ச்சி எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்பதே உண்மை. இவர்கள் விவாகரத்துக்கான காரணங்கள் ஆழமாகக் காட்டப்படாததால் எந்தவிதமான எமோஷனையும் கடத்தவில்லை. ட்விஸ்ட்கள் என்று நினைத்து இவர்கள் வைத்த திருப்பங்களும் அவ்வளவு சிறப்பாக இல்லை. ரெஜினா ஆடும் மைண்ட் கேம்களும் நம்பகத்தன்மையின்மை காரணமாக நீர்த்துப் போகிறது.
ரெஜினாவும் அர்ஜுனும் எதற்காக இந்த வேலைகளைச் செய்கிறார்கள் என்று கொடுக்கப்பட்ட கடைசிக் கட்ட விளக்கம் சுத்தமாக நம்பும்படி இல்லை. கிளைமாக்சில் மட்டுமல்லாமல் இன்னும் சில இடங்களிலும் வேட்டையாடு விளையாடு படத்தை நினைவூட்டுகிறது படம். ஒரு ஊரில் அத்தனை பேருமா கெட்டவர்களாக இருப்பார்கள் போலீஸ் உள்பட? இந்தப்படத்தைப் பார்க்கும்பொழுது அப்படித்தான் முடிவுக்கு வர முடியும்.
இந்தப் படத்தைத் தாங்கியவர்கள் என்று சொல்ல வேண்டும் என்றால் அஜீத்தைத் தவிர இன்னும் இருவர் உண்டு. அவர்கள் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷும், அனிருத்தும். படம் துவண்டு விழும் போதெல்லாம் நாங்க இருக்கோம் என்று படத்தைச் சற்றாவது தூக்கி நிறுத்தியதில் இவர்கள் பங்கும் கணிசமானது.
முதல் பத்தியில் சொன்னது போல் ப்ரேக் டவுன் படத்தைத் தழுவ முயற்சித்தவர்கள் தமிழுக்காக ஒரு மணி நேரத்தைக் கூட்டிப் படம் எடுத்ததில் கோட்டை விட்டுவிட்டார்கள். நீளம் ஒரு மிகப் பெரிய குறை. 'நான் ஆங்கிலப் படமே பார்ப்பதில்லை. ஒரு தமிழ்ப்படத்தை எப்படி ஆங்கிலப் படம்போல லொகேஷன்கள், சண்டைக்காட்சிகள், கார் துரத்தல்கள் என எடுக்க முடியும் என்று பார்ப்பதில் விருப்பம்' என்று சொல்லும் ரசிகர்கள் இதில் ரசிப்பதற்கு பல விஷயங்கள் உண்டு. கடவுளே அஜீத்தே என்று முதல் அரை மணி நேரம் கத்திக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அவர்கள் கொண்டாட வெகுசில மொமென்ட்களே படத்தில் உண்டு. குடும்பஸ்தன், மதகஜராஜா போன்ற குடும்பப்படங்கள் தான் எங்கள் சாய்ஸ் என்று நினைக்கும் பேமிலி ஆடியன்ஸ் சண்டை நல்லாருந்துச்சுப்பா என்று மட்டுமே வெளியே வரலாம்.
நூறு சேனல்களில் இயக்குனர் மகிழ் திருமேனி எந்தவிதமான எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அஜீத் சாருக்காக இந்தப் படத்திற்கு வாருங்கள் அனுபவியுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அஜீத்குமாருக்காக வந்தவர்களுக்கு ஆவரேஜாகவும் தல ரசிகர்களுக்கு "விடு. குட் பேட் அக்லில பாத்துக்கலாம்" என்று சொல்லும் வண்ணமும் வந்துள்ள படம் தான் விடாமுயற்சி.